Published : 15 Sep 2024 05:37 PM
Last Updated : 15 Sep 2024 05:37 PM
உதகை: பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வந்த நீலகிரி மாவட்ட ஆவின் நிறுவனம் அதிலிருந்து மீண்டு லாபம் ஈட்டத் தொடங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை நகரின் மையப் பகுதியில் சுமார் 12 ஏக்கர் பரப்பில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 1985-ம் ஆண்டு அப்போதைய குடியரசு தலைவர் ஜெயில் சிங் இந்த நிறுவனத்தை திறந்து வைத்தார். கடன் சுமையால் லாபத்தில் இயங்கி வந்த இந்த நிறுவனம் காலப்போக்கில் நஷ்டத்தை சந்தித்தது. நஷ்டத்திலிருந்து மீள முடியாததால், 350 நிரந்தர ஊழியர்களுடன் இயங்கி வந்த இந்த நிறுவனத்தில் தற்போது 50 ஊழியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.
ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலிகளாக 39 பேர் பணியாற்றி வருகின்றனர். ஊழியர்களின் ஊதியத்துக்கே வருவாய் கிடைக்காத நிலையில், ஆவின் நிறுவனம் நலிவடைந்தது. இந்நிலையில், இந்த நிறுவனத்தை காப்பாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டது. தேவையில்லாத செலவுகள் குறைப்பு, மின் சிக்கனம் மற்றும் விற்பனையை அதிகரித்ததால் கடந்த 6 மாதங்களாக படிப்படியாக ஆவின் நிறுவனம் லாபத்தை பார்த்து வருகிறது. இந்த மாதம் ரூ.5 லட்சம் லாபம் ஈட்டியுள்ளது.
இது குறித்து நீலகிரி மாவட்ட ஆவின் நிறுவன பொது மேலாளர் ஜெயராமன் கூறுகையில், “நீலகிரி ஆவின் நிறுவனத்தில் 15 ஆயிரம் அங்கத்தினர்கள் உள்ளனர். தினமும் 25 ஆயிரம் லிட்டர் பால் தேவைப்படுகிறது. இதில், 2510 பால் வழங்கும் உறுப்பினர்களிடமிருந்து நாள் ஒன்றுக்கு 11 ஆயிரத்து 600 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இத்துடன் கோவை ஒன்றியத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 11 ஆயிரத்து 800 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்து 800 லிட்டர் பால் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 6000 லிட்டர் பாலில் உபப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
நிறுவனத்தை நஷ்டத்திலிருந்து மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நஷ்டத்தில் இயங்கியதால் ஆவின் கட்டிடமே பொலிவிழந்து காணப்பட்டது. ஊழியர்கள் அனைவரின் பங்களிப்புடன் ரூ.2.5 லட்சம் செலவில் கட்டிடம் வண்ணம் பூசி பொலிவுப்படுத்தப்பட்டது. விற்பனையை அதிகரிக்க விற்பனை மேலாளர் நியமிக்கப்பட்டார். மேலும், பால் முகவர் மற்றும் விற்பனையகங்கள் முறைப்படுத்தப்பட்டன. டிஜிட்டல் வர்த்தத்துக்காக க்யூஆர் கோடு அறிமுகப்படுத்தினோம். இதனால், விற்பனை அதிகரித்தது.
மேலும், கோவையிலிருந்து ஒரு லிட்டர் பால் ரூ.70-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், திருப்பூரிலிருந்து பால் கொள்முதல் செய்து, அதை கோவைக்கு அனுப்பி பிராசஸ் செய்யப்பட்டதால், ஒரு லிட்டர் பாலின் கொள்முதல் விலை ரூ.40 ஆக குறைந்தது. இதனால், கொள்முதல் செலவும் குறைந்தது. இதன் காரணமாக நஷ்டத்தில் இயங்கி வந்த நிறுவனம் மெல்ல மீண்டு லாபம் ஈட்ட தொடங்கியுள்ளது.
கடந்த ஆறு மாதங்களாக லாபம் பெற்று வருகிறது. இதன் மூலம், ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவ பண பலன்களில் ரூ.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் சீருடை வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ.240-லிருந்து ரூ.429 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.” என்றார்.
புதிய கட்டிடத்தால் கடன் சுமை; லாபத்தை ஈட்டி வந்த ஆவின் நிறுவனம் 1985-ம் ஆண்டு மலைப் பகுதி மேம்பாட்டு திட்ட நிதி ரூ.4 கோடியில் புதிய வளாகத்துக்கு மாறியது. அந்த நிதி வட்டியுடன் சேர்ந்து ரூ.20 கோடியாக வளர்த்ததால், ஆவின் மீள முடியாத கடன் சுமையில் சிக்கியது. இந்நிலையில், தற்போது மூலதன கடனில் பெரும் பகுதி அடைத்து விட்டதாலும், வட்டியை தள்ளுபடி செய்ய அரசுக்கு ஆவின் நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்தால், ஆவின் நிறுவனம் நஷ்டத்திலிருந்து மீண்டு விடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...