Published : 13 Sep 2024 05:55 PM
Last Updated : 13 Sep 2024 05:55 PM
சென்னை: சென்னை மறைமலைநகர் கார் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்று ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னை அருகே மறைமலை நகரில் ஃபோர்டு கார் தொழிற்சாலை இயங்கி வந்தது. இங்கு உற்பத்தியாகும் கார்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. கடந்த 2022ம் ஆண்டு இந்த தொழிற்சாலை தனது இயக்கத்தை நிறுத்தியது. இந்நிலையில், முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், ஃபோர்டு நிறுவனத்தின் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். சென்னை மறைமலைநகரில் கார் உற்பத்தியை மீண்டும் துவக்க அவர் அழைப்பு விடுத்தார்.
இதன் தொடர்ச்சியாக, ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் சர்வதேச சந்தைப்படுத்துதல் பிரிவின் தலைவர் கே ஹார்ட் லிங்கிடுஇன் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஃபோர்டு கார் நிறுவனத்தை மீண்டும் இயக்குவதற்கான எங்கள் விருப்பத்தை தெரிவிக்கும் கடிதத்தை தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பித்துள்ளோம் என்பதை இன்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனான சந்திப்பு உள்பட தமிழக அரசுடன் பலமுறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஃபோர்டு ஆலைக்கான அவர்களின் தொடர்ச்சியான ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம். புதிய உலகச் சந்தைகளுக்குச் சேவை செய்வதற்காக தமிழ்நாட்டின் உற்பத்தி நிபுணத்துவத்தைப் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
மக்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், உற்பத்தி வகை மற்றும் மற்ற விவரங்களுடன் சரியான நேரத்தில் நாங்கள் கூடுதல் தகவல்களை பகிர்ந்து கொள்வோம். இந்த முடிவு சென்னையில் வளர்ந்து வரும் எங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் உலகளாவிய ஃபோர்டு பிசினஸ் சொல்யூஷன்ஸ் குழுவில் ஏற்கனவே 12,000 க்கும் அதிகமானோர் உள்ளனர். அடுத்த சில ஆண்டுகளில் மேலும் 2,500 முதல் 3,000 பணியாளர்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...