Published : 13 Sep 2024 09:46 AM
Last Updated : 13 Sep 2024 09:46 AM

‘310 மில்லியன் டாலர்கள் சுவிஸ் வங்கியில் முடக்கம்’ - ஹிண்டன்பர்க் தகவலை மறுக்கும் அதானி குழுமம்

சென்னை: பண மோசடி விவகாரத்தில் அதானி குழுமத்துடன் தொடர்புடைய பல்வேறு வங்கிக் கணக்குகளை சுவிஸ் அதிகாரிகள் முடக்கியுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது. இந்த கணக்குகளில் மொத்தமாக 310 மில்லியன் டாலர்கள் இருப்பதாகவும் ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இந்நிலையில், இதனை அதானி குழுமம் நிராகரித்துள்ளது.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது ஹிண்டன்பர்க். இதனை சுவிட்சர்லாந்து நாட்டில் இயங்கி வரும் ‘கோதம் சிட்டி’ என புலனாய்வு செய்தி வலைதளத்தில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளதாகவும் ஹிண்டன்பர்க் கூறியுள்ளது.

“கடந்த 2021-ல் அதானி குழுமத்தின் மீதான பண மோசடி மற்றும் சொத்து பத்திரங்கள் மோசடி விவகாரம் சார்ந்த விசாரணையின் ஒரு பகுதியாக பல சுவிஸ் வங்கிகளின் கணக்குகளில் உள்ள சுமார் 310 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியை சுவிஸ் அதிகாரிகள் முடக்கியுள்ளனர்” என ஹிண்டன்பர்க் அந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டை அதானி குழுமம் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் அடிப்படை ஆதாரமற்ற இந்த குற்றச்சாட்டை நாங்கள் நிராகரிக்கிறோம். அதானி குழுமம் சுவிஸ் நாட்டில் எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கையையும் எதிர்கொள்ளவில்லை. மேலும், எங்கள் நிறுவனத்தின் எந்தவொரு வங்கிக் கணக்கும் அதிகாரிகளால் முடக்கப்படவில்லை. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக எந்தவொரு விளக்கம் வேண்டியும் நாங்கள் நீதிமன்ற உத்தரவை பெறவில்லை. வெளிநாட்டு சட்ட திட்டங்களை ஏற்று நாங்கள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறோம்.

எங்கள் நிறுவனத்தின் நற்பெயர் மற்றும் சந்தை மதிப்பை சீர்குலைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றுமொரு ஜோடிக்கப்பட்ட முயற்சி இது என அதானி குழுமம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் அதானி குழுமத்துக்கும், பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான ‘செபி’யின் தலைவருக்கும் இடையிலான தொடர்பு குறித்து ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையை அடுத்து பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகள் சரிவை கண்டன.

அதே போல கடந்த 2023-ம் ஆண்டின் தொடக்கத்தில் ‘அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததாகவும், பங்குச் சந்தையில் முறைகேடுகள் செய்துள்ளதாகவும், அக்குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் உள்ளது’ என் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டது. அதன் பின்னர் தனது சொத்து மதிப்பில் சரிவை கண்டார் அதானி. அதேபோல அக்குழுமத்தின் பங்குகளும் அப்போது சரிவை கண்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x