Published : 11 Sep 2024 10:29 PM
Last Updated : 11 Sep 2024 10:29 PM
திண்டுக்கல்: கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து இன்று ஒரே நாளில் 30 டன் பூக்கள் கேரளாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. சனிக்கிழமை வரை தினமும் 30 டன் பூக்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளது.
திண்டுக்கல் சுற்றுப்பகுதி கிராமங்களில் அதிக பரப்பில் பூ சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் கொண்டுவரும் பூக்களை கொள்முதல் செய்ய திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களாக பூக்களின் விலை குறைந்து விற்பனையான நிலையில் தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா வியாபாரிகள் அதிக அளவில் பூக்களை வாங்கிச்செல்வதால் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, கேரளாவுக்கு வாடாமல்லி, செண்டுமல்லி, செவ்வந்தி, பட்ரோஸ், அரளி உள்ளிட்ட பல வண்ணப்பூக்கள் அத்தப்பூ கோலமிடுவதற்காக வாங்கிச்செல்லப்படுகிறது. இன்று (செப்.11) ஒரே நாளில் மட்டும் லாரிகளில் 30 டன் பூக்கள் கேரளாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. வாடாமல்லி ஒரு கிலோ கடந்தவாரம் வரை ரூ.15-க்கு விற்றது. தற்போது கேரளாவுக்கு அதிக அளவில் வாங்கிச் செல்வதால் ஒரு கிலோ ரூ.50 வரை விற்கப்படுகிறது. பட்ரோஸ் ஒரு கிலோ ரூ.30-க்கு விற்றது, தற்போது ரூ.70-க்கு விற்பனையாகிறது.
செவ்வந்தி, செண்டுமல்லி பூக்கள் கடந்த வாரம் வரை ஒரு கிலோ ரூ. 40-க்கு விற்பனையானது. தற்போது ரூ.70 வரை விற்பனையாகிறது. கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல வண்ணப்பூக்களால் தொடர்ந்து ஒரு வாரம் வீடுகளில் அத்தப்பூ கோலமிடுவர் என்பதால் தினமும் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து கேரளாவிற்கு பூக்கள் அனுப்பிவைக்கப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், “சனிக்கிழமை காலை வரை தினமும் 30 டன் அளவுக்கு இங்கிருந்து கேரளாவிற்கு பூக்கள் அனுப்ப ஆர்டர் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஓணம் நிறைவடைகிறது. அதுவரை பூக்களின் விலை கிராக்கியாகத்தான் இருக்கும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT