Published : 01 Jun 2018 09:24 AM
Last Updated : 01 Jun 2018 09:24 AM
ஒ
ரு யுகமே ஆனாலும் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் எதுவும் வந்துவிடாது என்பதில் அதீத நம்பிக்கை உடையவரா நீங்கள்?. அப்படியானால், நிச்சயம் இந்தப் புத்தகம் உங்களுக்குத்தான். ஆம், ஒரே ஒரு வார்த்தையை பயன்படுத்தி உங்களின் தொடர்ச்சியான தோல்விகளிலிருந்து உங்களை புதிய வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வதே இதன் நோக்கம்.
இது ஏதேனும் மேஜிக் சம்பந்தப்பட்ட புத்தகமா? என்கிற சந்தேகம் வரலாம். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, ஒரு முழு வருடத்திற்கு வெறும் ஒரு வார்த்தையை மையமாகக்கொண்டு, உங்கள் வாழ்க்கைச் செயல்பாடுகளை எளிமைப்படுத்த தேவையான யுக்திகளைச் சொல்கிறது “ஜான் கோர்டன்”, “டான் பிரிட்டோன்” மற்றும் “ஜிம்மி பேஜ்” ஆகியோரால் உருவாக்கப்பட்ட “ஒன் வோர்ட் தட் வில் சேஞ்ச் யுவர் லைப்” என்னும் இந்தப் புத்தகம். ஆம், ஒரே ஒரு வார்த்தையின் மூலமாக தெளிவு, ஆற்றல், ஆர்வம் மற்றும் வாழ்க்கை மாற்றம் ஆகியவற்றை உருவாக்க முடியும் என்கிறார்கள் ஆசிரியர்கள்.
இதுதாங்க அடிப்படை!
ஒவ்வொரு புத்தாண்டிற்கும் பதினெட்டு வயதிற்கு மேலுள்ள உலக மக்களில் 87 சதவீதம் பேர், சுமாராக 206 மில்லியன்களுக்கும் அதிகமானோர், தங்களுக்கான புதிய இலக்குகளை புத்தாண்டு தீர்மானங்களாக உருவாக்கிக்கொள்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. அவற்றில் ஐம்பது சதவீதத்தினர், ஜனவரி மாதம் முடிவதற்குள்ளாகவே தங்களது தீர்மானத்தில் தோல்வியடைகிறார்கள். ஆம், பாதியளவு மக்களே குறைந்தது ஒரு மாத காலம் வரை தாக்குப்பிடிக்கிறார்கள். அவற்றிலும் பெரும்பாலானவர்கள் அவ்வாண்டு கோடைக் காலத்துக்குள், அதாவது ஓரிரு மாதங்களில் தங்களது தீர்மானங்களை மறந்துவிடுகிறார்கள் என்கிறது அந்த ஆய்வு முடிவு.
இவ்வாறான தீர்மானங்கள் என்பவை வாழ்க்கைக்கு அவசியமான நல்ல விஷயங்களே. ஆனால் துரதிஷ்டவசமாக தவறாக அடித்தளமிடப்பட்டு, நமது இலக்குகளை நோக்கிய பயணம் விரைவில் தடம்புரண்டுவிடுகிறது என்பதே உண்மை. இலக்குகளை சரியாக திட்டமிடும் நாம், அதனை அடைவதற்கான பணிகளில் சரியாக செயல்படுவதில்லை. இது வேண்டும், இதுவாக ஆகப்போகிறேன், இதனை அடையப்போகிறேன் என்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், அதற்காக இவ்வாறு செயல்படுவேன் என்பதிலும் நிறையவே கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.
அதென்னங்க ஒரு வார்த்தை!
தோல்வியடைந்த தீர்மானங்கள் மற்றும் யதார்த்தமற்ற இலக்குகளுக்கு மாற்றே இந்த ஒரு வார்த்தை யுக்தி என்கிறார்கள் ஆசிரியர்கள். ஆம், இவ்வாறான பெரும் சுமைகளை கையாளாமல், வெறுமனே ஒரே ஒரு வார்த்தையை அந்த ஆண்டு முழுவதற்குமான நமது செயல்பாட்டிற்கு பயன்படுத்தி, எளிய வழியில் சிறப்பான வெற்றியைப் பெறலாம் என்பதே ஆசிரியர்களின் வாதம். ஒட்டுமொத்த வாழ்விற்குமான விஷயங்களை சொல்லும் திருக்குறள் கூட ஏழு எழுத்துக்கள். அப்படி இந்த ஒரு வார்த்தையில் என்ன இருக்கிறது என்கிற எண்ணம் வரத்தான் செய்யும்.
உண்மையில், பக்கம் பக்கமான திட்டங்கள், பத்தி பத்தியான கருத்துகள், வரி வரியான வழிகாட்டுதல்கள் ஆகியவற்றையெல்லாம் கடைபிடிப்பது அவ்வளவு எளிதானதல்ல. அவ்வளவு ஏன்?, அவற்றை நினைவில் வைத்துக்கொள்வதும் கூட கொஞ்சம் சிரமமே.
இப்போதெல்லாம் எதையும் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக சொல்வதே நல்லதாக இருக்கிறது. அதனால் இந்த ஒரு வார்த்தை முறை, அனைத்து வகைகளிலும் நமக்கு சிறப்பானது. மேலும், இது எளிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கைக்கான ரகசியமும் கூட.
சேவை, நோக்கம், கருணை, சரணாகதி, ஆற்றல் மற்றும் நல்லொழுக்கம் போன்ற வார்த்தைகள் வியக்கத்தக்க வழிகளில் நம்மை வடிவமைக்கக்கூடியவை. ஆன்மிகம், உடல்நலம், உணர்வுகள், உறவுமுறை, மனநலம் மற்றும் செல்வம் போன்ற வாழ்வின் அனைத்து பரிணாமங்களிலும் சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. இவ்வாறான ஒரு வார்த்தையை நாமும் ஆரத்தழுவி, நமக்குச் சொந்தமாக்கி, 365 நாட்களும் அதனுடனே வாழும்போது, நமது வாழ்க்கையில் மாற்றம் நிச்சயம்.
தயாராக இருங்க!
“தயாராவதில் தோல்வியடைந்தால், தோல்வியடைய தயாராகிறோம்” என்கிறார் “ஜான் வூடன்” அவர்கள். அதுபோலவே, “ஒரு மரத்தை வெட்ட எனக்கு எட்டு மணிநேரம் தேவைப்பட்டால், அதில் ஆறு மணிநேரத்தை எனது கோடாரியை கூர்மைப்படுத்த செலவிடுவேன்” என்கிறார் “ஆபிரகாம் லிங்கன்”. ஆம், முன்னேற்பாடு என்பது வெற்றிக்கான மிக முக்கிய மூலப்பொருள். எந்தவொரு செயல்பாட்டிற்கு முன்னரும் நம்மை தயார்படுத்திக்கொள்ளுதல் என்பது அவசியமான ஒன்று. நமக்கான ஒரு வார்த்தையை கண்டறிந்து ஏற்பதற்கு முன்னதாக, நமது மனதை அதற்கு தயார்படுத்துதல் முக்கியம். இப்போது ஒன்றும் காலதாமதமாகிவிடவில்லை என்கிற மனப்பாங்கினை வளர்த்துக்கொண்டு, எந்நேரமும் செயல்பாட்டில் இறங்கத் தயாராக இருக்க வேண்டும். நம்மிடமுள்ள கவனச் சிதறல்களை அறவே நீக்கி, புதிய செயலுக்கான உகந்த சூழலை நம் மனதில் உருவாக்கவேண்டும்.
நமக்கான ஒற்றை வார்த்தைக்கு தயாராவதின் அடுத்த படி, நாமே கேட்டுக்கொள்ளக்கூடிய வகையில் மூன்று கேள்விகளைக் கொடுத்துள்ளார்கள் ஆசிரியர்கள். முதல் கேள்வி, நமக்கு என்ன தேவை?. இது சாதாரணமான கேள்வியாக தோன்றினாலும், உண்மையாகவே நமக்கு வாழ்வில் தேவைப்படுவது என்ன என்பதில் சரியான தெளிவைக் கொடுக்கக்கூடியது இது. இதனோடு சேர்ந்து, வாழ்க்கையின் எந்தப் பகுதியில் நமக்கு அதிக மாற்றங்கள் தேவைப்படுகிறது? மற்றும் ஏன்? போன்ற கேள்விகளும், நம் மனதில் மறைந்துள்ள விஷயங்களின் மீது கவனத்தை ஏற்படுத்துகிறது.
இரண்டாவது கேள்வி, நம்முடைய வழியில் என்ன உள்ளது?. நம்முடைய செயல்பாட்டில் உள்ள தடைகளை கண்டறிய உதவுவதற்காக கேட்கப்படும் கேள்வி இது. மேலும், இது நம்முடைய தேவைகளைப் பெறுவதில் எது நம்மை தடுக்கிறது என்பதையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது. மூன்றாவது கேள்வி, தொடர்ந்து செயல்பட நமக்கு என்ன வேண்டும்?. கடந்தகால தவறுகள் மற்றும் வலிகளிலிருந்து நாம் தொடர்ந்து முன்னேறிசெல்லத் தேவையான விஷயங்கள் என்ன என்பதைக் கண்டறிய உதவுகிறது இக்கேள்வி. இந்த கேள்விகளுக்கான விடைகளுடன் சேர்த்து, நமக்கு சாத்தியப்படும் ஒற்றை வார்த்தைகளையும் நம்மால் பட்டியலிடமுடியும்.
சொந்த வார்த்தைங்க!
இப்போது நமக்கான தனிப்பட்ட வார்த்தைக்கு முழுவதுமாக தயாராகிவிட்டோம் அல்லவா!. நமக்கான ஒரு வருடத்திற்கான அந்த ஒத்தை வார்த்தை இப்போது ரெடி. அது அன்பு, மகிழ்ச்சி, பொறுமை, இரக்கம், புதுமை, பிரார்த்தனை, சுகாதாரம், பயிற்சி, நெகிழ்வு, பக்தி, நெருக்கம், ஒழுக்கம், புன்னகை, பொறுப்புணர்வு, வெற்றி, தைரியம், நேர்மறை, ஊக்கம், நிறைவு, தெளிவு, நேர்மை, வலிமை, நோக்கம், சமநிலை, கடமை, வாய்ப்பு மற்றும் நன்றி போன்ற வார்த்தைகளில் ஒன்றாக இருக்கலாம். குறிப்பிட்ட வருடத்திற்கான ஒற்றை வார்த்தையை மனதில் வைத்து, அதையொட்டிய அனைத்து செயல்பாடுகளிலும் கவனம் செலுத்தும்போது, அந்த வருட முடிவில் ஆச்சரியப்படத்தக்க வகையில் எதிர்பாராத பல விஷயங்களையும் நாம் கற்றிருப்போம் என்பது உறுதி.
புத்தகத்தின் முடிவில், ஒரு வார்த்தைக்கான செயல் திட்டத்தினையும் தெளிவாக வடிவமைத்து கொடுத்திருப்பது, இந்த புத்தகத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. ஒரே வார்த்தையில் இந்தப் புத்தகத்தைப்பற்றி சொல்லவேண்டுமானால், “அற்புதம்” எனலாம்.
p.krishnakumar@jsb.ac.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT