Published : 05 Sep 2024 05:53 PM
Last Updated : 05 Sep 2024 05:53 PM

விநாயகர் சதுர்த்தி: மதுரையில் தோட்டக் கலைத் துறை சார்பில் 'பசுமை விதை விநாயகர்' சிலைகள் விற்பனை

தோட்டக்கலைத்துறை சார்பில் விற்பனை செய்யப்படும் பசுமை விதை விநாயகர் சிலைகள்.

மதுரை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மதுரையில் ரசாயனம் கலக்காத சுற்றுச்சூழலுக்கு உகந்த 'பசுமை விதை விநாயகர்' சிலைகள் தோட்டக் கலைத் துறை சார்பில் விற்பனை செய்யப்படுகின்றன. அத்துடன் சிறிய அளவிலான மண் தொட்டி, மண்புழு உரம், கீரை விதைகள் அடங்கிய தொகுப்புடன் ரூ.125-க்கு இது விற்பனை செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் செப்.7-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. அதனை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ரசாயனம் கலக்காத, சூழக்கு உகந்த விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், நீர்நிலைகளில் கரைக்கவும் உயர் நீதிமன்றமும், தமிழக அரசும் அறிவுறுத்தியுள்ளது.

மண்புழு உரம், விதைகள், மண் தொட்டியுடன் தொகுப்புடன் கூடிய விநாயகர் சிலை

நீர் நிலைகளைப் பாதுகாக்கும் வகையில் ரசாயனம் கலக்காத விநாயகர் சிலைகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவுறுத்தலை மக்கள் கடைபிடிக்க ஏதுவாக 'பசுமை விதை விநாயகர்' சிலைகள் தோட்டக்கலைத்துறை சார்பில் விற்பனை செய்யப்படுகின்றன.

தோட்டக்கலைத்துறை சார்பில் இந்த 'பசுமை விதை விநாயகர்' சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த விதை விநாயகரை விநாயகர் சதுர்த்தி அன்று வணங்கி விட்டு மண் தொட்டியில் விதைப்பதால் அதிலுள்ள காய்கறி விதைகள் முளைத்து பலன் தரும். விதை உள்ள விநாயகர் சிலை, மண் தொட்டி, மண்புழு உரம், கீரை விதைகள் அடங்கிய தொகுப்பு ரூ.125-க்கு விற்கப்படுகிறது.

மதுரை சொக்கிகுளம் மற்றும் அண்ணாநகர் உழவர் சந்தைகளில் இந்த பசுமை விதை விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதாவிடம் மதுரை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் சி.பிரபா பசுமை விதை விநாயகர் சிலையை வழங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x