Published : 15 Jun 2018 09:19 AM
Last Updated : 15 Jun 2018 09:19 AM

வணிக நூலகம்: மேலாளர்களுக்கான திறன்கள்!

ரு மேலாளருக்குத் தேவையான அவசியமான திறன்கள் குறித்தும், பேராவலுடன் தங்களது பணியில் திறம்பட செயல்பட விரும்புபவர்களுக்காகவும் புகழ்பெற்ற “ஹார்வர்டு பிசினஸ் ரிவ்யூ” வெளியிட்டுள்ள புத்தகமே “ஹெச்பிஆர் மேனேஜர்ஸ் ஹேண்ட்புக்” என்னும் இந்தப் படைப்பு. மிகச்சிறந்த மேலாண்மை திறன்களுக்கான நவீன ஆராய்ச்சி மற்றும் சிந்தனைகளின் தொகுப்பு என்று இந்தப் புத்தகத்தைக் குறிப்பிடலாம்.

யாருக்கு உதவும்?

நீங்கள் ஒரு ஊக்கமுள்ள, திறமையான, எழுச்சியூட்டும் மேலாளராக இருக்க விரும்புகிறீர்கள் என்றால், உங்களுக்கானதுதான் இது என்ற முன்னுரையுடன் ஆரம்பிக்கின்றது இந்தப் புத்தகம். நீங்கள் ஏற்கனவே திறமை மிக்கதொரு மேலாளராக இருந்தீர்கள் என் றால் உங்களிடம் வேலைபார்க்கும் பணியாளர்களின் திறமையை முழுமையாக வெளிக்கொணர்வது எப்படி?, உங்கள் நிறுவனத்திலும் அதில் பணியாற்றுபவர்களிடமும் மாற்றங்களை கொண்டுவருவது எப்படி?, ஒரு தலைவனாய் உருவெடுப்பது எப்படி? போன்றவற்றைக் கற்றுத்தரும் என்ற உத்திரவாதத்தையும் ஆரம்பத்திலேயே தருகின்றது.

எப்படி உதவும்?

நான்கு உட்பிரிவுகளாக எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில் முதல் பிரிவு ஒரு தலைவனாகும் மனநிலைக்கு நம்மை தயார்படுத்திக்கொள்வது எப்படி என்பதையும், இரண்டாவது பகுதி ஒரு மேலாளராக நம்மை நாமே நிர்வகித்துக்கொள்வது எப்படி என்பதையும், மூன்றாவது பகுதி மேலாளரின் முக்கிய பணியான தனிநபர்களை நிர்வகிக்கும் திறன் வளர்ப்பு குறித்தும், நான்காவது பகுதி தனி நபர் மேலாண்மையைத்தாண்டி நிறுவனங்கள் வளரத்தேவையான குழுக்களை நிர்வகிப்பது எப்படி என்பதையும் மிகத்தெளிவாக விவரிக்கின்றது.

யார் மேலாளர்?

நிறுவனத்தில் ஒரு மேலாளரின் செயல்பாடு என்ன என்பதை முதலில் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். ஒரு பாஸாக உங்களுக்கு கீழே வேலைபார்க்கும் நபர்கள் உங்களிடம் என்ன எதிர்பார்க்கின்றனர் என்பதையும், உங்களுடைய பாஸ் உங்களிடம் எதை எதிர்பார்க்கின்றார் என்பதையும் தெளிவாகப் புரிந்துகொண்டு செயல்படுதலே இதில் முதல்படியாகும். இது தவிர உங்களுக்கென்ற எதிர்பார்ப்பு வேறு இதனிடையே இழையோடிக்கொண்டிருக்கும். மேலாளராக ஆவதற்கு முன்னால் இருக்கும் கார்ப்பரேட் வாழ்க்கை மிக சுலபமானது. உங்களுக்கு அளிக்கப்பட்ட வேலையை முடித்துவிட்டாலே போதுமானது. அந்த திறமைகள் மட்டுமே, நீங்கள் நல்லதொரு மேலாளராக செயல்பட போதுமானது இல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

புதிய மேலாளர்கள் தங்களுடைய பதவியே வேலைகளை பணியாளர்களிடம் இருந்து வாங்கிவிடும் என்ற நினைப்புடன் செயல்பட எத்தனிப்பார்கள். நாளடைவில் பதவி தரும் அதிகாரத்தை மட்டுமே வைத்துக்கொண்டு திறமையான காரியங்களை எல்லாம் சாதித்துவிட முடியாது என்பது அவர்களுக்கு புரியும். பதவி தரும் அதிகாரத்தை வைத்து அவர்களை வெறுமனே வேலை பார்க்க மட்டுமே வைக்கமுடியும். உங்களுடைய நடத்தை, தகுதி, வார்த்தை, நடவடிக்கை போன்றவற்றினால் அவர்கள் கவரப்படும்வகையில் நீங்கள் நடந்துகொண்டால் அவர்களாகவே வேலைகளை செய்வார்கள். எதையுமே நீங்கள் விலாவாரியாக சொல்லவேண்டியிருக்காது. எல்லா விஷயங்களும் கடனே என்று நடக்காமல் மிகவும் நேர்த்தியாகவும் நடக்கும்.

யார் தலைவர்?

உங்கள் பணியிடத்தில் உங்களுக்கு தரப்படும் பதவி உங்களை மேலாளர் என்று அழைக்கவைக்கின்றது. நீங்கள் தலைவனாகிறீர்களா? இல்லையா? என்பது உங்கள் கையிலேயே இருக்கின்றது. தலைவனாக இருக்க முயற்சிகளை செய்வது மட்டும் போதாது, தலைவனாக இருக்க வேண்டுமானால் தலைமைப்பண்புகளை நோக்கி பயணிக்கவும் வேண்டும் என்கின்றது இந்தப்புத்தகம். தலைமைப்பண்பு என்பது புத்திசாலித்தனம், சுற்றுப்புற சமூக உணர்ச்சி, நிர்வகிக்கும் பண்பு போன்ற 3 விஷயங்களை உள்ளடக்கியதா கும். ஒரு புத்திசாலியாக உங்களுக்கு உங்கள் துறை சார்ந்த விஷயங்களும், நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதும், எதை அவசியம் செய்யவேண்டும் என்பதும் நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும். அதே போல் நீண்ட கால அடிப்படையிலான நடவடிக்கைகள், முழுமையான தகவல்கள் இல்லாதபோதும் சிறந்த முடிவுகளை எடுக்கும் திறன், குழப்பத்தை கண்டு அஞ்சாமல் குழப்பத்தில் விரும்பி இறங்கி செயல்படும் திறன் போன்றவை உங்களுக்கு நிச்சயமாக இருக்கவேண்டும்.

சுற்றுப்புறம் சார்ந்த சமூக உணர்ச்சி என்பது உங்கள் நடவடிக்கைகள் மற்றவர்களை எந்த விதத்தில் பாதிக்கின்றது என்பதைப் முழுமையாக அறிந்துவைத்திருத்தல், அடுத்தவர்களின் தேவை, வலி, தியாகம் முதலியவற்றை உணர்ந்துகொள்ளும் திறன், என்னதான் குழப்பமாக இருக்கின்ற சூழலிலும் தெளிவாகவும் அதிராமலும் செயல்படும்தன்மையை கொண்டிருக்கும் திறன், உங்கள் எண்ணம், பேச்சு மற்றும் செயல் என்ற மூன்றும் ஒன்றுக்கொன்று இணைந்திருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ளும் திறன் போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.

நிர்வகிக்கும் பண்பு என்பதில் எப்போதும் உங்களுடைய பாஸ், உங்களுடைய சக மேலாளர்கள் மற்றும் உங்களுக்கு கீழ் பணியாற்றும் நபர்கள் போன்றவர்களிடம் இணைந்து சுமூகமாக பணியாற்றுவதில் சிறந்த திறனைக் கொண்டிருத்தல், பிரச்சினைகளை நடுநிலையுடன் பேசித் தீர்க்கும் திறனைக் கொண்டிருத்தல், நிறுவன நிர்வாகத்தில் பல்வேறு அடுக்குகளில் இருக்கும் சக்தி வாய்ந்த நபர்கள் எதைக்குறித்து என்ன நினைக்கின்றார்கள், எதை மனதில் கொண்டு செயலாற்றுகின்றர்கள் என்பது போன்ற சூட்சுமமான விஷயங்களை சுலபமாக புரிந்துகொள்ளும் திறன் போன்றவற்றை குறிக்கின்றது.

பங்களிப்பு என்ன?

ஒரு மேலாளராக ஆகும் போது இருக்கும் எமோஷனல் சவால்களின் பங்களிப்பு எக்கச்சக்கமானதாகும். புதியதாக பணி உயர்வு பெற்று கிளைமேலாளராக வந்த ஒருவரிடம் எப்படி இருக்கின்றது இந்த அனுபவம்? என்று கேட்டபோது, இது என்ன திடீரென ஒரு குழந்தைக்கு அப்பாவானதைப்போல் இருக்கின்றது என்றாராம். குழந்தை பிறந்தவுடன் அது குறித்த அத்தனை விஷயங்களையும் நாம் தெரிந்துவைத்துக் கொண்டிருக்க வேண்டியது எந்த அளவு கட்டாயமோ, அதேபோல்தான் மேலாளர் பொறுப்பும் என்றாராம் அவர். மற்றொருவரோ நான் ஏற்கனவே இருந்த பணியில் ஒரு சிங்கத்தைப்போல் இருந்தேன். மேலாளராகி கொஞ்ச காலகட்டத்திற்கு சிங்கங்களுக்கு இடையே சிக்கிக்கொண்ட மான்போல இருந்தது என்னுடைய நிலைமை என்றாராம். இவை எல்லாமே ஒரு மேலாளராய் நம்மீது நாம் வைக்கும் எதிர்பார்ப்புகளினால் ஏற்படும் நிலைமையே யாகும்.

என்ன செய்யவேண்டும்?

மேலாளராய் ஆனபின்னால் நம்முடைய டீமின் நம்பிக்கையையும் நம்மீதான நம்பகத்தன்மையையும் அதிகரிப்பதே நம்முடைய முதல் இலக்காக இருக்கின்றது. நம்முடைய நடத்தை, நம்முடைய தகுதி போன்றவற்றை சூசகமாக உணர்த்தினால் மட்டுமே நல்லதொரு தலைமைப்பண்பை நம்மால் வளர்த்தெடுக்கமுடியும். எப்படி நல்லதொரு தலைமைப்பண்பை வளர்த்தெடுப்பது என்பது குறித்த விரிவான விளக்கங்களையும் இந்தப்புத்தகம் சொல்கின்றது. மேலாளர் என்றால் சும்மாவா? பிரச்சினைகள் வரும், அதை எப்படி சமாளிக்கின்றோம்? பிரச்சினைகள் வரும்போது நம்முடைய சிந்தனை எந்த அளவுக்கு திடமானதாகவும் தீர்க்கமானதாகவும் இருக்கின்றது என்பதை வைத்தே நாம் நல்ல தலைமையாக இருப்போமா இல்லையா என்பது நிர்ணயமாகின்றது. இதற்கு எமோஷனல் இண்டெலிஜென்ஸ் திறனை வளர்த்துக்கொள்ளுதல் அவசியம். தங்களது நிறுவனத்தில் தனது பணியில் சிறந்த முத்திரை பதிக்க விரும்புபவர்கள் அனைவருக்கும், வாழ்நாள் முழுவதும் உபயோகித்துப் பயன்பெற வேண்டிய சிறந்த புத்தகம் இது.

p.krishnakumar@jsb.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x