Published : 02 Sep 2024 06:32 PM
Last Updated : 02 Sep 2024 06:32 PM
சிவகாசி: இந்தியாவில் காதி மற்றும் கிராம தொழில்களின் வர்த்தகம் ரூ.1.5 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. தமிழகத்தில் காதி விற்பனையில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக, சிவகாசியில் காதி பவன் கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணைய தலைவர் மனோஜ் குமார் தெரிவித்தார். மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ராமநாதபுரம் மத்திய சர்வோதய சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட சிவகாசி காதி பவன் விற்பனை நிலையத்தை மத்திய காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணைய தலைவர் மனோஜ் குமார் இன்று திறந்து வைத்தார்.
அதன்பின் அவர் அளித்த பேட்டி: ''மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பின் காதி மற்றும் கிராமத் தொழில்களின் வர்த்தகம் நாடு முழுவதும் வளர்ச்சி பெற்று, 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாகி உள்ளது. தற்போது இந்தியாவில் காதி மற்றும் கிராம தொழில்கள் வர்த்தகம் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
தமிழ்நாட்டில் காதி விற்பனை அதிகரித்து, கூடுதல் லாபம் ஈட்ட முடிவதால் தமிழகத்தில் காதி மற்றும் கிராம தொழில் வளர்ச்சிக்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். பாஜகவினர் கதர் ஆடையணிந்து காதி விற்பனை நிலைய பொருட்களை பயன்படுத்தி கிராமத் தொழிலில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூ.270.77 கோடி ரூபாய் விளிம்புத்தொகை வழங்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் நாடு முழுவதும் 9,583 புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டு 1,05,413 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய திட்டங்கள் நிறுவப்பட்டு உள்ளன. தமிழகத்தில் 74 காதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 2023 - 24 நிதியாண்டில் தமிழகத்தின் காதி உற்பத்தி ரூ.224.12 கோடியாக உள்ளது. இந்த காலகட்டத்தில் ரூ.397.63 கோடி அளவுக்கு தமிழகத்தில் காதி பொருட்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் காதி நிறுவனம் மூலம் 11,872 கைவினைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT