Published : 31 Aug 2024 03:45 PM
Last Updated : 31 Aug 2024 03:45 PM

செப்.4-ல் திருப்பூரில் சர்வதேச பின்னலாடை கண்காட்சி தொடக்கம்

திருப்பூரில் 3 நாள் சர்வதேச பின்னலாடை கண்காட்சி தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் தென் பிராந்திய தலைவர் ஏ.சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர். | படம்: இரா.கார்த்திகேயன்.

திருப்பூர்: வரும் 4-ம் தேதி திருப்பூரில் 3 நாள் சர்வதேச பின்னலாடை கண்காட்சி தொடங்குகிறது. இதன் மூலம், புவி மாசுபடாத ஆடை உற்பத்தி இலக்குகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக தென் பிராந்திய தலைவர் ஏ.சக்திவேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருப்பூர் பழங்கரையில் ஐ.கே.எஃப்.ஏ. வளாகத்தில் 51-வது இந்திய சர்வதேச பின்னலாடை கண்காட்சி வரும் 4-ம் தேதி துவங்கி, 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தை தக்கவைக்கவும், தொடர்ந்து மேம்படுத்தவும், 50 சர்வதேச பின்னலாடை கண்காட்சிகள் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் இணைந்து திருப்பூரில் நடத்தியுள்ளன. தற்போது 51-வது பின்னலாடை கண்காட்சி வரும் 4-ம் தேதி துவங்குகிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் தென் பிராந்திய தலைவர் ஏ.சக்திவேல் கூறியதாவது: '70 அரங்குகளில் கண்காட்சி நடைபெறுகிறது. திருப்பூரைச் சேர்ந்த முன்னணி ஏற்றுமதி நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன. ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதி நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன. இந்தக் கண்காட்சியை தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தொடங்கி வைக்கிறார். மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

வளம் குன்றா வளர்ச்சி என்ற அடிப்படையில், ஆடை உற்பத்தியில் இயற்கைக்கு கேடு உண்டாக்காத ஆடைகள் தயாரிப்பதற்கு தொடர்ந்து முக்கியத்துவம் தரும் வகையில், இந்த கண்காட்சி அமையும். வரும் 4, 5 மற்றும் 6-ம் தேதி என 3 நாட்கள் நடைபெறும் இந்த சர்வதேச பின்னலாடைக் கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். தொடக்க நாளில் கருத்தரங்குகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இனி, ஏற்றுமதியில் நூல் முதல் தயாரிப்பு வரை அனைத்தையும் கண்காணிக்கும் வகையில், 'டிஜிட்டல் பாஸ்போர்ட் புரோடெக்ட்' என்ற முறை வருகிறது. அதில், துணியில் இருக்கும் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால், துணி எந்தச் சூழலில் தயாராகிறது என்பது இறக்குமதி நாடுகளுக்கு தெரியவரும். அந்தளவுக்கு சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களை நடைமுறைப்படுத்த இந்த கண்காட்சிகள் பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தும்.

புவி மாசுபடாத ஆடை உற்பத்தியை இலக்காக கொண்டுள்ளோம். திருப்பூரில் கடந்த 4 மாதங்களாக ஏற்றுமதி அதிகரித்துள்ளது. செயற்கை இழை ஆடைகள் (பாலியெஸ்டர்) தற்போது அதிகளவில் கோரப்படுவதால், 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை, செயற்கை இழை ஆடைகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பின்னலாடை தொழிலை தொடர்ந்து இங்கேயே தக்க வைக்க பின்னலாடைத் துறைக்கு மின் கட்டணம் மற்றும் தொழிலாளர் ஊதிய மானியம் உள்ளிட்டவற்றை அறிவிக்க வேண்டும்.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம்.சுப்பிரமணியம் பேசுகையில், ''8 ஆயிரம் பையர்கள், 10 ஆயிரம் ஏற்றுமதியாளர்கள் மற்றும் 1,500 பையிங் ஏஜென்ட்டுகளுக்கு இந்த கண்காட்சி உதவியாக இருக்கும். 'க்ரீன் திருப்பூர் பிராண்ட் திருப்பூர்' என்பதை இலக்காகக் கொண்டு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

தற்போது வர்த்தகம் அதிகரித்து வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் 11. 8 சதவீதம் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. ரூ.33 ஆயிரம் கோடி வர்த்தகத்தை, நடப்பு ஆண்டுக்குள் ரூ.40 ஆயிரம் கோடியாக மாற்றுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்றார்.

இந்த சந்திப்பின் போது ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் இளங்கோவன், பொதுச்செயலாளர் திருக்குமரன், இணை செயலாளர் குமார் துரைசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x