Published : 30 Aug 2024 05:00 AM
Last Updated : 30 Aug 2024 05:00 AM

ஹுருன் இந்தியா பணக்காரர் பட்டியலில் அம்பானியை பின்னுக்குத் தள்ளிய அதானி

புதுடெல்லி: ஹுருன் இ்ந்தியா பணக்காரர் பட்டியலில் கவுதம் அதானி முதலிடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் இருந்த முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்துக்கு பின்தங்கியுள்ளார்.

2024-ம் ஆண்டுக்கான ஹுருன் இந்தியா பணக்காரர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில்,ரூ.11.6 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் கவுதம் அதானி (62) மற்றும் அவரது குடும்பத்தினர் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். இதன் மூலம் இதுவரை முதலிடத்தில் இருந்த முகேஷ் அம்பானி ஒரு படி கீழே இறங்கியுள்ளார். இரண்டாவது இடம்பிடித்துள்ள முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ரூ. 10.14 லட்சம் கோடியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் உள்ள தரவரிசைக் கணக்கீடுகள் அனைத்தும் 2024 ஜூலை 31 அன்றுகாணப்பட்ட செல்வத்தை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டவை என்று ஹுருன் இந்தியாவின் நிறுவனரும் மற்றும் தலைமை ஆராய்ச்சியாளருமான அனஸ் ரஹ்மான் ஜுனைத் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது: ஆசியாவின் செல்வத்தை உருவாக்கும் இயந்திரமாக இந்தியா வளர்ந்து வருகிறது. அதேநேரத்தில், சீனாவில் உள்ள பில்லியனர்கள் எண்ணிக்கை 25 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியாவில் அந்த எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரித்து 334 பில்லியனர்களை எட்டியுள்ளது.

அதானி, அம்பானியைத் தொடர்ந்து ஹெச்சிஎல் நிறுவனத்தின் ஷிவ்நாடார் மற்றும் அவரதுகுடும்பம் ரூ.3.14 லட்சம் கோடியுடன் மூன்றாவது இடத்திலும், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் சைரஸ் எஸ் பூனவாலா மற்றும் அவரது குடும்பம் ரூ.2.89 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் நான்காவது இடத்திலும் உள்ளன.

சன் பார்மசூட்டிகல் இன்டஸ்ட்ரீஸ் திலீப் ஷங்வி ரூ.2.49 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ஐந்தாவது இடத்திலும், குமார் மஙகளம் பிர்லா ரூ.2.35 லட்சம் கோடி சொத்துமதிப்புடன் ஆறாவது இடத்திலும் உள்ளனர்.

7- வது இடத்தில் கோபிசந்த் ஹிந்துஜா (ரூ.1,92,700 கோடி), 8-வதுஇடத்தில் ராதாகிஷன் தமனி (ரூ.1,90,900 கோடி), 9-வது இடத்தில் அசீம் பிரேம்ஜி (ரூ.1,90,700 கோடி), 10-வது இடத்தில் நீரஜ் பஜாஜ் (ரூ.1,62,800 கோடி) ஆகியோர் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் ஆறு நபர்கள் தொடர்ந்து இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் முதல் 10 இடங்களில் தங்களதுஇருப்பை உறுதிப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அனஸ் ரஹ்மான் ஜுனைத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x