Last Updated : 29 Aug, 2024 04:52 PM

 

Published : 29 Aug 2024 04:52 PM
Last Updated : 29 Aug 2024 04:52 PM

“எம்எஸ்எம்இ தொழில்முனைவோருக்காக கடந்த ஆண்டு ரூ.300 கோடி இழப்பை தமிழக அரசு ஏற்றுள்ளது” - அமைச்சர் தகவல்

கோவை யில் தொழில்முனைவோருக்கு கடனுதவி வழங்கல் மற்றும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிறுவனத்தினருடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது | படம்: ஜெ.மனோகரன்

கோவை: “மின்சாரத் துறையில் எம்எஸ்எம்இ தொழில்முனைவோருக்காக தமிழக அரசு கடந்தாண்டு ரூ.300 கோடி இழப்பை ஏற்றுள்ளது. இந்த ஆண்டும் ரூ.300 கோடி இழப்பை ஏற்க உள்ளது,” என தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.

கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள ‘கொடிசியா’ வர்த்தக கண்காட்சி வளாகத்தில் தொழில்முனைவோருக்கு கடனுதவி வழங்கல் மற்றும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிறுவனத்தினருடன் கலந்துரையாடல் கூட்டம் இன்று (ஆக.29) நடந்தது.இந்தக் கூட்டத்துக்கு தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார்.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் கோவை மண்டலத்தில் 46 தொழில்முனைவோருக்கு ரூ. 6 கோடியே 55 லட்சம் மானியத்துடன் ரூ. 30 கோடியே 81 லட்சம் கடனுதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ. 63 ஆயிரத்து 573 கோடிக்கு எம்எஸ்எம்இ துறையில் முதலீடுகள் பெறப்பட்டன. இவற்றின் மூலம் 2 லட்சத்து 51,660 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்காக 5,068 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த எட்டு மாதத்தில் 1,645 நிறுவனங்கள் ரூ.16,613 கோடி முதலீட்டில் உற்பத்தி பணிகளை தொடங்கியுள்ளன. இதன் மூலம் தற்போது வரை 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மற்ற நிறுவனங்கள் தொடங்க காலதாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதை தெரிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

கோவையை தொடர்ந்து பல மண்டலங்களில் இந்நிகழ்ச்சி நடத்தப்படும். திமுக அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் ஐந்து வகையான மானிய தொழில் திட்டஙகள் மூலம் ரூ. 9,061 கோடியே 58 லட்சம் மானியத்துடன் ரூ. 2,615 கோடியே 30 லட்சம் ரூபாய் வங்கி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. 30,324 தொழில்முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் எட்டு தொழிற்பேட்டைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 10 தொழிற்பேட்டைகள் அமைப்பதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. மின்கட்டண உயர்வுக்கு அதிமுக அரசே காரணம். இருப்பினும் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மின்கட்டணம் குறைவாக உள்ளது. கடந்த ஆட்சியில் உதய் மின் திட்டத்தின் கீழ் கையெழுத்திட்டதால் இப்போதைய மின்கட்டண உயர்வு தவிர்க்க முடியவில்லை.

மின்சாரத் துறையில் எம்எஸ்எம்இ தொழில்முனைவோருக்காக தமிழக அரசு கடந்தாண்டு ரூ.300 கோடி இழப்பை ஏற்றுள்ளது. இவ்வாண்டும் ரூ.300 கோடி இழப்பை ஏற்க உள்ளது. நிலைக் கட்டணம் தொடர்பான கோரிக்கை குறித்து முதல்வர் தமிழகம் திரும்பிய பின் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.தமிழகத்திலிருந்து வேறு மாநிலங்களுக்கு பெரிய அளவில் முதலீடுகள் செல்லவில்லை. தமிழக அரசுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்வதில்லை. இருப்பினும் தொழில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கோள்ளப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x