Published : 27 Aug 2024 03:11 PM
Last Updated : 27 Aug 2024 03:11 PM

இந்திய வங்கிகளில் அதிக கடன் பெறும் அதானி குழுமம்: மொத்த கடனில் 36% உள்நாட்டில் பெறப்பட்டது

மும்பை: அதானி குழுமம் இந்திய வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அந்நிறுவனத்தின் கடன் சார்ந்த தரவுகளும் உறுதி செய்கின்றன. அதிக வட்டி விகிதம் கொண்ட வெளிநாட்டுக் கடனை குறைக்கும் விதமாக அதானி குழுமம் இதனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த கடன் மதிப்பு ரூ.2.72 லட்சம் கோடி. அதில் ரூ.75,877 கோடியை உள்நாட்டில் நீண்ட கால கடன் அடிப்படையில் அதானி குழுமம் பெற்றுள்ளது. இது மொத்த கடனில் உள்நாட்டில் பெறப்பட்டுள்ள கடனின் பங்கு 36 சதவீதம்.

2022-23 நிதியாண்டில் அதானி குழுமம் உள்நாட்டில் பெற்ற கடன் ரூ.59,250 கோடி என இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இயங்கி வரும் பாரத் ஸ்டேட் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, யூனியன் வங்கி, கனரா வங்கி போன்ற அரசின் வங்கிகள் மற்றும் ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி போன்ற தனியார் வங்கிகளிடம் இருந்தும் அதானி குழுமம் கடன் பெற்றுள்ளது.

உலக மற்றும் உள்நாட்டு அளவில் அதானி குழுமம் பெற்றுள்ள கிரெடிட் ரேட்டிங் மேம்பாடு இதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. உதாரணமாக அதானி போர்டுக்கு (துறைமுகம்) ‘ஏஏஏ’ ரேட்டிங்கை ICRA முகமை வழங்கியுள்ளது. இதே போல அதானி பவர், அதானி எனர்ஜி சொலுஷன்ஸ், அதானி கிரீன் மற்றும் அதானி டோட்டல் கேஸ் போன்ற பிற நிறுவனங்களுக்கும் ரேட்டிங் மேம்படுத்தப்பட்டுள்ளது.

துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் அதானி குழுமம் ஈடுபட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x