Published : 24 Aug 2024 07:06 PM
Last Updated : 24 Aug 2024 07:06 PM
புதுடெல்லி: நாட்டின் வளர்ச்சிக்கு குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற 10-வது இந்திய சர்வதேச குறு,சிறு, நடுத்தர நிறுவன புத்தொழில் கண்காட்சி உச்சி மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய மத்திய தொழில் - வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், "குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை வெறும் நிறுவனமாகப் பார்க்கக் கூடாது. அவை மிகப் பெரிய சக்தியாக இருக்கின்றன. அவை லட்சக்கணக்கான நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கின்றன. தேச நிர்மாணத்தில் சிறந்த பங்களிப்பை அளிக்கின்றன.
புதுமையான சிந்தனைகளும், புதிய வழிகளும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவன தொழில்முனைவோரின் அடையாளமாக உள்ளன. பெரிய தொழில்கள் ஆயிரக்கணக்கான, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை உள்ளடக்கியது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் இல்லாமல் பெரிய நிறுவனங்கள் வெற்றி பெற முடியாது.
நாட்டின் சுற்றுலா, உள்கட்டமைப்பு வளர்ச்சியில் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தத் துறையின் வளர்ச்சி நாட்டிற்கு இன்றியமையாதது. 140 கோடி நாட்டு மக்களும் ஒன்றிணைந்து தேச நிர்மாணத்தில் பங்களிக்கும்போது, 2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். அனைவருக்கும் வளத்தை நம்மால் உறுதி செய்ய முடியும். தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் (QCO) மூலம் அரசு குறு, சிறு, நடுத்தர நிறுவன துறைக்கு ஆதரவளிக்கிறது" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT