Published : 24 Aug 2024 06:38 AM
Last Updated : 24 Aug 2024 06:38 AM
கோவை: புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் தமிழகம் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறது. கடந்த ஓராண்டில் சூரியஒளி மின் உற்பத்தியில் 1,000 மெகாவாட், காற்றாலை மின் உற்பத்தியில் 200 மெகாவாட் கூடுதலாக மின் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் காற்றாலை, சூரியஒளி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் துறை முக்கியப் பங்களிக்கிறது. தமிழகத்தில் சூரியஒளி மின் உற்பத்தியில் 6,000 மெகாவாட், காற்றாலை பிரிவில் 10,500மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இந்த துறையின் வளர்ச்சிக்கு கூடுதல் கவனம் செலுத்தி,மத்திய, மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் என்று தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு சூரியஒளி மின் உற்பத்தியாளர்கள் சங்கப் (டான்ஸ்பா) பொருளாளர் சாஸ்தா எம்.ராஜா கூறியதாவது: தமிழ்நாட்டில் ஆண்டு முழுவதும் சூரியஒளி மூலம் மின் உற்பத்தி செய்வதற்கான வசதி உள்ளது. தற்போது ஒரு மெகாவாட் திறன் கொண்ட, சூரியஒளி மின் உற்பத்தி கட்டமைப்பு வசதி ஏற்படுத்த ரூ.4 கோடி முதலீடு தேவைப்படும். அதன் மூலம் ஆண்டுக்கு 16 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
கடந்த ஆண்டு மொத்த கட்டமைப்பு வசதி 5,000 மெகாவாட்டாக இருந்த நிலையில், ஓராண்டில் 1,000 மெகாவாட் கட்டமைப்பு வசதி புதிதாக ஏற்படுத்தப்பட்டு, மொத்த கட்டமைப்பு 6,000 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், காற்றாலை துறையில் ஒரு மெகாவாட் மின் உற்பத்திக்கான கட்டமைப்பு வசதி ஏற்படுத்த ரூ.8 கோடி முதலீடு தேவைப்படும். அதன் மூலம் ஆண்டுக்கு 23 லட்சம்யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இவ்விரு துறைகளில் முதலீடுகள் அதிகரிக்க, மத்திய, மாநில அரசுகள் சிறந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கஸ்தூரி ரங்கையன் கூறும்போது, "ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை காற்றாலை சீசனாகும். தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்திக்கான கட்டமைப்பு கடந்த ஆண்டு 10,300 மெகாவாட்டாக இருந்தது. தற்போது 200மெகாவாட் கூடுதலாக அமைக்கப்பட்டு, மொத்த மின் உற்பத்தி கட்டமைப்பு 10,500 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.
காற்றாலை மின் உற்பத்தி குறைவு: வழக்கமாக ஆடி மாதத்தில் காற்றின் வேகம் அதிகம் இருக்கும். ஆனால், நடப்பாண்டு வழக்கத்தைவிட காற்று குறைந்து காணப்பட்டது. 2024 ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 20-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 6,600 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 7,700 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 1,100 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி குறைந்துள்ளது. காலநிலை மாற்றத்தின் தாக்கம் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT