Published : 23 Aug 2024 02:08 PM
Last Updated : 23 Aug 2024 02:08 PM

அனில் அம்பானி, 24 நிறுவனங்களுக்கு ‘செபி’ தடை - பின்னணி என்ன?

அனில் அம்பானி | கோப்புப் படம்

மும்பை: பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானி மற்றும் 24 நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) நடவடிக்கை எடுத்துள்ளது.

ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிதியை முறைகேடான முறையில் வேறு நிறுவனங்களுக்குத் திருப்பியது கண்டறியப்பட்டதை அடுத்து அனில் அம்பானி, மற்றும் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் முக்கிய அதிகாரிகள் உட்பட 24 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய 5 ஆண்டுகளுக்கு செபி தடை விதித்துள்ளது.

மேலும், இதற்காக அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்துள்ள செபி, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட எந்த ஒரு நிறுவனத்திலும் இயக்குநராகவோ அல்லது முக்கிய பொறுப்பாளராகவோ இருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு ஆறு மாதங்களுக்கு தடை விதித்துள்ள செபி, அந்த நிறுவனத்துக்கு ரூ.6 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.

அனில் அம்பானி, ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக உயர் அதிகாரிகளின் ஆதரவோடு, சொத்துகள், பணப்புழக்கம், நிகர மதிப்பு அல்லது வருவாய் எதுவும் இல்லாத நிறுவனங்களுக்கு நூற்றுக்கணக்கான கோடி மதிப்புள்ள கடன்கள் வழங்க அனுமதித்திருப்பதாகவும், இதில் நிதி மோசடி நடந்திருப்பதாகவும் செபி தனது 222 பக்க இறுதி உத்தரவில் குற்றம் சாட்டியுள்ளது.

ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் கடன் வாங்கியவர்களில் பெரும்பாலானோர் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டதாக தெரிவித்துள்ள செபி, இதனால் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம், தான் பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக மார்ச் 2018 இல் சுமார் ரூ.59.60 ஆக இருந்த ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு, மார்ச் 2020-ல் ரூ. 0.75 ஆக சரிந்தது என்றும், மோசடியின் அளவு தெளிவாகத் தெரிந்ததும், நிறுவனம் அதன் வளங்களை வெளியேற்றியதுமே இதற்குக் காரணம் என செபி கூறியுள்ளது.

இந்த மோசடி காரணமாக 9 லட்சத்துக்கும் அதிகமான பங்குதாரர்கள் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து அதிக இழப்புகளைச் சந்தித்துள்ளனர் என்றும் செபி தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் முக்கிய அதிகாரிகளான அமித் பாப்னா, ரவீந்திர சுதால்கர் மற்றும் பிங்கேஷ் ஆர் ஷா ஆகியோர் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட தடை விதித்துள்ள செபி, அமித் பாப்னாவுக்கு ரூ.27 கோடியும், ரவீந்திர சுதால்கருக்கு ரூ.26 கோடியும், பிங்கேஷ் ஆர் ஷாவுக்கு ரூ.21 கோடியும் அபராதம் விதித்துள்ளது.

மேலும், ரிலையன்ஸ் யூனிகார்ன் எண்டர்பிரைசஸ், ரிலையன்ஸ் எக்ஸ்சேஞ்ச் நெக்ஸ்ட் லிமிடெட், ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் கிளீன்ஜென் லிமிடெட், ரிலையன்ஸ் பிசினஸ் பிராட்காஸ்ட் நியூஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் பிக் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தலா ரூ.25 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x