Published : 22 Aug 2024 07:54 PM
Last Updated : 22 Aug 2024 07:54 PM
திருப்பூர்: பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் 7 சதவீத கூலி உயர்வு வழங்காததால், பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று (ஆக.22) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கி உள்ளனர்.
திருப்பூர் பவர் டேபிள் உரிமையாளர் சங்கத்தினர், பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்திடம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்கனவே செய்து கொண்ட கூலி உயர்வு ஒப்பந்தப்படி, நடப்பாண்டுக்கு பவர்டேபிள் உரிமையாளர்களுக்கு 7 சதவீதம் கூலி உயர்வை பனியன் உற்பத்தியாளர்கள் வழங்க வேண்டும். ஆனால் பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் 7 சதவீத கூலி உயர்வை வழங்காமல் உள்ளனர். இதனால் கூலி உயர்வு வழங்காத நிறுவனங்களில் இருந்து டெலிவரி எடுப்பதையும், டெலிவரி கொடுப்பதையும் நிறுத்தி விட்டு இன்று முதல் திருப்பூர் பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக திருப்பூர் பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் முருகேசன் கூறும்போது, ''திருப்பூர் மட்டுமின்றி அவிநாசி, சேவூர், நம்பியூர், புளியம்பட்டி, ஈரோடு, சேலம் என பல்வேறு இடங்களில் பவர்டேபிள் நிறுவனங்கள் உள்ளன. 900-க்கும் மேற்பட்ட பவர்டேபிள் நிறுவனங்கள் உரிய கூலி உயர்வு வழங்கப்படாததால், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. பனியன் உற்பத்தி நிறுவனங்கள் வழங்கும் துணியை தைத்து கொடுக்கும் இந்த பணியில், சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.
தற்போதைய போராட்டத்தின் காரணமாகவும், பனியன் உற்பத்தியாளர்களிடம் இருந்து துணிகளை வாங்குவதையும், தைத்து கொடுத்த பனியன் துணிகளை டெலிவரி கொடுப்பதையும் முற்றிலும் நிறுத்தி உள்ளோம். கூலி உயர்வு வழங்கினால் மட்டுமே மீண்டும் நிறுவனங்கள் செயல்படும்'' என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT