Last Updated : 24 May, 2018 04:36 PM

 

Published : 24 May 2018 04:36 PM
Last Updated : 24 May 2018 04:36 PM

வேதாந்தா அனில் அகர்வாலின் விரிவாக்கக் கனவுகளைத் தகர்த்த போராட்டங்கள்!

 

பில்லியனரான அனில் அகர்வால் அடிக்கடி பேசுவது என்னவெனில் தன் லண்டன் பங்குச்சந்தை பட்டியல் நிறுவனமான வேதாந்தா ரிசோர்ஸை குளோபல் ரிசோர்ஸ் என்ற ஏகபோக நிறுவனமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே.

ஏற்கெனவெ ஆங்கிலோ-அமெரிக்க சுரங்க நிறுவனம் உட்பட பெரிய சுரங்க நிறுவனங்களில் பங்குகளை வாங்கியுள்ள அனில் அகர்வால், ஆப்பிரிக்காவில் சுமார் 1 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் இந்தியாவில் பழைய இரும்பு, தட்டுமுட்டுச் சாமான்கள் என்ற காயலான்கடையில் தொடங்கி இன்று உலோகச் சந்தை கிங் என்ற அளவுக்கு வளர்ந்துள்ளது பல்வேறு கருத்துக்கள், விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் இங்கு கோர்ட் இவர் நிறுவனங்களுக்கு அபராத விதித்தது, அதிக முதலீட்டில் தொழிற்சாலை, சுரங்கம் மூடல்கள், அனைத்துக்கும் மேலாக சுற்றுச்சூழலை நாசம் செய்யும் இவரது தொழில்கள் மீதான பொதுமக்களின் கடும் எதிர்ப்பு இவரது விரிவாக்க கனவுகளை தகர்த்துள்ளது. இதனால் இவரது நிறுவனத்தின் மீதான மதிப்பீடு பாதிக்கப்பட்டுள்ளதாக வங்கிகளும் ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றனர்.

மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் செவ்வாயன்று தூத்துக்குடியில் எழுச்சியுற்றதையடுத்து போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு 12 பேர் பலியாகி பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டின் மீது கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையிலும் மாநில அரசு அங்கு போலீஸ்படையைக் குவித்து வருகிறது.

வேதாந்தா இது குறித்து ஒரு அறிக்கையில் சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்ததோடு தங்கள் ஊழியர்கள், தொழிற்சாலை, சுற்றியுள்ள மக்களின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல், மற்றும் மக்கள் திரளின் ஆரோக்கியப் பிரச்சினைகளை நிறுவனம் காதில் போட்டுக்கொள்ளவில்லை என்பதால் முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்வதில் எச்சரிக்கையுடன் இருப்பதால் அதன் வர்த்தகங்களின் நீண்டகால இருப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்கிறார் இன்கவர்ன் என்ற நிறுவனத்தின் ஸ்ரீராம் சுப்பிரமணியன்.

வேதாந்தாவில் 71.4% பங்குகள் வைத்துள்ள அகர்வால், புதனன்று பினான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் நிறுவனத்தை நடத்துவது பற்றி சந்தேகம் எழுப்பியுள்ளார்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் தன் ட்விட்டரில் அகர்வால் கூறியபோது இந்தியாவை உலோகச் சந்தையில் இறக்குமதிகளை நம்பியிருக்கும் நாடாக மாற்ற வெளிநாடுகள் சதி செய்வதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

“சில சுயநலங்கள் இந்தியாவை இறக்குமதியை நம்பியிருக்கும் நாடாக மாற்றவும், இந்தியாவை தங்கள் சந்தையாக மாற்றவும், கடினமாக இந்தியா சம்பாதித்த அன்னியச் செலாவணியை இறக்குமதியில் இழக்கவும் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகவும் செயல்படுகின்றன” என்று சாடியிருந்தார்.

தூத்துக்குடி ஆலையின் உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்கும் திட்டத்துக்கு கோர்ட் தடை விதித்துள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த ஆலையினால் சுற்றுச்சூழல் நாசமாகி மக்களிடம் நோயை உருவாக்குகிறது என்று கடும் எதிர்ப்புகளை நியாயமாகவே தெரிவித்து வருகின்றனர்.

பல முதலீட்டு வங்கிகள் பெயர் குறிப்பிடாமல் ராய்ட்டர்ஸிடம் தெரிவிக்கும் போது முதலீட்டாளர்கள் இன்னும் வேதாந்தாவில் முதலீடு செய்யத் தயங்குகின்றனர் என்றனர். 2003-ல் லண்டன் பங்குச்சந்தையில் லிஸ்ட் ஆன முதல் இந்திய நிறுவனமான வேதாந்தா திகழ்ந்தது. ஆனால் இந்த லிஸ்டிங்குக்குப் பிறகே லண்டனில் பதிவு செய்யப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்பான Foil Vedanta என்ற அமைப்பு லண்டனில் வேதாந்தாவின் லண்டன் ஆண்டுக் கூட்டத்தின் போது கடும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தின.

நார்வீஜியன் பென்ஷன் ஃபண்ட் என்ற அரசு நடத்தும் நிதியம் தன் முதலீட்டுப் பட்டியலிலிருந்து வேதாந்தாவை 2007-ம் ஆண்டு தவிர்த்தது. காரணம் இந்தியாவில் இதனால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் விவகாரங்களே. நார்வீஜியன் பென்ஷன் ஃபண்ட் அறரீதியான காரணங்களுக்காக ஸ்டெர்லைட்டிடமிருந்து விலகி நிற்க, இதே அற ரீதியான, தார்மீகக் காரணங்களுக்காக எடின்பர்க்கில் உள்ள முதலீட்டு நிறுவனமான மார்ட்டின் கர்ரியும் வேதாந்தாவில் இருந்த தன் பங்குகளை விற்றே விட்டது.

தூத்துக்குடி ஆலை சுற்றுச்சூழல் விதிகளைக் கடைபிடிக்கவில்லை என்பதால் 50 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டது, ஜூன் 6ம் தேதி வரை மூடியிருக்கும் என்றே தெரிகிறது.

1996-ல் தொடங்கிய ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஏகப்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2013-ல் உச்ச நீதிமன்றம் சுற்றுச்சூழல் விதிமீறல்களுக்காக வேதாந்தாவுக்கு 18 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்தது.

இதற்கு அடுத்த ஆண்டு ஒடிசாவின் டோங்க்ரியா கோந்த் பழங்குடியினர் புனிதமாகக் கருதும் நியாம்கிரி மலைகளில் பாக்சைட் சுரங்கங்களை அமைக்கும் முயற்சியில் எதிர்ப்புகளினால் தோல்வி அடைந்தது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அதிக விலையுள்ள பாக்சைட்டை ஒடிசாவில் உள்ள தன் அலுமினிய ஆலைத் தேவைக்கு இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது வேதாந்தா.

இந்த நாட்டிற்கென்று மக்களைக்காக்க சட்டத்திட்டங்கள், ஜனநாயக மரபுகள் இருக்கின்றன, அவை மதிக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்தப் போராட்டங்கள் முதலீட்டியவாதிகளுக்கு கற்றுத்தரும் பாடம் ஆகும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x