Published : 21 Aug 2024 04:20 PM
Last Updated : 21 Aug 2024 04:20 PM

அதானி குழும ஆதிக்கத்தை சிசிஐ போன்ற அமைப்புகள் கண்டுகொள்ளாதது ஏன்? - காங்கிரஸ்

புதுடெல்லி: அதானி குழுமத்தின் அனைத்து கையகப்படுத்தல் நடவடிக்கைகளுக்கும் ஒப்புதல் அளிக்கும் இந்தியப் போட்டிகள் ஆணையம் (சிசிஐ) குறித்து கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் கட்சி, இதுபோன்ற நிறுவனங்கள் ஏன் செயலற்ற நிலையில் இருக்கின்றன என்றும் சாடியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு நீண்ட பதிவு ஒன்றை வெளியேட்டுள்ளார். அதில், “முன்மொழியப்பட்டுள்ள ரிஸையன்ஸ் - டிஸ்னி இணைப்பு, போட்டிகளை அடக்கிவிடும் என்று இந்திய போட்டிகள் ஆணையம் கவலை தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. உயிரியல் ரீதியிலாக பிறக்காத பிரதமருக்கு பிடித்த மற்ற வணிகக் குழுக்கள் எப்படி நிறுவனங்களை கையகப்படுத்துகிறது, போட்டிகளை எப்படி குறைக்கிறது என்பதை பற்றி பேச இந்தியப் போட்டிகள் ஆணையத்துக்கு எப்படி தைரியம் வந்ததது என்பதைப் பற்றி பேச இது மிகவும் சரியான நேரம்.

ஒரு குறிப்பிட்ட வரம்பை மீறும் இணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்களுக்கு இந்தியப் போட்டிகள் ஆணையம் சட்டபூர்வமாக ஒப்புதல் அளிக்க வேண்டும். துறைமுகம், விமான நிலையம், மின்சாரம் மற்றும் சிமென்ட் போன்ற துறைகளில் ஏகபோகத்தை கட்டமைத்து வரும் நிலையிலும் இதுவரை அதானி குழுமத்தின் அனைத்து கையகப்படுத்தல்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சமீப ஆண்டுகளில் ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்துவதாக கூறப்பட்ட உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க சிசிஐ தயக்கம் காட்டவில்லை. ஆயினும் கூட, லக்னோ மற்றும் மங்களூரு விமான நிலையங்களில் பணிகள் செலுத்தும் பயனர் மேம்பாட்டுக் கட்டணத்தை ஐந்து மடங்கு அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நிதி ஆயோக் மற்றும் நிதி அமைச்சகத்தின் ஆட்சேபனைகள் இருந்த நிலையில், விதிகள் மாற்றப்பட்டு அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஆறு விமான நிலையங்களில் இந்த இரண்டு விமான நிலையங்களும் அடங்கும்.

இதேபோல் ஹரியாணா, ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் அதானி குழுமத்தின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளால் மின்சார கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது.

உயிரியல் ரீதியாக பிறக்காத பிரதமரின் நெருங்கிய நண்பர்கள் தொடர்பான பரிவர்த்தனைகளின் போது செபி உள்ளிட்ட இந்தியாவின் ஒழுங்குமுறை ஆணையங்கள் எப்படி மறைந்து போகின்றன? இந்த நண்பர், முக்கியமான உள்கட்டமைப்பு துறைகளில் ஏகபோகத்தை உருவாக்கி, நுகர்வோரின் இழப்பில் விலைகளை உயர்த்திய போதிலும் இந்த பொதுவான நிறுவனங்கள் அமைதியாக செயலிழந்து இருந்து விடுகின்றன?" என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அதானி குழுமத்துக்கு பயனளிக்கும் விதமாக பல்வேறு துறைகளில் ஏகபோக உரிமைகள் உருவாக்கப்படுவதாக மத்திய அரசை காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனங்களில் செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் பங்குகளை வைத்துள்ளதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டிய நிலையில், எதிர்க்கட்சிகள் தங்களின் குற்றச்சாட்டுகளை தீவிரப்படுத்தியுள்ளன.

ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டை செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் முற்றிலுமாக மறுத்துள்ளனர். அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் உள்நோக்கம் கொண்டவை. அதானி குழுமத்துக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுகளை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம். ஏற்கெனவே ஹிண்டன்பர்க் தெரிவித்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எங்களின் வெளிநாட்டு முதலீடுகள் வெளிப்படையானது. அதானி குழுமத்துக்கு தனிநபர்கள் உடன் வணிக உறவுகள் எதுவும் இல்லை" என்று தெரிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x