Published : 18 May 2018 08:20 AM
Last Updated : 18 May 2018 08:20 AM

வணிக நூலகம்: உறுதிப்படுத்தப்பட்ட வெற்றி!

றுதிமொழிகள் பொதுவாக நமது எண்ணங்களை மறுபரிசீலனை செய்வதாகவும், அதன் வடிவங்களை மாற்றியமைப்பதாகவும் உள்ளன. காலப்போக்கில் நமக்குள் தேங்கி நிற்கும் பழைய எண்ணங்களுக்குப் பதிலாக நமக்கான புதிய பாதைகளை உருவாக்கும் திறனுடையவை இவை. இவ்வாறான உறுதிமொழியையும் சக்திவாய்ந்த கொள்கையினையும் எவ்வாறு தொடர்ந்து நமது வாழ்வில் செயல்படுத்தி, வெற்றியையும் மகிழ்ச்சியினையும் வசப்படுத்துவது என்பதைக் கற்றுத்தருகிறது "ஜாக் கான்ஃபீல்ட்" அவர்களால் எழுதப்பட்ட "சக்சஸ் அஃபயர்மேசன்ஸ்" என்னும் இந்தப் புத்தகம்.

நமது பயங்களை வென்றெடுக்கவும், தடைகளை தகர்த்தெறியவும், கனவுகளை நிறைவேற்றிக்கொள்வதற்குமான விஷயங்களும் இதில் சொல்லப்பட்டுள்ளது. மேலும், தொழில், வேலை, கலை, அரசியல், விளையாட்டு மற்றும் அனைத்து வாழ்க்கை முறைகளுக்குமான, உலகின் சிறந்த சாதனையாளர்களால் செயல்படுத்தப்பட்டு வருகின்ற கோட்பாடுகளையும் கொடுத்துள்ளார் ஆசிரியர்.

பொறுப்புணர்வு!

இயல்பாகவே நமது வாழ்வில் அவ்வளவு எளிதில் எந்த பொறுப்பினையும் நாம் எடுத்துக்கொள்ள விரும்புவதில்லை. வேறு யாரிடமாவது பொறுப்பை கொடுத்துவிட்டு, பிரச்சனை எழும்போது மட்டும் அவர்களை குற்றம்சாற்ற நினைக்கிறோம் என்கிறார் "டொனால்ட் மில்லர்" என்னும் எழுத்தாளர். இங்குதான் நமக்கான சில உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வது அவசியமாகிறது. அதாவது என்னால் எளிதாக எனது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள முடியும், நான் இப்போது இருக்கும் நிலையிலிருந்து நான் விரும்புகின்ற நிலைக்கு என்னால் செல்ல முடியும், நம்பிக்கையுடன் சிறப்பான சூழலை உருவாக்கவும் மற்றும் எனக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்திக்கொள்ளவும் என்னால் முடியும், எனது எண்ணங்களை மாற்றவும் அதன்மூலம் சிறப்பானதொரு வெற்றியைப் பெறவும் முடியும் போன்ற மனோபாவங்களை வளர்த்துக்கொண்டு, நூறு சதவீத பொறுப்புணர்வுடன் செயலாற்ற வேண்டியது அவசியம்.

முடிவெடு, செயல்படு, பெற்றுவிடு!

வாழ்வில் நாம் எதை அடையவேண்டும் என்பதை மிகச்சரியாக தீர்மானம் செய்வதே நமது வெற்றிக்கான தவிர்க்கமுடியாத முதல்படி என்கிறார் எழுத்தாளரும் நடிகருமான "பென் ஸ்டீன்" அவர்கள். ஆம், நாம் என்னவாக ஆகவேண்டும், அதற்காக நாம் என்ன செய்யவேண்டும் மற்றும் அதனால் நாம் எதை பெறப்போகிறோம் என்பனவற்றை வரையறை செய்துகொள்வது மிகவும் அவசியம். துரதிர்ஷ்டவசமாக பலரும் இதனை சரிவர கையாளுவதில்லை என்கிறார் ஆசிரியர். இதனால், செயல்பாட்டில் வெகுதூரம் சென்றபின், நாம் ஏன் இங்கிருக்கிறோம்? நமது வாழ்க்கை குறிக்கோள் என்ன? என்பதில் பெருங்குழப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நமது வயது மற்றும் சூழ்நிலை ஆகியவையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. எந்த நிலையிலும் நம்மால் திறம்பட செயல்பட்டு வெற்றிபெற முடியும் என்ற உறுதிமொழியை மேற்கொள்ளவேண்டும்.

எல்லாமும் சாத்தியமே!

என்னால் எதுவும் செய்யமுடியாது என்று என்னிடம் யாராவது கூறினால், அதற்குமேல் அவர்களின் பேச்சை நான் கேட்பதில்லை என்கிறார் அமெரிக்க தடகள வீராங்கனையான "புளோரன்ஸ் க்ரிஃப்த் ஜாய்னர்" அவர்கள். நமது செயல்பாட்டினை குறைக்கின்ற நம்பிக்கைகள் மற்றும் எதிர்மறை கூற்றுகளை அறவே நீக்கிவிட்டு, சிறந்த எதிர்காலத்தை சாத்தியமாக்கும் புதிய நேர்மறை கூற்றுகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஒரு செயல்பாடு எவ்வாறு நடக்கப்போகிறது என்பது தெரியாவிட்டாலும் கூட, அனைத்து விஷயங்களும் சாத்தியமே என்பதில் நம்பிக்கை வைக்கவேண்டும். இதனுடன், எனது எதிர்பார்ப்புகள் நிறைவேறாத பழைய தருணங்களை எளிதில் கடந்து, இலக்குகளை அடைவதற்காக தினமும் உறுதியுடன் செயல்படுகிறேன் என்ற உறுதிமொழியும் வேண்டும் என்கிறார் ஆசிரியர்.

கற்பனைத்திறனே அனைத்தும்!

கற்பனைத்திறனே அனைத்தும், இதுவே நமது வாழ்க்கையின் வருகைகளுக்கான முன்னோட்டம் என்கிறார் புகழ்பெற்ற இயற்பியலாளரான "ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்" அவர்கள். என்ன வேண்டும் என்பதை சிந்தியுங்கள், எதை சிந்தித்தீர்களோ அதைப் பெறுங்கள் என்கிறார் ஆசிரியர். வண்ணமயமான, செல்வச்செழிப்பான, நமது இலக்குகள் அனைத்தும் நிறைவேறிய வளமானதொரு வாழ்க்கையை மனதில் காட்சிப்படுத்திப் பாருங்கள். மிகப்பெரிய அளவில் நமது வெற்றியை அதிகரிப்பதற்கு அதீத பயனுள்ள ஒரு யுக்தியாக இது இருக்கும். நமது உடலின் செயல்பாட்டிலிருந்து, நமது மூளையின் செயல்பாடானது மிகவும் வித்தியாசமானது. நமது மூளையைப் பொறுத்தவரை உண்மையில் ஒரு விஷயத்தை செய்வதற்கும், அதையே நம் மனதில் காட்சிப்படுத்துவதற்கும் பெரிதாக வேறுபாடு கிடையாது. இதன்மூலம் நமது ஆழ்மனது நம் செயல்பாடுகளுக்கான புதிய வழிகளை கண்டறியும் என்கிறார் ஆசிரியர்.

அழகான வீடு, அன்பான உறவுகள் மற்றும் அற்புதமான வாழ்க்கை என அனைத்தையும் கற்பனையில் கொண்டுவர உறுதியேற்போம். இதன்மூலம் நிஜத்தில் அனைத்தும் நடந்தேறுவதற்கான வழி பிறக்கும். அதுவே எதிர்மறை காட்சிகளாக, மன அழுத்தமான பணி, சாத்தியமற்ற செயல்கள் மற்றும் தோல்வியுற்ற உறவுமுறைகள் என காட்சிப்படுத்தும்போது, அவைகளும் நிஜத்தில் நடந்தேறும் என்பதையும் சேர்த்தே நினைவில் வைப்போம். நமது ஒவ்வொரு இலக்கும், நிறைவேறிவிட்டதாக மனதில் காட்சிப்படுத்த தினசரி நேரம் ஒதுக்கிக்கொள்ளுங்கள். வெற்றிபெறுவதற்கான முக்கிய விஷயமாக இது நிச்சயம் செயல்படும். சில உளவியலாளர்களின் கூற்றுப்படி, மனதில் ஒரு மணிநேர காட்சிப்படுத்தல் என்பது நமது உடலின் ஏழு மணிநேர செயல்பாட்டிற்கு சமம்.

மதிப்புமிக்க பரிசு!

கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் என்பவை சாம்பியன்களின் பிரேக்பாஸ்ட் என்கிறார்கள் புகழ்பெற்ற எழுத்தாளர்களான "கென் பிளன்ச்சர்டு" மற்றும் "ஸ்பென்சர் ஜான்சன்" ஆகியோர். நமது செயல்பாடு மற்றும் நம் மீதான மற்றவர்களின் கருத்துகளும் விமர்சனங்களும் நமக்கான மதிப்புமிக்க பரிசு என்பதை மனதில் பதியவிடுவோம். மற்றவர்களிடமிருந்து நான் பெறுகின்ற கருத்துகள் மற்றும் விமர்சனங்களை திறந்த மனதோடு வரவேற்று, மதித்து அதனை எனது செயல்பாடுகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்வேன் என்ற உறுதிமொழியினை மேற்கொள்ளவேண்டும். நேர்மறையான கருத்துக்களை மட்டுமே விரும்புவது மனித இயல்பே. எனினும், ஆக்கபூர்வமான எதிர்மறை கருத்துக்களும் நமது வெற்றிக்கு மிகவும் அவசியம். எதை நாம் சரியாக செய்கிறோம், எதை தவறாக செய்கிறோம் மற்றும் நமது செயலில் நாம் செய்யவேண்டிய மாற்றங்கள் என்ன ஆகியவற்றைக் கற்றுத்தருபவையாக கருத்துக்களும் விமர்சனங்களும் உள்ளன.

இவைகளும் உண்டு!

நம்மை ஊக்கப்படுத்தும் வகையிலான இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ளுதல், சிறப்பான தொடக்கம், அச்சங்களையும் சரியாக பயன்படுத்துதல், கேள்விகளை முன்வைத்தல், நிராகரிப்புக்கள் மீதான செயல்பாடு, புதிய கற்றலோடு கூடிய தொடர்ச்சியான முன்னேற்றம், பணிகளின் மீதான மதிப்பீடு, விடாப்பிடியான மனோபாவம், பெறப்பட்ட வெற்றிக்கான அங்கீகாரம், நமது உள்ளுணர்வுக்கான மதிப்பு, நமது ஆர்வம் மற்றும் உற்சாகத்தை தொடர்ந்து பராமரித்தல், நேர மேலாண்மை, கவனச்சிதறல்களை அறவே அகற்றுதல், தகுதியான லீடராக செயல்படுதல், மற்றவர்களைப்பற்றிய உயர்வான பேச்சு, அடுத்தவர்களின் செயல்பாட்டிற்கான பாராட்டுக்கள் ஆகியவற்றின் மீதான உறுதிமொழிகளை மேற்கொள்வதும் சிறப்பான வெற்றிக்கான விஷயங்களாக சொல்லப்பட்டுள்ளது.

நமக்கு என்ன வேண்டும் என்பதை சரியாக தீர்மானித்து, நம் மீது நம்பிக்கை வைத்து செயல்படும்போது, உறுதிபடுத்தப்பட்ட வெற்றி நம் உள்ளங்கையில்.

p.krishnakumar@jsb.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x