Published : 20 Aug 2024 05:43 PM
Last Updated : 20 Aug 2024 05:43 PM
கோவில்பட்டி: புதுடெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேஷனல் சிறுத்தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.பரமசிவம் தலைமையிலான நிர்வாகிகள் இன்று சந்தித்து மனு வழங்கினர்.
அந்த மனுவில், "எங்கள் சங்கத்தின் உறுப்பினர்களில் பெரும்பாலோர் குடிசைத் தொழில் வகையின் கீழ் உள்ளனர். மேலும், எங்கள் உறுப்பினர் அலகுகளில் சில 100 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாப்பான தீப்பெட்டிகளை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. தீப்பெட்டி தொழிலை அழிவிலிருந்து பாதுகாக்க, இந்தியாவுக்குள் பிளாஸ்டிக் லைட்டர்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்கான தங்கள் முயற்சிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆனாலும், பிளாஸ்டிக் லைட்டர்கள் விற்பனை குறையவில்லை. ஒரு லைட்டர் ரூ.20 என்ற குறைந்தப்பட்ச மதிப்பீட்டு வரியை அமல்படுத்திய போதிலும், இந்தியா முழுவதும் சிறிய கடைகளில் ஒரு பிளாஸ்டிக் லைட்டர் ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிளாஸ்டிக் லைட்டர்கள் நேபாள எல்லைகள் வழியாக கடத்தப்படுவதை எங்கள் உறுப்பினர்கள் கண்டறிந்தனர். இவை சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதும் கண்டறியப்பட்டது. ஒரு பெட்டிக்கு 1000 லைட்டர்கள் வாகனங்கள் மற்றும் மனிதர்கள் மூலமாக கடத்தப்படுகின்றன.
இந்த பிளாஸ்டிக் லைட்டர்கள் உதிரி பாகங்களாக கொண்டு வரப்பட்டு, இங்கே அதனை செய்கின்றனர். கடந்த 6 மாதங்களில் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு பிளாஸ்டிக் லைட்டர்கள் உதிரி பாகங்களாக இறக்குமதி செய்யப்படுவது அதிகரித்துள்ளது. இந்த இறக்குமதியால் அதிகளவு வரி ஏய்ப்பு உள்ளது. இது போன்ற சட்டவிரோத இறக்குமதிகள் மூலம் மத்திய அரசுக்கு ரூ.600 கோடி வரை வரி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், பிளாஸ்டிக் லைட்டர்கள் இறக்குமதி தீப்பெட்டி தொழிலையும் அழித்துவிடும்.
தீப்பெட்டி தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 7 லட்சம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளனர். பிளாஸ்டிக் லைட்டர்கள் இறக்குமதியால் தீப்பெட்டி தொழில் முழுமையாக மூடும் நிலையில் உள்ளது. எனவே, பிளாஸ்டிக் லைட்டர் உதிரிபாகங்கள் கடத்தல், வரி ஏய்ப்பு ஆகியவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்படும்" என்று மனுவில் கூறியுள்ளனர்.
முன்னதாக, மத்திய அரசின் ஜவுளி நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்தும் நேஷனல் சிறுத்தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மனு வழங்கினர். அப்போது பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம.சீனிவாசன், நேஷனல் சிறுத்தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க துணைத் தலைவர் ஆர்.கோபால்சாமி சாத்தூர் சங்கத் தலைவர் செ.லட்சுமணன், நிர்வாகக் குழு உறுப்பினர் பேராசிரியர் கணேஷ் ராம் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT