Published : 19 Aug 2024 04:46 AM
Last Updated : 19 Aug 2024 04:46 AM
மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி 2023 – 24 நிதி ஆண்டில், தன்னுடைய பணிக்கான ஊதியமாக ஒரு ரூபாய் கூட பெறவில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
2020-21 நிதி ஆண்டு கரோனா காலகட்டத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திலிருந்து ஊதியம் பெறப்போவதில்லை என்று முகேஷ் அம்பானி அறிவித்தார். அடுத்தடுத்த நிதி ஆண்டுகளிலும் அது தொடர்ந்தது. இந்நிலையில், தொடர்ந்து நான்காவது முறையாக 2023 - 24 நிதி ஆண்டிலும் அவர் ஊதியம் எதுவும் பெறவில்லை. அதேசமயம், நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகளுக்கான ஊதியம் கணிசமாக உயர்ந்துள்ளது.
அம்பானியின் வீட்டு சமையல்காரர்கள், காவல் ஆட்கள், வீட்டு பராமரிப்பு ஊழியர்கள் என அவரது வீட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கணிசமான சம்பளமும், பல்வேறு வசதிகளும் வழங்கப்படுகின்றன. கார் ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ.24 லட்சம் சம்பளமாக வழங்கப்படுவதாக 2017-ம் ஆண்டு வெளியான வீடியோ ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முகேஷ் அம்பானி 114 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராகவும் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 12-வது இடத்திலும் உள்ளார். அவரது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எரிசக்தி, பெட்ரோகெமிக்கல், டெக்ஸ்டைல், சில்லறை வணிகம், தொலைத் தொடர்பு என பல தளங்களில் செயல்பட்டு வருகிறது.
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. திருமணச் செலவு ரூ.5,000 கோடி ஆகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT