Published : 26 May 2018 09:27 AM
Last Updated : 26 May 2018 09:27 AM
ந
ல்ல முடிவுகள் எடுப்பதை அனுபவங்களிலிருந்து கற்கிறோம், அனுபவங்களை தவறான முடிவுகள் எடுப்பதால் பெறுகிறோம் என்பார்கள். தவறுகளிலிருந்து பாடம் பயில்கிறோம் என்பதற்காகவே சிலர் தப்பான முடிவுகள் எடுக்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. வாழ்க்கையில் மட்டுமல்ல, வியாபாரத்திலும் முடிவெடுப்பதன் முக்கியத்துவம் நாம் அறிந்ததே. பெறும் வெற்றிகள் முதல் செய்யும் தவறுகள் வரை, நழுவ விடும் வாய்ப்புகள் முதல் பிறர் நம்மை கழுவி ஊற்றுவது வரை அனைத்துக்கும் காரணம் நாம் எடுக்கும் அல்லது எடுக்கத் தவறும் முடிவுகள். முடிவெடுக்காமல் திணறும் போது அந்த திணறலே நாம் முடிவெடுப்பதை தள்ளிப் போட வைக்கிறது. எந்த முடிவெடுப்பது, எப்படி முடிவெடுப்பது என்று புரியாமல் மனம் தவித்து நம்மை முடிவெடுக்க முடியாமல் தடுக்கிறது.
பல கம்பெனிகளில் முடிவெடுக்கும் செயல்முறை நான்கு இடங்களில் சிக்கல்களை சந்தித்து செயல்பட முடியாமல் சிக்கி சின்னாபின்னமாகிறது என்கிறார்கள் `பெயின் அண்டு கோ’ என்ற உலகளாவிய நிர்வாக ஆலோசனை நிறுவனத்தைச் சேர்ந்த ‘பால் ராஜர்ஸ்’ மற்றும் ‘மார்சியா ஃப்ளென்கோ’. தங்கள் அனுபவங்களை, ஆய்வுகளை, தீர்வுகளை `ஹாவர்ட் பிசினஸ் ரெவ்யூ’வில் ‘Who has the D’ என்று கட்டுரையாக எழுதினார்கள். ‘D’ என்று அவர்கள் குறிப்பிடுவது ‘Decide’ அதாவது முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளவரை.
முடிவெடுப்பதில் உள்ள சிக்கல்களை தடுப்பதில் முக்கியமானது அதை எடுப்பவர்களில் யாராருக்கு என்ன பங்கு, எடுக்கப்படும் முடிவுகளுக்கு யார் பொறுப்பு என்பதை அனைவருக்கும் தெளிவாக்குவது என்கிறார்கள் ராஜர்ஸ் மற்றும் ஃப்ளென்கோ. முடிவெடுக்க தேவையான டேட்டா, உள்ளீடுகளை (Inputs) யார் அளிப்பது, அனைத்தையும் அலசி முடிவெடுக்கும் அதிகாரம் யாருடையது, இறுதியில் எடுத்த முடிவை சிரமேற்கொண்டு செய்து முடிக்கும் பொறுப்பு யாருடையது என்ற நான்கு விஷயங்களையும் தெளிவாக வரையறுக்கவேண்டும் என்கிறார்கள்.
சிறந்த கம்பெனிகள் தாங்கள் முடிவெடுக்கும் செயல்முறையை ஒரு வழக்கமாகவே மாற்றி அமைப்பதால் கம்பெனியின் துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பும் முடிவை சரியாய் செயல்படுத்தவும் முடிகிறது. முடிவெடுக்கும் வித்தையை முழுமையாய் புரிந்துகொள்ள அதை செழுமையாய் செய்து முடிக்க ராஜர்ஸும் ஃப்ளென்கோவும் பரிந்துரைக்கும் செயல்முறை தான் ரேபிட் (RAPID). ரேபிட் என்பது ஐந்து ஆங்கில சொற்களின் முதல் எழுத்துக்களின் தொகுப்பு. பரிந்துரைப்பது (Recommend), ஒப்புக்கொள்வது (Agree), செயல்படுத்துவது (Perform), உள்ளீடு வழங்குவது (Input), முடிவெடுப்பது (Decide). இம்முறையை நூற்றுக்கணக்கான கம்பெனிகளுக்கு கற்று தந்து அவர்கள் தெளிவாக முடிவெடுக்க வைத்திருக்கிறார்கள் இந்த இரட்டையர்கள். முடிவெடுப்பதில் முக்கியமான பங்கு வகிபவர்களை, அவர்கள் செயல்பட வேண்டிய முறையை, அவர்களுக்கு தேவையான தகுதிகளை விளக்குகிறது ரேபிட் முறை.
பரிந்துரைப்பது
முடிவெடுக்க தேவையான முதல் படி. இவர்கள் முடிவெடுக்க தேவையான செய்திகள், டேட்டா, உள்ளீடுகளைப் பெற்று அதை செயல் திட்டமாக்கும் பொறுப்புள்ளவர்கள். திட்டம் தீட்ட இவர்கள் டேட்டா மற்றும் உள்ளீட்டை தருபவர்களிடம் கலந்தாலோசித்து முடிவெடுக்கும் செயல்முறையைச் சேர்ந்த அனைவரையும் தங்கள் பரிந்துரைகளை ஏற்கவைக்கும் பொறுப்புள்ளவர்கள். இவர்கள் பொது அறிவும், பகுப்பாய்வு உணர்வும் கொண்டவர்களாக இருப்பது அவசியம். அதோடு நிர்வாக அறிவும், சமயோஜித புத்தியும், நிர்வாக சமத்தானவர்களாக இருப்பதும் நலம்.
ஒப்புக்கொள்வது
இப்பங்கு வகிப்பவர்கள் முடிவெடுக்க பரிந்துரைக்கப்படும் திட்டத்தை ஒப்புக் கொள்ளும் அல்லது அதை ஒதுக்கித் தள்ளும் அதிகாரம் உள்ளவர்கள். திட்டத்தை ஒப்புக்கொண்டால் ஓகே. விஷயம் அதோடு முடிந்தது. ஒதுக்கித்தள்ளும் போது தான் இவர்களுக்கும் திட்டத்தை பரிந்துரைப்பவர்களுக்கும் பிரச்சினை பிறக்கிறது. பரிந்துரைக்கப்படும் திட்டம் நிராகரிப்பட்டால் பரிந்துரைப்பவர்கள் புதிய திட்டம் ஒன்றை தயாரித்து தரவேண்டும்.
ஒரு வேளை அதுவும் ஒப்புக்கொள்ளப்படாவிட்டால் முடிவெடுக்கும் பொறுப்பில் உள்ள ‘D’க்கு பிரச்சினை எடுத்துச் செல்லப்படவேண்டும். அவர் தலையிட்டு சரியான திட்டம் தீட்டப்பட்டு முடிவெடுக்கவேண்டியிருக்கும். முடிவெடுக்கும் செயல்முறை குழப்பம் இல்லாமல் இருக்க திட்டத்தை ஒப்புக்கொள்ளும் பங்கு என்னும் முக்கிய பொறுப்பு சகட்டு மேனிக்கு பலருக்கும் தரப்படக்கூடாது. முடிவெடுக்க வேண்டிய விஷயத்தை பொறுத்து அதற்கு மிக முக்கியமான ஒரு சிலருக்கு மட்டுமே இப்பொறுப்பு அளிக்கப்படவேண்டும்.
உள்ளீடு வழங்குவது
முடிவெடுக்க தேவையான தகவல், டேட்டா, உள்ளீட்டை வழங்குபவர்கள் இவர்கள். எடுக்கப்படும் முடிவுகளை செயல்படுத்தும் பொறுப்பும் இவர்களுடையதாக இருக்கும் என்பதால் பரிந்துரைப்பவர்கள் இவர்கள் கூறுவதை, பகிரும் தகவல்களை, தரும் டேட்டாவை சிரத்தையுடன் சீர்தூக்கி பார்த்து ஆராய்ந்து திட்டத்தை தயாரிப்பது உசிதம். உள்ளீடு வழங்குபவர்கள் கூறும் கருத்துகளை, அறிவுரைகளை கேட்கலாமே ஒழிய அதை அப்படியே வேதவாக்காக பாவித்து அதன்படி மட்டுமே திட்டம் தயாரிக்க வேண்டும் என்பதில்லை. அதற்காக உள்ளீடு வழங்குபவர்கள் கூறுவதை, அதன் முக்கியத்தை, அளிக்கும் தகவலை குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. அவர்கள் உள்ளீட்டிற்கு மரியாதையும் மதிப்பீடும் தருவது திட்டத்தின் வீரியத்தை அதிகரிக்கும்.
டேட்டாவில் தவறு இருந்தால் அதை கொண்டு தயாரிக்கப்படும் திட்டங்கள் தவறாகிப் போகும். திட்டத்தில் தவறு இருந்தால் எடுக்கும் முடிவும் தவறாகிவிடும். அதனால் தான் விஷயமறிந்தவர்கள், புள்ளியியலில் புலியாய் இருப்பவர்களுக்கு இப்பொறுப்பு அளிக்கப்படவேண்டும். உள்ளீடு அளிக்கும் பொறுப்பு ஒரு சிலருக்கு இல்லாமல் பலருக்கு இருப்பது பல சமயங்களில் பிரச்சினையே. அந்த பலரில் ஒரு சிலராவது உருப்படியாய் உள்ளீடு அளிக்காமல் சும்மா ஒப்புக்காக மட்டுமே இருப்பார்கள். அது போன்றவர்கள் களையெடுக்கப்பட வேண்டும்.
முடிவெடுப்பது
என்னதான் இத்தனை பேர் சேர்ந்து திட்டம் தயாரித்தாலும் இறுதியில் முடிவெடுக்கும் பொறுப்பு ஒருவருடையதாகத் தான் இருக்கவேண்டும். இவர் தான் D. திருவாளர் முடிவெடுப்பவர். முடிவெடுக்கும் செயல்முறையை முடிவுக்கு கொண்டு வந்து அதை செயல்படுத்த கம்பெனி முழுவதையும் முடக்கிவிடுபவர் இவரே. பிசினஸ் தீர்வுக்கு வழி தெரிவது முதல் அதை சிறந்த முறையில் செயல்படுத்தும் மன திடமும் எடுத்த பணியை முடிக்கும் வைராக்கியமும் இவருக்கு அபரிமிதமாக இருக்கவேண்டும். D பொறுப்பு வகிப்பவர் யார் என்பது அனைவருக்கும் தெளிவாக்கப்படவேண்டும். தாங்கள் தான் முடிவெடுப்பவர் என்று பலர் நினைத்தால் யார் முடிவெடுப்பது என்பதில் போட்டா போட்டி ஏற்பட்டு ஆளாளுக்கு முடிவெடுப்பார்கள். பிறகு எடுக்கப்படும் முடிவு உருப்பட்ட மாதிரி தான்!
செயல்படுத்துவது
முடிவெடுக்கும் செயல்முறையின் இறுதி பொறுப்பு, இன்றியமையாத பொறுப்பு எடுத்த முடிவை செயல்படுத்துவது. இந்த பொறுப்பு வகிப்பவர்கள் எடுத்த முடிவுகள் சரியாக செயல்படுத்துவது முதல் சீரிய முறையில் அதை நடைமுறைபடுத்துவதும் முக்கியம். மெதுவாக அல்லது தவறாக செயல்படுத்தப்படும் சிறப்பான முடிவை விட விரைவாக செயல்படுத்தப்படும் சரியான முடிவு தான் பல சமயங்களில் வெற்றிக்கு வழி வகுக்கும் என்பதை நினைவில் கொள்வது நல்லது. சிறந்த முடிவெடுக்க சரியான செயல்முறை இருப்பதோடு யாருக்கு எந்த பங்கு, என்ன பொறுப்பு என்பவை தெளிவாக்கப்படவேண்டும். ஆறாம் வகுப்பு மாணவனுக்கு கூட அத்துப்படியான அல்ப விஷயமாய் இது தோன்றினாலும் பல கம்பெனிகளில் இது சரியாக அறுதியிடப்படாமல் இருப்பதாலேயே யாருக்கு என்ன பொறுப்பு என்று தெரியாமல் முடிவெடுக்கும் பிரச்சினை முடிவுக்கு வராமல் முடியை பிய்த்துக்கொள்ளும் நிலை அடைகிறது. ரேபிட் முறை கம்பெனி நிர்வாகத்திற்கு முடிவெடுக்க தேவையானவர் யார், யாருக்கு என்ன பங்களிப்பு, செய்யும் பணிக்கு யார் பொறுப்பு என்று சரியாக பங்கிட்டு தரும் முறையை தெளிவாக்குவதோடு தகுதியானவர்களுக்கு பொறுப்பு தரும் வழியையும் கற்றுத் தருகிறது.
ரேபிட் என்ற ஆங்கில வார்த்தைப்படி செயல்கள் செய்வதில்லையே என்று யோசிக்காதீர்கள். முடிவெடுக்க தேவையான ஐந்து பங்குதாரர்களை நீங்கள் எளிதில் ஞாபகம் வைத்துக்கொள்ள வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை கொஞ்சம் மாற்றி அமைத்திருக்கிறார்கள், அவ்வளவே. ரேபிட் முறை சர்வரோக நிவாரணி என்று கூற முடியாவிட்டாலும் முடிவெடுக்க தேவையான சிறந்த ஆரம்பம் என்று கொண்டால் அதுவே எதேஷ்டம்!
satheeshkrishnamurthy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT