Published : 11 Aug 2024 12:46 PM
Last Updated : 11 Aug 2024 12:46 PM
புதுடெல்லி: அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனங்களில் செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் பங்குகளை வைத்துள்ளதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டிய நிலையில், இந்த குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்று மாதபி புச் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அதானி குழுமம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்கு மோசடி உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. அதானி குழுமத்துக்கு ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. அதானி நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டனர்.
இதுதொடர்பான வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க விவகாரம் முற்றுப்பெற்றது. எனினும், ஹிண்டன்பர்க் அறிக்கையை எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிரான தேர்தல் ஆயுதமாக பயன்படுத்தின. இந்த நிலையில், ஹிண்டன்பர்க் அண்மையில் வெளியிட்டிருக்கும் கட்டுரை, பெரும் பேசுபொருளாக மீண்டும் மாறியிருக்கிறது. அந்தக் கட்டுரையில், "அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனங்களில், செபியின் தலைவர் மாதபி பூரி புச் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்துள்ளார்." என்று கூறியுள்ளது.
அதே கட்டுரையில், "அதானி குழுமத்தின் சந்தேகத்திற்குரிய பங்குதாரர்களுக்கு எதிராக செபி தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை அல்லது விரும்பவில்லை. இப்படி நடவடிக்கை எடுக்காமல் இருக்க, செபி தலைவர் மாதபி பூரி புச் அதானியின் சகோதரர் உடன் உடந்தையாக இருப்பது காரணமாக இருக்கலாம். செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி புச், அவரின் கணவர் ஆகியோர் அதானி நிறுவனத்தின் வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இந்த காரணத்தினாலேயே அதானி தொடர்புடைய பங்குதாரர்களுக்கு எதிராக செபி இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை." என்றும் கூறப்பட்டுள்ளது.
அதானி - செபி தலைவர் மாதபி பூரி புச் ஆகியோரை தொடர்புபடுத்தி ஹிண்டன்பர்க் வெளியிட்டிருக்கும் தகவல் மீண்டும் இந்திய அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாதபி பூரி புச் கூறுவது என்ன?: ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளனர் செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி புச், மற்றும் அவரது கணவர். இருவரும் ஒன்றாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆதாரமற்ற இந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம். இதில் எந்த உண்மையும் இல்லை. எங்களின் வாழ்க்கையும், எங்களின் நிதியும் திறந்த புத்தகம். தேவையான அனைத்து ஆவணங்களும் செபிக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
நாங்கள் தனிப்பட்ட குடிமக்களாக இருந்த காலகட்டம் உட்பட இப்போதுவரை எங்களின் அனைத்து நிதி ஆவணங்களையும் எந்தவொரு இயக்கம் கோரினாலும் அதனை வெளியிட எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. வெளிப்படைத்தன்மையை கருத்தில் கொண்டு, உரிய நேரத்தில் விரிவான அறிக்கையை வெளியிடுவோம்.
ஹிண்டன்பர்க் மீது அமலாக்க நடவடிக்கை எடுத்து ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பிய செபி நடவடிக்கை எதிராக தற்போது எங்களின் நற்பெயரை கெடுக்கும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது." என்று தெரிவித்துள்ளார்.
அதானி குழுமம் சொல்வது என்ன?: அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் உள்நோக்கம் கொண்டவை. அதானி குழுமத்துக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுகளை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம். பொதுவில் கிடைக்கக்கூடிய தகவல்களை கொண்டு, உண்மைகளையும் சட்டத்தையும் அலட்சியம் செய்து தனிப்பட்ட லாபம் ஈட்டுவதற்காக இதுபோன்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
ஏற்கனவே ஹிண்டன்பர்க் தெரிவித்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எங்களின் வெளிநாட்டு முதலீடுகள் வெளிப்படையானது. அதானி குழுமத்துக்கு தனிநபர்கள் உடன் வணிக உறவுகள் எதுவும் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT