Published : 08 Aug 2024 05:15 PM
Last Updated : 08 Aug 2024 05:15 PM

நடப்பாண்டில் இதுவரை ரூ.3,225 கோடி மதிப்புள்ள வேளாண் விளைபொருட்கள் பரிவர்த்தனை: தமிழக அரசு

மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர்கள் மற்றும் விற்பனைக்குழு செயலாளர்களுடன் நடந்த கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரையாற்றினார்.

சென்னை: “தமிழகம் முழுவதும் 284 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 525 சேமிப்புக்கிடங்குகள் உள்ளன. இவற்றின் மூலம் 4 லட்சம் மெட்ரிக் டன் விளைபொருட்களை சேமித்து வைக்கலாம். நடப்பாண்டில் இதுவரை ரூ.3,225 கோடி மதிப்புள்ள 9.63 லட்சம் மெட்ரிக் டன் வேளாண் விளைபொருட்கள் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது,” என்று வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று (ஆக.8) வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் செயல்பாடுகளை மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர்கள் (வேளாண் வணிகம்) மற்றும் விற்பனைக்குழு செயலாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்துக்கு வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர், வேளாண்மை – உழவர் நலத்துறை அபூர்வா முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் பேசியதாவது: விளைபொருட்களை சேமித்து வைத்து உயர்ந்த விலை கிடைக்கப்பெறும் காலங்களில் விற்பனை செய்திட ஏதுவாக மாநிலம் முழுவதும் 284 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 525 சேமிப்புக்கிடங்குகள் உள்ளன. இவற்றின் மூலம் 4 லட்சம் மெட்ரிக் டன் விளைபொருட்களை சேமித்து வைக்கலாம். நடப்பாண்டில் இதுவரை ரூ.3,225 கோடி மதிப்புள்ள 9.63 லட்சம் மெட்ரிக் டன் வேளாண் விளைபொருட்கள் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

பொருளீட்டுக்கடனாக விவசாயிகளுக்கு ரூ. 22.13 கோடியும், வணிகர்களுக்கு ரூ.1.68 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. சந்தை செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் 157 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 56 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ளது.

விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் வசதிகளை முழுமையாக பயன்படுத்தி நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்வதற்கு தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும், விவசாயிகளுடன் அலுவலர்கள் நல்ல தொடர்பில் இருந்திடவும், விவசாயிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்திடவும், விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கு பொருளீட்டுக் கடன் அதிகமாக வழங்கிடவும், மின்னணு வேளாண் சந்தை மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளவும் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அனைத்து விற்பனைக்கூடங்களும், கழிவறைகளும் சுத்தமாகவும் தூய்மையாகவும் சிறந்த முறையில் பராமரித்திட துரித நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். மேலும், அனைத்து வணிக நிறுவனங்களையும் முறையாக அழைத்து பேசி விளைபொருட்களை வேளாண்மை விற்பனைக்குழு மூலம் கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுத்திடவும், ஒவ்வொரு கிராமசபை கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் இத்துறையின் செயல்பாடுகளை விளக்கிடவும், மின்னணு வேளாண் சந்தை மூலம் பரிவர்த்தனை செய்யும் விவசாயிகள் மற்றும் வணிகர்களின் எண்ணிக்கையினை அதிகப்படுத்திடவும் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

சிறு மற்றும் குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்கள் கூட்டாக பயிர் சாகுபடி திட்டம் தயாரித்து அதற்கு தேவையான இடுப்பொருட்களை மலிவு விலையில் பெற்று உற்பத்தி செய்யும் விளைப்பொருட்களை ஒருங்கிணைத்து நல்ல விலைக்கு விற்பனை செய்திடவும் மேலும் அதிக வருமானம் பெறுவதற்கு விளைப்பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதற்கும், 397 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை செயல்படுத்தும் விதமாக ஆதார நிறுவனங்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு வணிக திட்டம் தயாரித்து அவர்கள் விளைப்பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதற்கும், உள்ளூர், மாநில, தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்வதற்கும் வழிவகை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்கள். உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை திறமையான நிறுவனமாக உருவாக்கிட திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கிடவும் அறிவுரை வழங்கினார்.

கிராமப்புறங்களில் தேவைப்படும் சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதனக் கிடங்குகள், சிப்பம் கட்டும் வசதிகள், தரம் பிரிப்பு வசதிகள் போன்றவற்றை வேளாண் கட்டமைப்பு நிதி (Agri Infrastructure Fund) மூலம் தனியார் நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் உருவாக்கிடும் பொருட்டு வங்கிகளில் பெறப்படும் ரூ.2 கோடி வரையிலான கடன் மீது 7 ஆண்டுகளுக்கு 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகின்றது.

இதுவரை, 6,854 நபர்களுக்கு ரூ.1,950 கோடி கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களான காய், கனிகளை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யும் வகையில் தற்போது தமிழ்நாட்டில் 192 உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன. உழவர் சந்தைகளில் வரத்தினை அதிகரித்திட தோட்டக்கலைத் துறையும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையும் இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்திட அறிவுறுத்தினார்.

அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பினை குறைக்கவும், விவசாயிகளை பெரும் சந்தைகள், பதப்படுத்துவோர் மற்றும் நுகர்வோர்களுடன் ஒருங்கிணைக்கவும், காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற அழுகும் பொருட்களுக்கான விநியோக தொடர் மேலாண்மை திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திடவும், 275 குளிர்பதன கிடங்குகளை விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சீரிய முறையில் பயன்படுத்திடவும் அறிவுறுத்தினார்.இவ்வாய்வு கூட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மாவட்ட வேளாண் துணை இயக்குநர்கள் மற்றும் விற்பனைக்குழு செயலாளர்கள் கலந்து கொண்டனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x