Published : 06 Aug 2024 05:08 PM
Last Updated : 06 Aug 2024 05:08 PM

கலவரம் எதிரொலி: வங்கதேசம் உடனான இந்திய வர்த்தகம் கடும் பாதிப்பு

கொல்கத்தா: அண்டை நாடான வங்கதேசத்தில் நிலவும் அரசியல் குழப்பம், கலவரம், கொந்தளிப்பான சூழல் எதிரொலியால், இந்தியா - வங்கதேசம் இடையிலான வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேற்கு வங்க ஏற்றுமதியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு செயலாளர் உஜ்ஜல் ஷாஹா கூறுகையில், “வங்கதேசத்தின் சுங்க அதிகாரிகள் சரக்குகளைக் கொண்டு செல்ல அனுமதி வழங்காததால், மேற்கு வங்க மாநில எல்லையோர சுங்கச் சாவடி வழியாக நடக்கும் வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நூற்றுக்கணக்கான லாரிகள் வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, அத்தியாவசிய பொருள்களுக்கான சேவை தவிர மற்ற சேவைகளுக்கு புதன்கிழமை வரை விடுமுறை அளித்து வங்கதேச அரசு ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சுங்கச்சாவடி மூடல்: வங்கதேசத்தின் பெனாபோல் சுங்கச்சாவடி செல்படாததால், மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தின் மிகப் பெரிய சுங்கச்சாவடியான பேட்ராபோலில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமையின் தீவிரம் கருதி, சுங்கச்சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையே மேற்கு வங்கத்தின் பேட்ராபோல், கோஜடங்கா, மகாதிபூர் மற்றும் ஃபுல்பாரி சுங்கச்சாவடிகள் வழியாக நடைபெறும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. சில பயணிகள் போக்குவரத்து பதிவாகியுள்ள நிலையில் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது என்று தகவல் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.

ஏற்றுமதி குறைவு: இதனிடையே, க்ளோபல் டிரேட் ரிசர்ச் இனிசியேட்டிவ் (ஜிடிஆர்ஐ)யின் நிறுவனர், அஜய் ஸ்ரீவத்சவா கூறுகையில், "வங்கதேசத்தில் அரசியல் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் ஆடை மற்றும் பிற தொழில்சாலைகளை பாதுகாப்பதையும், எல்லைகள் வழியான வர்த்தகத்தை திறந்து வைப்பதையும் உறுதி செய்யவேண்டும்" என்று தெரிவித்தார்.

இஞ்ஜினியரிங்க் எக்ஸ்போர்ட் பிரமோஷன் கவுனிசில் தலைவர் அருண் குமார் கரோடியா வங்கதேசத்தில் நிலைமையின் தீவிரம் குறித்து கவலை தெரிவித்துள்ளார். அவர், "இந்தியாவின் பொறியியல் பொருள்களுக்கான முக்கிய சந்தையான வங்கதேசம், 2024-25 நிதியாண்டில் ஏப்ரல் - ஜூன் வரையிலான காலத்தில் இறக்குமதியை 542.1 மில்லியன் டாலராக குறைத்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 8.2 சதவீதம் குறைவு" என்றார்.

தெற்காசியாவில் இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக பங்காளியாக வங்கதேசம் உள்ளது. அதேபோல், ஆசியாவிலேயே வங்கதேசத்தின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாக இந்தியா உள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டில் 22.21 பில்லியன் டாலராக இருந்த வங்கதேசத்துக்கான இந்தியாவின் ஏற்றுமதி 2023-24 நிதியாண்டில் 11 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. அதேபோல், இதே காலக்கட்டத்தில 2 பில்லியன் டாலராக இருந்த இறக்குமதி 1.84 பில்லியன் டாலராக குறைந்ததுள்ளது.

ஏற்றுமதி பொருள்கள்: வங்கதேசத்துக்கான இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி பொருள்களாக காய்கறிகள், காபி, தேயிலை, மசாலா பொருள்கள், சர்க்கரை, மிட்டாய், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய எண்ணெய், வேதிபொருள்கள், இரும்பு எஃக்கு மற்றும் வாகனங்கள் உள்ளன. அதேபோல் வங்கதேசத்தில் இருந்து மீன், பிளாஸ்டிக், தோல் மற்றும் ஆடைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவுக்கான வங்கதேசத்தின் முக்கிய ஏற்றுமதியாக ஜவுளி மற்றும் ஆடைகள் உள்ளன. அதன் மொத்த ஏற்றுமதியில் 56 சதவீதம் இவற்றைக் கொண்டுள்ளன.

வங்கதேச குழப்பம்: வங்கதேசத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் இடஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட மாணவர்கள் போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது. போலீஸாருக்கும் மாணவர்களுக்கும் ஏற்பட்ட வன்முறையில் 300 பேர் உயிரிழந்துள்ளனர். திங்கள்கிழமை தலைநகர் டாக்காவில் நாடாளுமன்றம், பிரதமர் இல்லத்துக்குள் வன்முறை கும்பல் புகுந்து சூறையாடியது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x