Published : 03 Aug 2024 05:56 PM
Last Updated : 03 Aug 2024 05:56 PM

ஆடிப்பெருக்கு: சிவகாசி பட்டாசு விற்பனை கடைகளில் பூஜையுடன் தீபாவளி விற்பனை தொடக்கம்

பட்டாசுகள்

சிவகாசி: சிவகாசியில் பட்டாசு விற்பனை கடைகளில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, தீபாவளி விற்பனை தொடங்கப்பட்டது. சிவகாசி சுற்று வட்டார பகுதிகளில் சிறிய மற்றும் பெரிய அளவில் 1100-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகளும், 2,000-க்கும் அதிகமான சில்லரை மற்றும் மொத்த விற்பனை கடைகள் இயங்கி வருகின்றன. நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 95 சதவீதத்துக்கும் மேல் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.

சிவகாசி பட்டாசுகள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தாராளமாக கிடைத்தாலும், சிவகாசியில் 60 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் பட்டாசு விற்பனை செய்யப்படுவதாலும், நேரடியாக வெடித்து பார்த்து வாங்கலாம் என்பதாலும் தமிழகம் மட்டுமின்றி, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் வாடிக்கையாளர்கள் சிவகாசி வருகின்றனர். தீபாவளி பட்டாசு விற்பனை ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கு அன்று பூஜையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசி சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து பட்டாசு விற்பனை கடைகளும் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு தீபாவளி விற்பனை தொடங்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் இளங்கோவன் கூறுகையில், “சிவகாசியில் மட்டும்தான் ஆண்டு முழுவதும் பட்டாசு விற்பனைக்கு கடைகளுக்கு நிரந்தர உரிமம் வழங்கப்படும். பிற பகுதிகளில் தீபாவளிக்கு மட்டும் ஒரு மாதத்துக்கு தற்காலிக உரிமம் வழங்கப்படும். சிவகாசியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜையுடன் தீபாவளி விற்பனை தொடங்கி உள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு விற்பனை நன்றாக நடந்ததால் சில்லரை வியாபாரிகளிடம் இருந்த பட்டாசுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டது. அதனால் தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள பட்டாசு வியாபாரிகள் இப்போதே ஆர்டர் கொடுக்க தொடங்கி விட்டனர். ஆயுத பூஜைக்கு பின் பட்டாசு விற்பனை வேகமெடுக்கும்” என்றார்.

பாக்ஸ் உற்பத்தி குறைவால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு: கடந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசு விற்பனை அமோகமாக நடைபெற்றதால் கடைசி நேரத்தில் குழந்தைகள் அதிகம் விரும்பும் பேன்சி ரக பட்டாசுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் தீபாவளி முடிந்த ஒரு வாரத்திலேயே அடுத்த ஆண்டுக்கான பட்டாசு உற்பத்தி தொடங்கியது. ஆனால், தொடர் விபத்துக்கள் மற்றும் ஆய்வுகள், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பட்டாசு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு முன்கூட்டியே தட்டுப்பாடு ஏற்பட்டு பட்டாசுகளை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x