Last Updated : 29 Jul, 2024 02:36 PM

 

Published : 29 Jul 2024 02:36 PM
Last Updated : 29 Jul 2024 02:36 PM

மத்திய பட்ஜெட் அறிவிப்பால் புத்துயிர் பெறும் பம்ப்செட் தொழில்!

கோவை: மத்திய பட்ஜெட் அறிவிப்பை தொடர்ந்து பம்ப்செட் தொழில்புத்துயிர் பெறும்நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பம்ப்செட் தொழிலில் கோவை மாவட்டம் உலகளவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. தேசிய அளவில் பம்ப்செட் விற்பனையில் கோவை மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் 50 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. இத்தகைய சூழலில் மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளால் கடந்த சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட பம்ப்செட் தொழில் இவ்வாண்டு தொடக்கம் முதல் சிறப்பாக உள்ளதாகவும், பட்ஜெட் அறிவிப்பை தொடர்ந்து மூலப் பொருட்கள் விலை குறைய தொடங்கியுள்ளதால் எதிர்வரும் மாதங்களில் பம்ப்செட் தொழில் மேலும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்யும் என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய பம்ப்செட் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (இப்மா) தலைவர் கார்த்திக் கூறும்போது, “இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் 15-ம் தேதி வரை பம்ப்செட் தொழில் நல்ல வளர்ச்சியை பதிவு செய்தது. தற்போது நாடு முழுவதும் பருவமழை தொடர்வதால் அதன் தாக்கம் பம்ப்செட் விற்பனையில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. மத்திய அரசு பட்ஜெட்டில் காப்பர் உள்ளிட்ட முக்கிய மூலப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைத்துள்ளது.

இதனால் சந்தையிலும் இப்பொருட்களின் விலை குறைய தொடங்கியுள்ளது. மொத்தத்தில் பம்ப்செட் தொழில் சீரான வளர்ச்சியை தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. தேசிய அளவில் பம்ப்செட் விற்பனையில் கோவை மாவட்டம் தொடர்ந்து 50 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது” என்றார்.

தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (சீமா) தலைவர் மிதுன் ராம்தாஸ் கூறும்போது, “கரோனா பரவலுக்குபின்னர் இவ்வாண்டு பம்ப்செட்தொழிலில் சீசன் விற்பனை சிறப்பாகஉள்ளதை காண முடிகிறது. பட்ஜெட் அறிவிப்பை தொடர்ந்து மூலப்பொருட்கள் விலை குறைய தொடங்கியுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது.

இருந்தபோதும் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 12-லிருந்து 18 சதவீதமாக உயர்த்தியது, மூலப்பொருட்கள் விலை 40 சதவீதம் வரை அதிகரித்தது என்பன உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக தொழிலில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. பட்ஜெட் அறிவிப்பால் நெருக்கடியில் இருந்து தொழில்துறையினர் மீண்டு வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சந்தையில் தற்போதைய நிலவரத்தை கணக்கிட்டு பார்க்கும் போது தீபாவளிக்கு பின் பம்ப்செட் தொழில் மேலும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்யும் என நம்புகிறோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x