Published : 17 Apr 2018 09:08 AM
Last Updated : 17 Apr 2018 09:08 AM
ஒ
ரு கூடை சன் லைட், ஒரு கூடை மூன் லைட்.
ரஜினியின் சிவாஜி படத்தில் வரும் பாட்டு. அதை யார் பாடியிருக்கிறார்கள்? ப்ளாஸே (Blaze) என்றா சொன்னீர்கள்? கரெக்ட். அவர் நிஜப் பெயர் என்ன தெரியுமோ?
லக்ஷ்மி நரசிம்ம விஜய ராஜகோபால சேஷாத்ரி ஷர்மா ராஜேஷ் ராமன்.
ஏன் பெயரை மாற்றிக் கொண்டார்? இவ்வளவு பெரிய பெயரைச் சொல்லி முடிப்பதற்குள் நமக்கு மூன்று முறை மூச்சு வாங்குமே என்கிற நல்ல எண்ணமா? அது சரி. நரசிம்மன், விஜய், ராஜகோபாலன், சேஷாத்ரி, ஷர்மா, ராஜேஷ், ராமன், என்றெல்லாம் தன் பெயரைக் கூறுபோட்டு ஏதாவது ஒரு குட்டிப் பெயரை வைத்துக் கொண்டிருக்கலாமே? ஏன் செய்யவில்லை?
ராப் (Rap) இசை, அமெரிக்க நீக்ரோ இனத்தவர்கள், லத்தீன் அமெரிக்கர்கள் ஆகியோரின் இசை. இது ஹிப் ஹாப் இசை என்றும் கூறப்படுகிறது. தன் பெயரைக் கேட்டவுடனேயே, தன்னை ராப் இசைக் கலைஞராக அனைவரும் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும் என்று லக்ஷ்மி நரசிம்ம விஜய ராஜகோபால சேஷாத்ரி ஷர்மா ராஜேஷ் ராமன் நினைத்தார். எனவே அமெரிக்கா ஸ்டைலில், ப்ளாஸே என்று பெயர் வைத்துக்கொண்டார்.
தனிப்பட்ட மனிதரானாலும், கம்பெனியானாலும், பெயர் வைப்பதின் அடிப்படைத் தாத்பர்யம் இதுதான்:
1. பெயர் முக்கியமாய் பிறர் நம்மைக் கூப்பிட. ஆகவே அடுத்தவர் வாயில் நுழையும் சொல்லாய், சுருக்கமாய் இருக்கவேண்டும்.
2. செய்யும் தொழிலுக்கு ஏற்றதாய் இருக்கவேண்டும். நீங்கள் டாக்டரா? உங்கள் பெயர் சித்ரகுப்தனா? ஃபைனான்ஸ் கம்பெனி தொடங்குகிறீர்களா? உங்கள் பெயர் கோவிந்தனா? நீங்கள் பெயரை மாற்றிக் கொள்ளுங்கள், அல்லது தொழிலை மாற்றிக் கொள்ளுங்கள்.
3. பெயரிலேயே நம் பிசினஸின் தனித்துவம் தெரியவேண்டும். உதாரணமாக, “ஆச்சி மசாலா.” செட்டி நாட்டுச் சமையலின் சுவை உலகெங்கும் கொடிகட்டிப் பறக்கிறது. “நீங்கள் ஆச்சி மசாலா உபயோகித்தால் உங்கள் சமையலும் ஸூப்பர்” என்று வீட்டுப் பெண்களைச் சுண்டியிழுக்கும் சூட்சுமம்.
கம்பெனி பெயரையும், தயாரிப்புப் பொருளின் பெயரையும் சரியாகத் தேர்ந்தெடுத்துவிட்டால், பந்தயம் தொடங்கும் முன்னாலேயே பாதி ஜெயித்தமாதிரி. ஜாக் மா தன் கம்பெனிக்கு தேர்ந்தெடுத்த பெயர் - அலிபாபா. பல காரணங்கள்;
தனிப்பட்ட முறையில் ஜாக் மாவுக்குப் பிடித்த கதை, பெயர்.
“Alibaba is a happy young man” என்னும் பாடல் சீனாவில் பிரபலம்.
தொடங்கப்போவது உலகளாவிய பிசினஸ். உலகின் எந்த நாட்டிலும், அலிபாபா யார்ன்னு கேட்டா, சின்னக் குழந்தையும் சொல்லும், “திறந்திடு சீஸேம்”, செல்வங்கள் இருக்கும் குகையின் மந்திரச் சாவி என்று.
இதைவிட அனைவருக்கும் தெரிந்த பெயர், அர்த்தமுள்ள பெயர் வேறென்ன இருக்கமுடியும்?
ஜாக் மா எதையும் எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார். தனக்குள்ளே ஆயிரம் ஆயிரம் கேள்விகள் கேட்பார். திருப்தியான பதில் கிடைத்தால்தான் ஒவ்வொரு அடியாக முன்னே எடுத்துவைப்பார். இப்போது அவருக்குள் ஒரு கேள்வி, ``எல்லோருக்கும் பரிச்சயமான பெயர் என்பது சரி. அலிபாபா என்னும் பெயருக்குச் சாமானிய மக்கள் மனங்களில் சாதகமான பிம்பம் இருந்தால்தானே பிசினஸுக்கு ஆதரவு தருவார்கள்?” பதில் தேடவேண்டும். சீனாவில் அல்ல. பன்னாட்டு பிசினஸ் அல்லவா? அந்நிய மண்ணில்தான் சரியான பதில் கிடைக்கும்.
அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரத்தில் கருத்துக் கணிப்பு நடத்தினார். தான் காப்பி குடித்துக்கொண்டிருந்த உணவு விடுதிப் பணிப்பெண்ணிடம் கேட்டார்,
“உங்களுக்கு அலிபாபாவைத் தெரியுமா?”
“தெரியுமே? அலிபாபா என்றால் திறந்திடு சீஸேம்.”
உணவுவிடுதியில் இருந்த மற்ற்வர்கள், வீதியில் போய்க்கொண்டிருந்த ஆண், பெண், இளைஞர், வயதானவர், குட்டிப் பசங்கள் எனப் பல தரப்பட்ட மக்கள். எல்லோரிடமும் ஒரே கேள்வி. அலிபாபா என்னும் பெயரோடு அனைவரும் சம்பந்தப்படுத்திய இரண்டு வார்த்தைகள் - `` திறந்திடு சீஸேம்”, “புதையல்.”
ஜாக் மா முடிவெடுத்தார், தன் கம்பெனி பெயர் அலிபாபா.
தமிழ் சினிமா. க்ளைமாக்ஸ் சீன். கல்யாணம். மாப்பிள்ளை பெண் கழுத்தில் மூன்று முடிச்சு போடப்போகிறார். அந்தக் கடைசி விநாடி. மண்டபத்தில் புதுமுகம் என்ட்ரி. ``கல்யாணத்தை நிறுத்து.”
இதேபோல், ஜாக் மா தன் கம்பெனி பெயரைப் பதிவுசெய்யும் வேளை. கனடாவிலிருந்து ஒரு குரல் - “நிறுத்துங்கள்.”
இணையதள பிசினஸ் சூடு பிடித்துக்கொண்டிருந்தபோது பல அதி புத்திசாலிகள் பணம் பண்ண ஒரு குறுக்கு வழி கண்டுபிடித்தார்கள். மக்களிடையே பிரசித்தமான பெயர்களைப் பதிவுசெய்து வைத்துக்கொள்வார்கள். இவர்கள் திட்டம் ஆன்லைன் பிசினஸ் அல்ல, ``பெயரை வைத்து பிசினஸ் செய்வது*. கனடா ஆசாமியும் அலிபாபா. காம் என்னும் பெயரைப் பதிவுசெய்து வைத்திருந்தார்.
(*இப்படித்தான், ஃபேஸ்புக் கம்பெனி FB.com என்னும் பெயரைப் பதிவு செய்திருந்தார்கள். Fb.com என்னும் பெயரோடு இன்னொருவர் ஏற்கெனவே இருந்தார். அவர் வழக்குப் போடாமலிருக்க. ஃபேஸ்புக் அவருக்குக் கொடுத்த விலை 85 லட்சம் டாலர்கள். அதாவது அன்றைய நிலவரப்படி, சுமார் 40 கோடி ரூபாய். இதேபோல், Hotels.com, 2001 - இல் தந்த விலை 11 மில்லியன் டாலர்கள். அதாவது அன்றைய நிலவரப்படி சுமார் 46 கோடி ரூபாய். அம்மாடியோவ்! டப்பு பண்ண இப்படி ஒரு வழியா? )
கனடா ``தொழில் அதிபர்” 10,000 டாலர்கள் (சுமார் 83,000 யான்கள்) கேட்டார். அன்றைய நிலையில் ஜாக் மா கம்பெனி கையில் இருந்தது மொத்தம் 5 லட்சம் யான்கள். இதில் 83,000 மிகப் பெரிய தொகை. வெறும் பெயருக்காக இத்தனை செலவழிக்கவேண்டுமா என்று ஜாக் மா முதலில் நினைத்தார். ஆகவே, alibabaonline.com, alibaba-online.com என்னும் இரு பெயர்களைப் பதிவு செய்தார். எல்லாத் தொழில் முனைவோர்களும் இப்படித்தான். செலவு செய்யத் தயங்குவார்கள்.
வறுமையில் வளர்ந்து, பிசினஸில் சூடும் பட்ட ஜாக் மாவுக்குப் பணத்தின் மதிப்பு தெரியும். ஆனால், சில முடிவுகள் எடுக்கும்போது, பணம் இரண்டாம் பட்சம்தான் என்பது அவர் கொள்கை. தன் முடிவை உடனேயே மறுபரிசீலனை செய்தார். கனடாக்காரர் வேறு ஒருவருக்கு alibaba.com பெயரை விற்றுவிட்டால்...., அவர் ஆன்லைன் கம்பெனி ஆரம்பித்துவிட்டால்.... வாடிக்கையாளர்கள் ஜாக் மாவின் alibabaonline.com, alibaba-online.com கம்பெனிக்கும், புதியவரின் alibaba.com கம்பெனிக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பிப்போவார்கள். தன் வருங்காலக் கனவுகளை நிஜமாக்க அலிபாபா என்னும் பெயர் அத்தியாவசியம். பணம் இன்று போகும், நாளை வரும். அலிபாபா என்னும் பெயரைக் கைநழுவ விட்டுவிட்டால், திரும்பவே கிடைக்காது. துணிச்சலாய் முடிவெடுத்தார். கனடாவுக்கு 10,000 டாலர்கள் அனுப்பினார். alibaba.com இப்போது ஜாக் மாவின் சட்டபூர்வமான ஏகபோக சொத்து.
ஜாக் மாவின் கூட்டாளிகள் பலருக்கே இந்த முடிவு சரியா என்று சந்தேகம். ஆனால், அவரிடம் இருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையால், சம்மதித்தார்கள். ``ஒரு பெயருக்கு இத்தனை விலை யாராவது கொடுப்பார்களா? இந்த ஆளுக்கு பிசினஸின் அரிச்சுவடியே தெரியவில்லையே? இவன் பிசினஸ் உருப்பட்ட மாதிரித்தான்” என்று சீனாவின் பிசினஸ் பெருந்தலைகள் இரங்கல்பா வாசித்தார்கள்.
அவர்கள் கற்பூர வாசனை தெரியாதவர்கள் என்று காலம் நிருபித்தது. ஜாக் மாவைப் பொறுத்தவரை, பிசினஸ் என்பது விற்பதும் வாங்குவதும் மட்டுமல்ல. விற்பவருக்கும், வாங்குபவருக்குமிடையே ஏற்படும் பந்தம். நம் வீட்டுக்குப் பக்கத்தில் இரண்டு கடைகள். ஒரே விதப் பொருட்கள். ஒரே வித விலை. ஒரு கடையில்தான் வாங்குகிறோம். இன்னொரு கடைக்குப் போவதேயில்லை. ஏன்? தான் பழகும் முறையால், முதல் கடைக்காரர் நம் மனதில் முழுமையான நம்பகத்தன்மையை உருவாக்கிவிட்டார். இந்த நம்பகத்தன்மைதான் உறவின் அடித்தளம். நாம் அவருடைய தொடர் கஸ்டமராக இருப்பதன் ரகசியம்.
நாம் கண் முன்னால் பார்க்கும் அண்ணாச்சிகளை எடை போடுவதற்கே, இந்த நம்பகத்தன்மை அவசியம். ஆன்லைன் பிசினஸில் யாரிடம் பொருட்களை வாங்குகிறோம் என்பதே தெரியாது. முகம் தெரியாத, முன்பின் பரிச்சயமேயில்லாத ஒருவரிடம் பொருட்கள் வாங்க, ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை தேவை. இதை உருவாக்கும் முக்கிய யுக்தி ``பொருத்தமான பெயர்.” இந்தத் தீர்க்கதரிசனம், பிசினஸ் மேதைமை ஜாக் மாவிடம் இருந்ததால்தான், அலிபாபா என்னும் பெயருக்காக, 10,000 டாலர்கள் கொடுத்தார்.
அலிபாபாவின் மார்க்கெட்டிங் துறைத் தலைவர் (Zhang Pu) பின்னாட்களில் சொன்னார், ``அலிபாபா என்ற வார்த்தையைக் கேட்டவுடனேயே, எங்கள் கஸ்டமர்கள் மனங்களில் முதலில் பளிச்சிட்டவை குகையில் இருந்த செல்வமும், அலிபாபாவின் நேர்மையும். ஆகவே, நேர்மையான வழியில் பணம் பண்ணும் வழியை அலிபாபா கம்பெனி காட்டும் என்று நம்பினார்கள்.” மனோதத்துவ மேதைகள் இன்னொரு காரணத்தையும் காட்டுகிறார்கள். சீனர்கள் அதிர்ஷ்டம், சகுனம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவர்கள். அலிபாபா திருடர்களின் குகையைக் கண்டுபிடித்தது தற்செயலாக, அதிர்ஷ்டவசமாக நடந்த செயல். இந்த அலிபாபாவும் தங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தருவார் என்று நினைத்தார்கள்.
ஜாக் மாவுக்கு முன்னெச்சரிக்கை அதிகம். அலிபாபா என்பது ஆணின் பெயர். இதன் பெண்பால் அலிமாமா; குழந்தையாக இருந்தால், அலிபாபோபா. வேறு யாராவது இந்தப் பெயர்களில் கம்பெனி தொடங்கினால், நுகர்வோர் மனங்களில் குழப்பம் வரும். ஆகவே, alimama.com, alibaobao.com ஆகிய பெயர்களையும் பதிவு செய்துகொண்டார்.
பெயர் ரெடி, மூலதனம் ரெடி, அலுவலக இடம் ரெடி. அலிபாபா.காம் திறப்புவிழாவுக்கான நாள் குறித்தாகிவிட்டது. அந்த நாள்.
(குகை இன்னும் திறக்கும்)
slvmoorthy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT