Published : 24 Jul 2024 04:51 PM
Last Updated : 24 Jul 2024 04:51 PM

கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகையால் அரசுக்கு நிதியிழப்பு: பேராசிரியர்கள், வர்த்தகர்கள் கருத்து

மதுரை: மத்திய பட்ஜெட் (2024) குறித்து பேராசிரியர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் என்.ஜெகதீசன்: அனைத்துத் தரப்பினருக்கும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் இது. வருமான வரி விகிதம் குறைக்கப்பட் டதாக அறிவித்தாலும் பெரிதான பலன் இல்லை. சுங்க வரியில் மட்டும் சற்று குறைத்துள்ளனர். அதே போல ஜிஎஸ் டியில் 28 சதவீத வரியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பிரதி பலிக்கவில்லை.

தென் தமிழ்நாட்டுக்கு ரயில்வே, மெட்ரோ, விமானநிலைய மேம்பாடு குறித்து புதிய அறிவிப்புகள் இல்லை. தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், மின்னணு வர்த்தக ஏற்றுமதி மையங்கள், 12 தொழில் பூங்காக்கள் மற்றும் நாட்டில் 9 துறைகளை உள்ளடக்கிய முன்னுரிமைத் திட்டங்களை வரவேற் கலாம். மடீட்சியா தலைவர் லட்சுமி நாராயணன்: சிறு, குறு நிறு வனங்களுக்கு வழங்கும் முத்ரா கடன் திட்ட வரம்பை ரூ.20 லட்சமாக உயர்த்தியது, நெருக்கடியான காலங்களில் சிறு, குறு நிறுவனங்களுக்கு உதவ சிறப்புத் திட்டம் அறிமுகம் வரவேற்கத்தக்கது. உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.11.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது.

தியாகராசர் கல்லூரி பொருளாதார பேராசிரியர் (ஓய்வு) அசோகன்: வருமான வரி வரம்பில் சிறிய அளவிலான மாற்றம் ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாட்டுக்கு பெரியளவில் திட்டங்கள் எதுவும் இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 5 சதவீத வரிச் சலுகை மத்திய அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும்.

அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் சி.முத்துராஜா: 2047-ல் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் உலகில் 3-வது இடத்துக்கு வரும் என்கிறார்கள். ஆனால், அதற்கான வேகம், விவேகமான திட்டம் மத்திய பட்ஜெட்டில் இல்லை.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து பணியாளர் சம்மேளனத்தின் மாநில இணைப் பொதுச் செயலாளர் எஸ்.சம்பத்: சம்பளப் பிரிவினருக்கு ரூ.5 லட்சம் வரை வரி இல்லை என்று இருக்க வேண்டும். செல்போன், தங்கத்துக்கான வரிச்சலுகையை வைத்து சாமானியனுக்கான பட்ஜெட் என்று சொல்ல முடியாது, எப்போதும் போல் கார்ப்பரேட் நலன் பட்ஜெட்தான், என்றார்.

டோக் பெருமாட்டி கல்லூரி பொருளாதாரத் துறை உதவிப் பேராசிரியர்கள் ஏஞ்சல், உமா மகேசுவரி: நிதி அமைச்சரின் கூற்றுப்படி, 2014-ம் ஆண்டில் எங்கு இருந்தோம், இப்போது எங்கு இருக்கிறோம் என்பதில் இருந்து அரசின் முன்னேற்றத்தை பிரதிபலிப்பது பொருத்தமானது. இச்சாதனைகளை விவரிக்கும் வெள்ளை அறிக்கையை அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது (பட்ஜெட்டில்) வரவேற்கத்தக்கது என்றனர்

தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்புக் குழு செயலாளர் எஸ்.புஷ்பவனம்: மத்திய பட்ஜெட்டில் ரயில்வே குறித்து எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. நேரடி மற்றும் மறைமுக வரி வசூலில் மிகையான வசூல் சாதாரண மக்களின் சுமையை குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கான அறிவிப்பு எதுவும் பட்ஜெட்டில் இல்லை. வேலைவாய்ப்பின்மையை சமாளிக்க திறன் மேம்பாட்டுக்கு ஊக்கமளிப்பது, வருமான வரி சமர்ப்பிப்பதில் நிலையான விலக்கை அதிகரித்திருப்பது, நில ஆவணங்களை கணினிமயமாக்குதல், கல்விக் கடனுக்கு 3 சதவீத வட்டியுடன், கடன் தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தியிருப்பது வரவேற்கத்தக்கது.

பாரதீய கிசான் சங்க மாநிலச் செயலாளர் என்.வீரசேகரன்: பட்ஜெட்டில் பல்வேறு பாராட்டத்தக்க அம்சங்கள் இருந்தாலும், வேளாண்மைத் துறையை பொறுத்தவரை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து, வேளாண் பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு, பிரதமர் கிசான் சம்மான் நிதி உயர்வு ஆகிய அறிவிப்புகள் இடம்பெறவில்லை. இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை, தேசிய கூட்டுறவு கொள்கை, சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு, நில ஆவணப் பதிவேடுகளை கணினிமயமாக்குதல், கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.

ஆடிட்டர் ஆர்.ரவிச்சந்திரன்: இந்த பட்ஜெட் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களுக்கு எந்த பயனையும் தரவில்லை. நேரடி வரி விதிப்பில் வருமான வரி உச்சவரம்பை அதிகரிக்காதது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. அதற்கு மாறாக புதிய வரிவிதிப்பு கொள்கையில் வரி சதவீதம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆடம்பர பொருட்களான தங்கம், வெள்ளி,செல்போன்கள் போன்றவற்றுக்கு சுங்கவரியை குறைத்து இருப்பது மட்டுமல்லாமல், நடுத்தர மக்கள் பெரிதும் எதிர்பார்த்த உணவு தானியங்களுக்கு எந்தவித வரி குறைப்பும் இல்லாதது ஏமாற்றத்தை தந்துள்ளது.

விவசாய சங்க நிர்வாகி வெ.ஜீவக்குமார்: ஆந்திரா, பிஹாருக்கு மட்டும் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு, அவர்களுக்கு மட்டும் அதிக சலுகை அறிவித்து, மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது. இந்த பட்ஜெட்டில் புதிய வேலைவாய்ப்புகள் ஏதும் இல்லை. ஆக்கப்பூர்வமான திட்டங்களும் இல்லை.

தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் கல்லூரி முன்னாள் பொருளாதார துறை பேராசிரியர் ஆர்.பழனிவேல்: இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் அதிகம் எதிர்பார்த்த கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை. அன்றாடம் கஷ்டப்படும் மக்களுக்கு சலுகை தராமல், தொலை நோக்கோடு பாதுகாப்புப் படை இயற்கை, பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுற்றுலாத்துறை, விண்வெளி துறை போன்றவற்றில் அதிக நிதி ஒதுக்கி இருப்பது தொலைநோக்கு வளர்ச்சிக்கு பயன்படுமே தவிர, தற்போது அன்றாடம் பசியால் வாடும் மக்களுக்கு பயன்படாது.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமல்நாதன்: இயற்கை வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுவதை ரூ.12 ஆயிரம் என உயர்த்தி அறிவித்திருக்க வேண்டும். நதிகள் இணைப்பு குறித்த அறிவிப்பை நடப்பு கூட்டத்தொடரில் தெரிவிக்க வேண்டும்.

கூட்டுறவுத் துறையை மேம்படுத்தவும், பருப்புகள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்துக்கு நிகழாண்டுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு என அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

காவிரி நீர் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம்: இது இந்திய பட்ஜெட் இல்லை. பிஹார், ஆந்திரா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா ஆகிய 5 மாநிலங்களுக்கான வளர்ச்சி பட்ஜெட்டாகவே உள்ளது. இதுதவிர, இலவச தானிய திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு, இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படாத பயிர்கள் அறிமுகம் போன்ற அம்சங்களை வரவேற்கலாம்.

கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ப.கோபாலகிருஷ்ணன்: விவசாயிகள், ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் மேம்பாட்டுக்கு வழி வகுக்கும் வகையில் இந்த பட்ஜெட் உள்ளது. வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, குறு சிறு நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி, நடுத்தர வர்க்க மக்களின் வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜவுளித் துறை சார்ந்து திட்டங்களோ, அறிக்கையோ இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. இருப்பினும் பெரும்பாலான ஜவுளி நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் பிரிவில் வருவதால் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ள எம்எஸ்எம்இ திட்டங்களின் மூலம் ஜவுளித் துறை பயனடையும். பல மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்கள் வெளியிடப்பட்டிருக்கும் அதே நேரத்தில் தமிழகத்துக்கு என்று எந்த ஒரு திட்டங்களும் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x