Published : 24 Jul 2024 05:35 PM
Last Updated : 24 Jul 2024 05:35 PM
கோவை: அதிகரித்து வரும் மின்தேவையை பூர்த்தி செய்வதில் சூரியஒளி, காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் துறை மிக முக்கிய பங்களிக்கின்றன. தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்திப் பிரிவில் 10 ஆயிரம் மெகாவாட்டுக்கு அதிகமாகவும், சூரியஒளி ஆற்றல் உற்பத்தியில் 4,500 மெகாவாட்டுக்கு அதிகமாகவும் மின்சாரம் உற்பத்தி செய்ய உதவும் வகையில் கட்டமைப்பு வசதிகள் உள்ளன.
சூரியஒளி ஆற்றல் திட்டத்தில் நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய உபகரணங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் மின் உற்பத்தி வழக்கத்தைவிட அதிகரித்துள்ளதாகவும், சேமிப்பு கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த அரசுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமெனவும் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு சூரியஒளி ஆற்றல் உற்பத்தியாளர்கள் சங்க (டான்ஸ்பா) பொருளாளர் சாஸ்தா எம்.ராஜா ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் சோலார் திட்டத்தின்கீழ் ஆண்டு முழுவதும் (மழைக்காலம் உட்பட) மின்சாரம் உற்பத்தி செய்ய இயற்கையாகவே வாய்ப்பு அமைந்துள்ளது. தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட சோலார் பேனல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
முன்பு 300 வாட் அளவிலான பேனல்கள் மட்டுமே கிடைத்த நிலையில் தற்போது 700 வாட் மற்றும் அதற்கு மேல் திறன் கொண்ட பேனல்கள் கிடைக்கின்றன. தற்போது அறிமுகமான ‘பயோ பேசியல் சோலார் பேனல்’ தொழில்துறையினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இவற்றில் இருபுறங்களிலும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். வழக்கமாக சோலார் பேனல்களின் மேற்புறங்களில் மட்டும் மின்உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பிருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய பேனல்களால் ஒரு மெகாவாட் மின்உற்பத்தி கட்டமைப்பு மூலம் ஆண்டுக்கு 21 முதல் 22 லட்சம் யூனிட் வரை மின்உற்பத்தி செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. செயல் திறனும் 23 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதுதவிர, சூரியஒளி சுழற்சிக்கு ஏற்ப திசையை திருப்பி மின்உற்பத்தி செய்ய உதவும் ‘சிங்கிள் ஆக்சிஸ் டிராக்கர்’ உபகரணத்தால் ஆண்டுக்கு ஒரு மெகாவாட் திறன் கொண்ட கட்டமைப்பு மூலம் ஆண்டுக்கு 24 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். சூரியஒளி ஆற்றல் உற்பத்தித் துறையில் அறிமுகம் செய்யப்படும் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப இத்துறையில் முதலீடுகளை அதிகரிக்க தமிழக அரசும், மத்திய அரசும் பல்வேறு சிறப்பு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
சூரியஒளி மூலம் பகல் நேரங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தற்போது பகல் நேரங்களில் மட்டுமே பயன்படுத்த முடிகிறது. சேமிப்புக் கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்தினால் பகலில் உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமித்து வைத்து இரவில் பயன்படுத்த முடியும். கடந்த காலங்களில் மின்சேமிப்புக் கட்டமைப்பு வசதி ஏற்படுத்த ஒரு மெகாவாட்டுக்கு ரூ.3 கோடி வரை செலவிட வேண்டியிருந்தது. தற்போது ரூ.1.2 கோடியாக உற்பத்திச் செலவு குறைந்துள்ளது. எனவே, ஆற்றல் உற்பத்தித் துறைக்கு அதிக திட்டங்களை அறிவிக்க வேண்டும். சூரியஒளி ஆற்றல் உற்பத்தித் துறையில் சேமிப்புக் கட்டமைப்பு வசதியை அமல்படுத்தும் தொழில்முனைவோருக்கு சிறப்பு மானிய திட்டங்களையும் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT