Published : 24 Jul 2024 01:56 PM
Last Updated : 24 Jul 2024 01:56 PM
லாஸ் ஏஞ்சலஸ்: பார்பி பொம்மைகள் உலக அளவில் பரவலாக அறியப்படும் பிரபல பொம்மையாக உள்ளது. இதனை தயாரித்து வரும் மேட்டல் நிறுவனம் தற்போது பார்வை மாற்றுத்திறன் கொண்ட பார்பி பொம்மையை சந்தைக்கு கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம் பார்பி பொம்மைகளின் உலகம் மேலும் விரிவடைந்துள்ளது. அதன் அண்மைய வரவாக பார்வை மாற்றுத்திறன் கொண்ட பார்பி மற்றும் கறுப்பின டவுன் சிண்ட்ரோம் பார்பி அறிமுகமாகி உள்ளது. இதில் பார்வை மாற்றுத்திறனுடன் பார்பி பொம்மை வெளிவந்துள்ளது இதுவே முதல் முறை. இதற்காக பார்வை மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்து இயங்கி வரும் அமைப்புடன் இணைந்து பணியாற்றியுள்ளது மேட்டல்.
1959-ம் ஆண்டு பார்பி பொம்மை அறிமுகமானது. தொடர்ந்து பார்பி மொம்மைகள் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தது. பிரபலத்துக்கு ஏற்ப பார்பி பொம்மைகள் மீது விமர்சனங்களும் அதிகரித்தன. யதார்த்தத்தை பார்பி பொம்மைகள் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. நிறம் சார்ந்து பார்பி பொம்மைகள் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. பார்பிகள் மனித இனத்தின் ஒரு குறிப்பிட்ட நிறத்தை தூக்கிப் பிடிக்கிறது. இதனால், குழந்தைகள் தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளப்படுகின்றன என்ற குரல்களும் வலுத்தன.
இதனைத் தொடர்ந்து பார்பி பொம்மைகளை வெளியிட்டு பிரபலமான மேட்டல் நிறுவனம் மாற்றதுக்கு தயாரானது. 2016-ல் ஆசியா, ஆப்பிரிக்கா அனைத்து இன நிறங்களை பிரதிபலிக்கும் பார்பி பொம்மைகள் வெளியிடப்பட்டன. விபத்தில் காயமடைந்த பார்பி, சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் பார்பி, டவுன் சிண்ட்ரோம் பாதிப்பு கொண்ட பார்பி, வெண்புள்ளிகள் கொண்ட பார்பி என வெவ்வேறு பார்பிகள் வெளியாகின. இந்தச் சூழலில் தற்போது பார்வை மாற்றுத்திறன் கொண்ட பார்பி வெளியாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT