Published : 24 Jul 2024 07:06 AM
Last Updated : 24 Jul 2024 07:06 AM

விலை குறைபவை முதல் ரயில்வேக்கு ஒரே ஒரு திட்டம் வரை: மத்திய பட்ஜெட் 2024 - 25 ஹைலைட்ஸ்

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன்: இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.

அப்போது மாணவர்களின் கல்விக்கடன் குறித்து அவர் கூறியதாவது: உள்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயில ரூ.10 லட்சம் வரை மாணவர்களுக்குக் கல்விக்கடன் வழங்கப்படும். மத்திய அரசின் எந்த சலுகைகளும் பெறாத மாணவர்களுக்குக் கல்விக் கடனாக ரூ.10 லட்சம் தரப்படும். இத்திட்டத்தில் ஆண்டிற்கு 1 லட்சம் மாணவர்களுக்கு இ-வவுச்சர்கள் நேரடியாக வழங்கப்படும். கடன் தொகையில் வருடாந்திர வட்டியில் 3 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

பெண்களுக்கும் மாணவர்களுக்கும் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தவிருக்கிறது. பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். தொழில் நிறுவனங்களுடன் கூட்டாக இணைந்து பெண்கள் பணிபுரியும் இடத்தில் அவர்களது குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க குழந்தைகள் பகல் காப்பகம் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு ஊக்குவித்த நிதியிலிருந்து உத்தரவாதத்துடன் ரூ. 7.5 லட்சம் வரையிலான கடன்களை எளிதாக்கும் வகையில் இளைஞர் திறன் திட்ட ஒதுக்கீடு, உயர்த்தப்பட்ட மாதிரி திறன் கடன் திட்டம் என திருத்தப்படும். மாதிரி திறன் கடன் திட்டம் மூலம் ஆண்டுக்கு 25,000 மாணவர்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விலை குறையும் பொருட்கள்: # புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படும் ஒசிமெர்டினிப், துர்வாலுமாப் மற்றும் ட்ராஸ்டுஜுமாப் டெரக்ஸ் டெகன் என்ற 3 முக்கிய மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலை குறையும்.

# மேலும் செல்போன்கள், சார்ஜர்கள் மற்றும் செல்போனின் பிரிட்டட் சர்க்யூட் போர்டு அசெம்ளி ஆகியவற்றுக்கான சுங்க வரியை 20 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதனால் அவற்றின் விலை குறையும்.

# இந்தியாவில் தங்கத்துக்கு அதிக தேவை உள்ளது. இவற்றின் இறக்குமதிக்கான வரி அதிகம் இருந்ததால், தங்கம் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படுவதும் அதிகரித்தது. அதனால் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றுக்கான இறக்குமதி வரியை 10 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைப்பதாக பட்ஜெட்டில் றிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கம், வெள்ளி நகைகளின் விலை குறையும். இதேபோல் பிளாட்டினத்துக்கான வரியும் 6.4 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

# தோல் பொருட்கள், கடல் உணவுகளுக்கான சுங்கவரியும் குறைக்கப்படுவதால் அவற்றின் விலை குறையும்.

# அணு சக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விண்வெளி, பாதுகாப்பு, தொலை தொடர்பு மற்றும் ஹைடெக் எலக்ட்ரானிக்ஸ் தொழில்களுக்கு தேவைப்படும் லித்தியம், தாமிரம், கோபால்ட் உட்பட 25 முக்கிய அரிய வகை தாது பொருட்களுக்கான சுங்க வரிகளுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் இரண்டுக்கு மட்டும் சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. இது இத்தொழில் தொடர்பான பொருட்களின் விலை குறைப்புக்கு வழிவகுக்கும்.

வேளாண்மைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு: வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்தவும், விநியோகம் மற்றும் கட்டமைப்பை மேம்படுத்தவும் கவனம் செலுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் பொருட்கள் உற்பத்தி, சேமிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதால், பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களை சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கப்படும்.

கடுகு, நிலக்கடலை, எள், சோயாபீன்ஸ், சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியில் தற்சார்பு நிலையை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் விநியோகத்தை பலப்படுத்த, முக்கிய கொள்முதல் மையங்களுக்கு அருகே உற்பத்தி தொகுப்புகள் மிகப் பெரிய அளவில் அமைக்கப்படவுள்ளன. இதன்மூலம் காய்கள் உற்பத்தி மற்றும் விநியோகம் மேம்படும். இந்த திட்டத்தில் விவசாய உற்பத்தியாளர் சங்கங்கள், கூட்டுறவுகள், சேகரிப்புக்கு உதவும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், சேமிப்பு கிடங்குகள் மற்றும் மார்க்கெட்டிங் முயற்சிகளை மேம்படுத்துவது ஆகியவை அடங்கும்.

விவசாயத்துக்கு டிஜிட்டல்: பொது கட்டமைப்பை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் விவசாயிகள் மற்றும் அவர்களின் நிலங்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு விரிவான பாதுகாப்பு அளிக்கப்படும். இதன்ஒரு பகுதியாக இந்தாண்டில் 400 மாவட்டங்களில் காரிப் பருவ பயிர்களுக்கான டிஜிட்டல் சர்வே மேற்கொள்ளப்படும். இதன் மூலம் 6 கோடி விவசாயிகளிடம் இருந்து தரவுகள் பெறப்பட்டு, தேசிய பதிவகங்களில் ஒருங்கிணைக்கப்படும். இது வோளாண் சேவைகளுக்கான அணுகலை நெறிப்படுத்தும்.

நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கு புதிய நிதியுதவி திட்டம் கொண்டுவரப்படுகிறது. இறால் குஞ்சு வளர்ப்பு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இறால் பண்ணை மற்றும் ஏற்றுமதிக்கு நபார்டு வங்கி மூலம் நிதியுதவி அளிக்கப்படும். இதன் மூலம் இறால் ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேளாண்துறைக்கு புதிய கூட்டுறவு கொள்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது இதன் மூலம் கூட்டுறவுகள் மேம்படுத்தப்படும். கிராம பொருளாதாரத்தை மேம்படுத்தி வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1,225 கோடி: மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கும் துறைக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.1,225.27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ.1,225.01 கோடியை விட 0.02 சதவீதம் அதிகமாகும். மொத்த ஒதுக்கீட்டில் தேசிய மாற்றுத் திறனாளிகள் நலத்திட்டத்துக்கு ரூ.615.33 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2023-24 -ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட் ஒதுக்கீடான ரூ.502 கோடியை விட அதிகமாகும்.

இதுபோல் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வாங்க அல்லது பொருத்துவதற்கான நிதி ரூ.305 கோடியில் இருந்து ரூ.315 கோடியாகவும் தீன்தயாள் ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்ட ஒதுக்கீடு ரூ.130 கோடியிலிருந்து ரூ.165 கோடியாகவும் உயர்ந்துள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு ரூ.142.68 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்துக்கு ரூ. 10 லட்சம் கோடி: நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்துக்காக ரூ.10 லட்சம் கோடி மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: கடந்த 2023-24-ம் நிதியாண்டில் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்துக்காக மத்திய வீடு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்துக்கு ரூ.69,270.72 கோடி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகை 2024-25-ம் நிதியாண்டில் ரூ.82,576.57 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 19.2 சதவீதம் அதிகமாகும்.

நாடு முழுவதும் 14 மிகப்பெரிய நகரங்களில் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகளுக்காக ஒரு கோடி வீடுகள் கட்டப்படும். தங்கும் விடுதி - வாடகை வீடுகள் மாதிரியில் இவை கட்டப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.10 லட்சம் கோடியை ஒதுக்கும். பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் (பிஎம்ஏஒய்) அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி வீடுகள் நாடு முழுவதும் கட்டப்படும்.

தற்போது மாநிலங்களில் அதிகமாக உள்ள முத்திரை வரியைக் குறைக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் பெண்கள் பெயரில் வீடுகள் வாங்கும்போது அல்லது கட்டப்படும்போது அதற்கான வரிகளைக் குறைக்கவேண்டும் என்றும் மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

பணிபுரியும் பெண்களுக்காக மகளிர் ஹாஸ்டல், பகல் நேர தங்கும் விடுதிகள் ஆகியவை தொழிற்பேட்டைகள், தொழிற்பூங்காக்களில் அமைக்கப்படும். இதற்காக தொழில்துறையுடன் ஒப்பந்தம் செய்யப்படும். நகர்ப்புறப் பகுதி நில ஆவணங்கள் ஜிஐஎஸ் மேம்ப் வசதியுடன் டிஜிட்டல்மயமாக்கப்படும். மேலும் தகவல் தொழில்நுட்ப வசதி அடிப்படையிலான சொத்து ஆவண நிர்வாகம், மேம்படுத்துதல், வரி நிர்வாக முறை ஆகியவை கொண்டு வரப்படும். தேசிய நகர்ப்புற டிஜிட்டல் திட்டத்துக்காக ரூ.1,150.02 கோடியை மத்திய அரசு ஒதுக்கும்.

30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் 14 பெரிய நகரங்களில் போக்குவரத்து வசதி மேம்படுத்தப்படும். தற்போது இந்திய நகரங்களில் 905 கிலோமீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை உள்ளது. மேலும் 900 கிலோமீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிதியாண்டில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக ரூ.24,931.98 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமரின் இ-பஸ் சேவா திட்டத்துக்காக ரூ.1,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கு மத்திய அரசு ரூ.1.48 லட்சம் கோடி நிதி: மத்திய பட்ஜெட் 2024-25-ல் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளுக்கு ரூ.1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். ‘விக்சித் பார்த்’ எனும் பெரிய பாய்ச்சலை இந்தியா அடைய கல்வித்துறையில் கூடுதல் நிதி ஒதுக்கீடு அவசியம் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வரும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இடம்பெறச் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி வருகிறார். இதனிடையில் நடப்பாண்டின் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் ரூ. 73 ஆயிரம் கோடி பள்ளிக்கல்வித்துறை மற்றும் எழுத்தறிவித்தல் திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் ரூ. 68, 804.85 கோடி இத்துறைக்கு ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பள்ளிக்கல்விக்கான நிதி ஒதுக்கீடு நடப்பாண்டில் உயர்த்தப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து வளரும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகளுக்கான  திட்டத்தின்கீழ் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதாவது அரசு பள்ளிகளை மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்தும் இத்திட்டத்தின்கீழ் கடந்த 2023-24-ம் நிதியாண் டில் ரூ.2, 800 கோடி ஒதுக்கப்பட்டது; தற்போது ரூ. 6, 050 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏழு நிதியாண்டுகளில் கல்வி வளர்ச்சிக்கு இந்திய அரசு செய்துவரும் நிதி ஒதுக்கீடு ஆண்டுதோறும் 9.4 சதவீதம் உயர்ந்திருப்பதாக பொருளாதார கணகெடுப்பில் தெரியவந்துள்ளது.

மறுபுறம் 3, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களின் திறன்களை மதிப்பிடு செய்யும் தேசிய சாதனை கணக்கெடுப்பு (என்ஏஎஸ்) மாணவர்களின் கற்றல் திறனில் சறுக்கல் ஏற்பட்டிருப்பதைக் கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில், டிஜிட்டல் யுகத்துக்கு தேவையான திறன்களை மாணவர்களுக்கு நாடு தழுவிப் பயிற்றுவிக்கவும், ஆசிரியர்களின் தொழிற்திறனை மேம்படுத்தவும், உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் ஈடுபட்டு மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடுஅவசியம் என்று துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விற்பனையில் வெளிப்படைத்தன்மைக்கு கிராம நிலங்களுக்கு தனி அடையாள எண்: கிராமப்புற நில விற்பனை மற்றும் அதன் வரிவசூலில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரும் வகையில், ஒவ்வொரு நிலத்துக்கும் தனித்த அடையாள எண் வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படுள்ளது. இந்திய குடிமக்களுக்கு ஆதார் எண் வழங்கப்படுவது போல, இது நிலங்களுக்கு வழங்கப்படும் ஆதார் ஆகும். ஏற்கெனவே நகர்ப்புற நிலங்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிற நிலையில், தற்போது கிராமப்புற நிலங்களுக்கும் தனித்த அடையாள எண் வழங்கப்பட உள்ளது.

நிலத்துக்கான இந்தப் பிரத்யேக எண் மூலம், நிலம் அமைந்துள்ள மாநிலம், மாவட்டம், கிராமம், உரிமையாளர் பெயர் எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முடியும். நிலத்தின் அளவீடு உள்ளிட்ட விவரங்களும் இதில் இடம்பெற்றிருக்கும். இதனால், நில விற்பனையில் நடக்கிற மோசடிகள் குறையும் என்றும் வரிவசூல் செயல்பாடு எளிமையாகும் என்றும் கூறப்படுகிறது.

இதுதவிர்த்து கிராமப்புற நிலவரைபடங்களை டிஜிட்டல் மயமாக்குதல், நிலங்களை ஆய்வு செய்தல் மற்றும் நிலப் பதிவேட்டை நிறுவுதல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் நகர்ப்புற நிலங்களின் அனைத்துத் தகவல்களும் புவியியல் தகவல் அமைப்பு உதவியுடன் டிஜிட்டல்மயமாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “மத்திய அரசு மேற்கொண்டுவரும் நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒருபகுதியாக இந்தத் திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலச் சீர்திருத்தத் திட்டங்களை செயல்படுத்த மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்படும். அடுத்த 3 ஆண்டுகளுக்கு இத்திட்டங்களை நிறைவேற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கும்” என்று தெரிவித்தார்.

புற்றுநோய் மருந்துக்கு சுங்க வரி விலக்கு: கடந்த 2023-ல் உலகளவில் 96 லட்சம் முதல் 1 கோடி பேரின் உயிரிழப்புக்கு புற்றுநோயே காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய புற்றுநோய் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையின்படி புற்றுநோயாளிகள் எண்ணிக்கையில் சீனா மற்றும் அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

புற்றுநோய் சிகிச்சைக்கு அதிக செலவு ஏற்படுவதால் பலரால் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் இந்த வரி விலக்கு அரசின் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. இதுதவிர, மருத்துவ எக்ஸ்ரே இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் எக்ஸ்ரே குழாய்கள் மற்றும் பேனல் டிடெக்டர்களுக்கு அடிப்படை சுங்க வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, சுகாதார அமைச்சகத்துக்கு ரூ.90,958.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய பட்ஜெட்டை விட 12.9 சதவீதம் அதிகமாகும். இந்த தொகையில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைக்கு ரூ.87,656.90 கோடியும், மருத்துவ ஆராய்ச்சி துறைக்கு ரூ.3,301.73 கோடியும் கிடைக்கும்.

இந்தியாவிடமிருந்து அதிகபட்ச நிதியுதவி பெறும் நாடு பூடான்: இந்தியாவிடமிருந்து நடப்பாண்டில் ரூ.2, 068.56 கோடி பூடான் மானியம் பெறவிருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பூடான் நாட்டுக்கு ரூ.2,400 கோடி வழங்கப்பட்டது. ஆனால், அதில் ரூ. 2, 398.97 கோடியை மட்டுமே பூடான் செலவிட்டதாக தெரியவந்துள்ளது.

2024-25-ம் நிதியாண்டில் இந்தியாவிடமிருந்து மானியங்களைப் பெறுவதில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகள் பின்வருமாறு: 1. பூடான் - ரூ. 2, 068.56 கோடி 2. நேபாளம் - ரூ. 700 கோடி 3. மாலத்தீவு - ₹ 400 கோடி 4. மொரிஷியஸ் - ரூ. 370 கோடி 5. மியான்மர் - ரூ. 250 கோடி 6. இலங்கை - ரூ. 245 கோடி 7. ஆப்கானிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் - தலா ரூ. 200 கோடி 8. வங்கதேசம் - ₹ 120 கோடி 9. சீஷெல்ஸ் - ₹ 40 கோடி 10. லத்தீன் அமெரிக்க நாடுகள் - ரூ. 30 கோடி

பாதுகாப்பு துறைக்கு ரூ.6.21 லட்சம் கோடி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் நன்றி: 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு ரூ.6,21,940 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2023-24 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட தொகையை விட 4.72% அதிகம். கடந்த நிதி யாண்டில் ரூ.5.94 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. மேலும் நடப்பு நிதியாண்டின் ஒட்டுமொத்த பட்ஜெட் தொகையில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 12.9% ஆக உள்ளது.

மொத்த நிதி ஒதுக்கீட்டில் 27.67% (ரூ.1.72 லட்சம் கோடி) ஆயுத கொள்முதல் உள்ளிட்ட மூலதன செலவுக்கு ஒதுக்கப்படும். 14.82% வருவாய் செலவினம் மற்றும் இயக்க செலவினத்துக்கும், 30.68% சம்பளத்துக்கும், 22.72% ஓய்வூதியத்துக்கும், 4.15% பாதுகாப்புத் துறையின்கீழ் இயங்கும் சிவில் அமைப்புகளுக்கும் செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “நடப்பு நிதியாண்டில் ஒட்டுமொத்த பட்ஜெட் தொகையில் அதிக அளவாக 12.9% அதாவது ரூ.6.21 லட்சம் கோடியை பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கிய நிதியமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மூலதன செலவுக்காக ரூ.1.72 லட்சம் கோடி ஒதுக்கி இருப்பதன் மூலம் ராணுவத்தின் திறன் வலுவடையும்.

உள்நாட்டில் ராணுவ தளவாடம் கொள்முதல் செய்ய ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கி இருப்பதால் ‘உள்நாட்டில் தயாரிப்போம்’ திட்டம் ஊக்கம் பெறும். எல்லை சாலை திட்டங்களுக்கு 30% கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ராணுவ தளவாட உற்பத்தியில் ஸ்டார்ட்-அப்களை ஊக்குவிக்க ரூ.518 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என பதிவிட்டுள்ளார்.

தங்கம், வெள்ளி, பிளாட்டினத்துக்கு சுங்க வரி 6 சதவீதமாக குறைப்பு: தங்கம், வெள்ளி, பிளாட்டினத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் போது விதிக்கப்படும் அதிக சுங்க வரியால் உள்நாட்டில் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சுங்க வரியை குறைக்க வேண்டும் என்று விலை உயர்ந்த கற்கள் மற்றம் தங்க விற்பனையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற பொருட்களை இறக்குமதி செய்யும் போது விதிக்கப்படும் சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில தொலைதொடர்பு சாதனங்களுக்கு 10 சதவீத வரி 15 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

மூலதன ஆதாய வரி உயர்வால் பங்குச் சந்தையில் சரிவு: பங்குச் சந்தையில் நேற்று சரிவு காணப்பட்டது. சென்செக்ஸ் 73 புள்ளிகள் குறைந்து 80,429 ஆகவும், நிஃப்டி 30 புள்ளிகள் குறைந்து 24,479 ஆகவும் சரிந்தன. சதவீத அளவில் சென்செக்ஸ் 0.09%, நிஃப்டி 0.12% சரிவைக் கண்டன. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், மூலதன ஆதாய வரி (Capital gains tax) உயர்த்தப்பட்ட நிலையில், நேற்றைய தினம் பங்குச் சந்தையில் சரிவு காணப்பட்டது.

நிதி மற்றும் நிதி சாரா சொத்துகளின் விற்பனை மூலம் பெறப்படும் லாபத்துக்கு விதிக்கப்படும் வரி மூலதன ஆதாய வரி ஆகும். பங்குச் சந்தையைப் பொறுத்தவரையில், முதலீட்டாளர் தன் வசமுள்ள பங்குகளை ஓராண்டுக்கு முன்பாக விற்றால், அதில் கிடைக்கும் லாபத்துக்கு குறுகிய கால மூலதன ஆதாய வரியும் (எஸ்சிஜிடி), ஓராண்டுக்குப் பிறகு விற்று, ரூ.1 லட்சத்துக்கு மேல் லாபம் ஈட்டினால் நீண்டகால மூலதன ஆதாய வரியும் (எல்டிசிஜி) விதிக்கப்படுகிறது.

எஸ்சிஜிடி 15 சதவீதமாக இருந்துவந்த நிலையில், தற்போது அது 20 சதவீதமாகவும், எல்டிசிஜி 10 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர்த்து, பியூச்சர் மற்றும் ஆப்சன் தொடர்பான பத்திர பரிவர்த்தனை வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆப்சன் விற்பனைக்கான பரிவர்த்தனை வரி 0.0625 சதவீதத்திலிருந்து 0.1 சதவீதமாகவும் பியூச்சருக்கான பரிவர்த்தனை வரி 0.0125 சதவீதத்திலிருந்து 0.02 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நேற்றைய தினம், பங்குச் சந்தை சரிந்தது. அதிகபட்சமாக, ராம் பைனான்ஸ் 3.12%, எல் அண்ட் டி 3.11%, ஹிண்டால்கோ 2.80% பஜாஜ் பைனான்ஸ் 2.28%, ஓஎன்ஜிசி 2.07% என்ற அளவில் சரிந்தன. 2024 - 25 நிதி ஆண்டுக்கான முழுபட்ஜெட்டில் மூலதன ஆதாய வரி உயர்த்தப்படும் என்று ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டது. அப்படி உயர்த்தப்படும் பட்சத்தில் பங்குச் சந்தையில் சரிவு ஏற்படக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

நிதி பற்றாக்குறை ஜிடிபியில் 4.9% ஆக இருக்கும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறியதாவது: நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறை நாட்டின் ஜிடிபியில் 4.9% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மக்களவை தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 5.1 சதவீதத்தைவிட குறைவு ஆகும். கடந்த நிதியாண்டில் இது 5.8% ஆக இருந்தது.

நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ.14.01 லட்சம் கோடியாகவும் நிகர கடன் மதிப்பு ரூ.11.63 லட்சம் கோடியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 2025-26 நிதியாண்டில் நிதி பற்றாக்குறையை 4.5% ஆக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-21 நிதியாண்டில் கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நிதி பற்றாக்குறை 9.2% ஆக அதிகரித்தது. அதன் பிறகு நிதி பற்றாக்குறையை மத்திய அரசு படிப்படியாகக் குறைத்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை - நிமிடங்களில்...

ரயில்வேக்கு ஒரே ஒரு திட்டம் - நிறுவனங்கள் ஏமாற்றம்: நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில், “ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ், தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக விசாகப்பட்டினம்-சென்னை தொழில் துறை வழித்தடத்தில் உள்ள கொப்பர்த்தி முனையம் மற்றும் ஹைதராபாத்-பெங்களூரு தொழில்துறை வழித்தடத்தில் உள்ள ஓர்வக்கல் முனையத்தில் தண்ணீர், மின்சாரம், ரயில்வே, சாலை உள்ளிட்ட அத்தியாவசிய உள்கட்டமைப்புகளுக்கு நிதி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

2024-25 பட்ஜெட் உரையில் ரயில்வே தொடர்பான ஒரே அறிவிப்பு இதுவாக மட்டுமே இருந்தது. ரயில்வே அமைச்சகம் இம்மாத இறுதிக்குள் அதன் நெட்வொர்க்கை 100 சதவீதம் மின்மயமாக்குவதையும், குறைந்தபட்சம் 2,000 கி.மீ. புதிய பாதைகள் அமைப்பதையும் இலக்காக கொண்டுள்ளது. அத்துடன் புதிய வந்தே பாரத் ரயில்களையும், விபத்துகளை தடுக்க கவாச் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட திட்டங்களுக்கு மேலும் தாரளமான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரே ஒரு திட்டத்துக்கான அறிவிப்பு மட்டும் வெளியானது அந்த துறைக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.

இதையடுத்து, ரயில் விகாஸ் நிகாம், ரயில் டெல் கார்ப்பரேஷன் தலா 6 சதவீதமும், இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் 5 சதவீதமும், இர்கான் இண்டர்நேஷனல் 9 சதவீதமும், என்பிசிசி பங்கின் விலை 4 சதவீதமும் வீழ்ச்சியடைந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x