Published : 24 Jul 2024 04:17 AM
Last Updated : 24 Jul 2024 04:17 AM

வருமான வரி புதிய விகிதத்தில் ரூ.7.75 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லை: மூத்த ஆடிட்டர்கள் தகவல்

புதுடெல்லி: தனிநபர் வருமான வரி முறையில் பழைய வரி விகிதத்தில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 2.5 லட்சமாக நீடிக்கிறது. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 5 % வரி, ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20% வரி, ரூ.10 லட்சத்துக்கு மேல் 30% வரி என்ற விகித முறை அப்படியே தொடர்கிறது.

புதிய வரி விகிதம்: தற்போதைய நடைமுறையின் படி புதிய வரி விகிதத்தில் வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உள்ளது. ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை 5% வரி, ரூ.6 லட்சம் முதல் ரூ.9லட்சம் வரை 10% வரி, ரூ.9லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15% வரி, ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20% வரி, ரூ.15 லட்சத்துக்கு மேல் 30% வரி விதிக்கப்படுகிறது.

மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் புதிய வரி விகிதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதன்படி ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை 5% வரி, ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 10% வரி, ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15%, ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20% வரி, ரூ.15 லட்சத்துக்கு மேல் 30% வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

புதிய வரி விகிதத்தில் நிரந்தர கழிவு ரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து குறித்து மூத்த ஆடிட்டர்கள் கூறியதாவது: வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 87ஏ-ன் கீழ் தள்ளுபடி பெறும்போது புதிய வரி விகிதத்தில் ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி செலுத்த தேவையில்லை. தற்போதைய மத்திய பட்ஜெட்டில் நிரந்தர கழிவுரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்படி ரூ.7.75 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வருமான வரி செலுத்த தேவையில்லை. ஆண்டு வருமானம் ரூ.7.75 லட்சத்தை தாண்டிவிட்டால் ரூ.3 லட்சம் வரை மட்டுமே வரிவிலக்கு வழங்கப்படும். ரூ.3 லட்சத்திலிருந்து வரி செலுத்த வேண்டும்.

புதிய வரி விகிதத்தின்படி ரூ.8.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு ரூ.27,500 வருமான வரி செலுத்த வேண்டும். மாத சம்பளதாரர்கள், தங்களது ஆடிட்டர்களுடன் ஆலோசனை நடத்தி அவரவர் ஊதியத்துக்கு ஏற்ப பழைய விகிதம் அல்லது புதிய விகிதத் தில் வருமான வரி செலுத்தலாம்.

இவ்வாறு மூத்த ஆடிட்டர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x