Published : 24 Jul 2024 05:24 AM
Last Updated : 24 Jul 2024 05:24 AM

பழைய வரி விகிதம் ரத்து செய்யப்படுமா? - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்

புதுடெல்லி: பழைய வரி விகிதம்ரத்து செய்யப்படுமா என்பதற்கு இப்போது பதில் அளிக்க முடியாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகு டெல்லியில் நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வரிவிதிப்பு நடைமுறைகளை எளிமைப்படுத்த மத்திய அரசு விரும்புகிறது. அதேநேரம் நேரடிமற்றும் மறைமுக வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. நீண்ட கால முதலீட்டுக்கான வரி 12.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் முதலீடுகள் அதிகரிக்கும்.

மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடவில்லை என்பதற்காக அந்த மாநிலங்களுக்கு எதுவுமே இல்லைஎன்று அர்த்தம் கிடையாது. பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களுக்கான திட்டங்களும் இடம் பெற்றுள்ளன.

வேலைவாய்ப்பு- கல்வி, குறு-சிறு நிறுவனங்கள், நிலம், புதிய வாய்ப்புகள், இளைஞர் நலன்,நடுத்தர வர்க்க மக்கள், எரிசக்தி பாதுகாப்பு, சீர்திருத்தம், தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட்டில் வருமான வரி பழைய விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. புதிய வரி விகிதத்துக்கு மட்டும் சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளன. இதை சுட்டிக் காட்டிய நிருபர்கள், பழைய வரி விகித நடைமுறை ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரிவிதிப்பை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காகவே வருமான வரி புதிய விகிதம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பழைய வரி விகிதமும் தொடர்கிறது. பழைய வரி விகிதம் ரத்து செய்யப்படுமா என்பதற்கு இப்போது பதில் அளிக்க முடியாது என்று தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட்டில் ரயில்வேதுறைக்கு போதிய நிதி ஒதுக்கப்படாதது ஏன் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில்அளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், “கடந்த பிப்ரவரி 1-ம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அந்த பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.2.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதோடு கூடுதலாக ரூ.10,000 கோடி நிதி ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x