Published : 24 Jul 2024 04:55 AM
Last Updated : 24 Jul 2024 04:55 AM

மத்திய பட்ஜெட் நடுத்தர வர்க்க மக்களை மேம்படுத்தும்: பிரதமர் நரேந்திர மோடி கருத்து

புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டால் நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: மத்திய பட்ஜெட்டை தயார் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது குழுவினரை வாழ்த்துகிறேன். இந்த பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. கிராமங்கள், ஏழைகள், விவசாயிகளின் வாழ்வில் வளம் பெருகும்.

கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர். தற்போதைய பட்ஜெட், நடுத்தர வர்க்க மக்களை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பட்ஜெட் திட்டங்களால் அவர்களுக்கு புதிய உத்வேகம் கிடைக்கும். அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும். இளம் தலைமுறையினரின் நலன் கருதி கல்வி, திறன்சார் மேம்பாட்டுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது.

பழங்குடியின மக்கள், பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த மக்களை முன்னேற்றும் வகையில்பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்திருக்கிறது.

குறு, சிறு நிறுவனங்கள், சிறிய வியாபாரிகள், சிறிய தொழிற்சாலைகளின் முன்னேற்றத்துக்கு புதிய பாதை அமைத்து கொடுக்கப்பட்டிருக்கிறது. உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் நாட்டின் பொருளாதாரம் அதிவேகமாக வளரும்.

வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில்பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. உற்பத்தியுடன்கூடிய ஊக்கத்தொகை திட்டம் பெரும் வெற்றியை பெற்று உள்ளது. இதைத் தொடர்ந்து வேலைவாய்ப்புடன்கூடிய ஊக்குவிப்பு திட்டம்பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த திட்டத்தால் நாடு முழுவதும் கோடிக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கான முதல் மாத ஊதியத்தை மத்தியஅரசே வழங்கும். ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். இதன்மூலம் பெரிய நிறுவனங்களில் அவர்களுக்கு எளிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

முத்ரா கடன் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. எவ்வித உத்தரவாதமும் இன்றி இந்த தொழில் கடன் வழங்கப்படும். இதன்மூலம் சுயவேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். குறிப்பாக முத்ரா திட்டத்தால் பெண்கள், பட்டியலின மக்கள், பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்டோர் அதிகமாக பயன் அடைவார்கள்.

உலகின் உற்பத்தி மையமாக பாரதத்தை மாற்ற வேண்டும். இதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் குறு, சிறு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். அந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

குறு, சிறு நிறுவனங்கள் எளிதாககடன் பெறும் புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உற்பத்தி, ஏற்றுமதிக்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். மின்னணு வணிக ஏற்றுமதிமையங்கள் உருவாக்கப்படும். ஒரு மாவட்டம், ஒரு பொருள் திட்டத்தின்கீழ் உணவு பொருட்களின் தரத்தை கண்டறியும் 100 மையங்கள் அமைக்கப்படும்.

மத்திய பட்ஜெட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக விண்வெளி சார்ந்த வணிகத்தை ஊக்குவிக்க ரூ.1,000 கோடியில் நிதியம் உருவாக்கப்பட உள்ளது. ஏஞ்சல் வரி நீக்கப்பட்டு உள்ளது.

12 தொழில் பூங்காக்கள்: நாடு முழுவதும் புதிதாக 12 தொழில்பூங்காக்கள் உருவாக்கப்படும். புதிய துணை நகரங்கள் அமைக்கப்படும். 14 நகரங்களின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த திட்டங்களால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும், வேலைவாய்ப்புகள் பெருகும்.

ஆயுத ஏற்றுமதியில் பாரதம், புதிய சாதனைகளை படைத்து வருகிறது. தற்போதைய பட்ஜெட்டில் ஆயுத உற்பத்தியில் தன்னிறைவை எட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதேபோல நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த புதியதிட்டங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதன்மூலம் ஏழைகள், நடுத்தர வர்க்க மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஏழை, நடுத்தர மக்களின்நலன் கருதி வருமான வரியில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. புதிய வருமான வரி விகிதத்தில் நிலையான விலக்கு வரம்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. டிடிஎஸ் விதிகள் எளிமையாக்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் வருமான வரி செலுத்துவோர் கூடுதலாக சேமிக்க முடியும்.

நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளின் நலனுக்காக பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக உணவு தானியங்களை சேமிக்கும் உலகின் மிகப்பெரிய கிடங்குகள் திட்டம், சிறுவிவசாயிகளுக்காக புதிய காய்கனி சந்தைகள் உள்ளிட்டவை வேளாண் துறையில் புரட்சியை ஏற்படுத்தும். இந்த திட்டங்களால் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கும். நடுத்தர வர்க்க மக்களுக்கு சத்தான உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் கிடைக்கும்.

வேளாண் துறையில் தன்னிறைவை எட்டுவது மிகவும் அவசியம். அதற்காக பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்காக பல்வேறு ஊக்கத் திட்டங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

வறுமையை ஒழிக்கவும் ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றவும் பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் 3 கோடி ஏழை குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள்கட்டிக் கொடுக்கப்படும். 5 கோடி பழங்குடி குடும்பங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். 25,000 குக்கிராமங்களில் சாலைகள் அமைக்கப்படும்.

மத்திய பட்ஜெட்டால் வேலைவாய்ப்புகள், சுயவேலைவாய்ப்புகள் பெருகும். ஒளிமயமான எதிர்காலம் உருவாகும். உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடு, வளர்ச்சி அடைந்த நாடாக பாரதம் உருவெடுக்க, தற்போதைய மத்திய பட்ஜெட் உந்து சக்தியாக இருக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x