Published : 23 Jul 2024 05:32 PM
Last Updated : 23 Jul 2024 05:32 PM

வாடகை வருமானத்தை ‘வீட்டு சொத்து வருமானம்’ என காட்ட வேண்டும்: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

புதுடெல்லி: வரி செலுத்தும் தனிநபர்கள் வீட்டு வாடகை மூலம் தங்களுக்கு வரும் வருமானத்தை இனி, ‘வீட்டுச் சொத்துகளில் இருந்து வருமானம்’ என்ற தலைப்பில் காட்டி வரி செலுத்த வேண்டும் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்தும் தனிநபர்கள் வரி பொறுப்புகளை குறைப்பதற்காக, வரி செலுத்தும்போது வாடகை வருமானங்களை வியாபாரம் மற்றும் தொழிலில் இருந்து வரும் வருமானம் அல்லது லாபம் என்று காட்டுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், "வரி செலுத்தும் தனிநபர்கள், ஒரு வீட்டை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வாடகைக்கு விட்டு வரும் வருமானம் இனி தொழில் அல்லது வியாபாரம் மூலமான வருமானம் அல்லது ஆதாயம் என்ற தலைப்பின் கீழ் பதிவு செய்யாமல், வீட்டு சொத்துகள் மூலமான வருமானம் என்ற தலைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்டு வரி வசூலிக்கப்படும் என்று பரிந்துரைக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.

பட்ஜெட்டில் இது குறித்து விரிவாக அரசு குறிப்பிட்டுள்ளது. சட்டப்பிரிவு 28-ல் எந்த வகை வருமானமெல்லாம் வியாபாரம் மற்றும் தொழில் மூலம் வரும் வருமானம் அல்லது ஆதாயம் என்ற தலைப்பின் கீழ் வரி விதிப்புக்கு உட்பட்டது என்று விளக்கப்பட்டுள்ளது. அதன்படி, சில வரிசெலுத்துவோர், வீடுகளை முழுமையாகவோ, பகுதியாகவோ வாடகைக்கு விட்டு வரும் வருமானத்தை, வீட்டு சொத்து மூலம் வரும் வருமானம் என்ற தலைப்பின் கீழ் காட்டுவதற்கு பதிலாக, வியாபாரம் மற்றும் தொழில் மூலம் வரும் வருமானம் அல்லது ஆதாயம் என்ற தலைப்பின் கீழ் காட்டுகின்றனர்.

அதன்படி வீட்டு சொத்துக்கள் மூலம் வரும் வருமானத்தை தவறான தலைப்பின் கீழ் வருமானமாக காட்டுவதன் மூலமாக தங்களின் வரி பொறுப்புகளை கணிசமான குறைத்துக் காட்டுகின்றனர். எனவே, வரி செலுத்தும் தனிநபருக்கு வீட்டு வாடகை மூலமாக வரும் வருமானம் இனி வியாபாரம் அல்லது தொழில் மூலமான வருமானம் அல்லது ஆதாயம் என்ற தலைப்பின் கீழ் வரி வசூலிக்கப்படாது. அதற்கு பதிலாக வீட்டு சொத்தின் மூலமான வருமானம் என்ற தலைப்பின் கீழ் பதியப்பட்டு வரி வசூலிக்கப்படும் என்ற வகையில் சட்டப்பிரிவு 28-ன் ஒரு திருத்தம் மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத் திருத்தம், 2025, ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும், அதன்படி, மதிப்பீட்டு ஆண்டு 2025-26 மற்றும் அதனைத் தொடர்ந்த மதிப்பீட்டு ஆண்டுகளுக்கு பொருந்தும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x