Published : 23 Jul 2024 03:18 PM
Last Updated : 23 Jul 2024 03:18 PM

100 நகர் பகுதிகளில் தொழில் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி: மாநிலங்களுடனும், தனியார் துறையுடனும் இணைந்து 100 நகர் பகுதிகளில், முழுமையான உள்கட்டமைப்புடன் கூடிய முதலீட்டுக்குத் தயாராக உள்ள தொழில் பூங்காக்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று (ஜூலை 23) காலை தாக்கல் செய்தார். அவர் தனது உரையில், "மாநிலங்களுடனும், தனியார் துறையுடனும் இணைந்து 100 நகர் பகுதிகளில், முழுமையான உள்கட்டமைப்புடன் கூடிய முதலீட்டுக்குத் தயாராக உள்ள தொழில் பூங்காக்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். தேசிய தொழில் பெருவழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 12 தொழில் பூங்காக்களை உருவாக்க அனுமதி அளிக்கப்படும்.

முக்கிய கனிமங்கள் இயக்கம்: உற்பத்தி, சேவைத் துறைக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் வகையில், மத்திய பட்ஜெட் 2024-25-ல், கனிமங்களை உள்நாட்டு உற்பத்தி, முக்கிய கனிமங்களின் மறுசுழற்சி ஆகியவற்றுக்காக முக்கிய கனிமங்கள் இயக்கம் தொடங்கப்படும். கடலுக்கு அப்பால் கனிமங்களை வெட்டியெடுப்பதில் கவனம் செலுத்தும் வகையில், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் அடிப்படையில் முதல் தொகுதி சுரங்க ஏலம் தொடங்கப்படும்.

தொழிலாளர் தொடர்பான சீர்திருத்தங்கள்: மத்திய பட்ஜெட் 2024-25-ல் தொழிலாளர்களுக்கு பரந்த அளவிலான சேவைகளை வழங்குவதற்கான அறிவிப்புகளைக் கொண்டுள்ளது. மற்ற இணையதளங்களுடன் இ-ஷ்ரம் தளத்தின் ஒருங்கிணைப்பு தீர்வுகளை எளிதாக்கும். 'அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை' நோக்கமாகக் கொண்டு, ஷ்ரம் சுவிதா, சமாதான் ஆகிய இணையதளங்களின் செயல்பாடுகளை எளிதாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x