Published : 16 May 2018 08:48 AM
Last Updated : 16 May 2018 08:48 AM
1980-க்குப் பிறகு திருப்பூரில் பின்னலாடை வர்த்தகம் வளரத் தொடங்கியது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளும், திருப்பூரின் பின்னலாடை சென்று சேர்ந்ததால், அந்நியச் செலவாணியை அதிக அளவில் ஈட்டியது. தொடர்ச்சியாக ஏற்றுமதிக்கு கிடைத்து வந்த பல்வேறு சலுகைகளால் பின்னலாடைத்துறை நன்கு வளர்ச்சியை எட்டியது.
“சாய ஆலைகளால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதாகக் கூறி, 2010-ம் ஆண்டில் 826 சாயத் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. அன்றைக்கு கூட, இப்போது உள்ளதுபோல பாதிப்பு இல்லை” என்கிறார் திருப்பூரின் மூத்த வர்த்தகர் ஒருவர். அவர் மேலும் கூறுகையில், உள்நாட்டு வர்த்தகமும், ஏற்றுமதியும் இரு கண்களைப் போல. பணமதிப்பு நீக்கம், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இன்று தொழில்துறையை நிலை குலையச் செய்துவிட்டன.
ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த ‘டிராபேக்’ உட்பட சலுகைகளை குறைத்தது, பெரும் பின்னடைவை தொழில்துறை சந்திக்கத் தொடங்கியது. திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி ஒரு லட்சம் கோடியாக உயர்த்துவோம் என தொழில் துறையினர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரகடனம் செய்த நிலையில், இன்றைக்கு 15 சதவீதம் ஏற்றுமதி சரிந்திருப்பதன் மூலம் மத்திய, மாநில அரசுகள் தொழில்துறையின் மீது எந்தளவு அக்கறையுடன் செயல்படுகிறது என்பதை அறியலாம். இன்றைக்கு ஆதரவற்ற குழந்தை சமூகத்தில் எப்படி வளருமோ, அதே நிலையில் தான் பின்னலாடைத் துறையின் நிலையும் உள்ளது என்றார்.
இந்தியாவின் ஆயத்த ஆடைகள் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலகளாவிய பங்கில் இந்தியாவின் பங்கு 3.8 சதவீதம் ஆகும். இந்திய அளவில் பின்னலாடை ஏற்றுமதியில் 48 சதவீதத்தை திருப்பூர் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறது. 2016-17-ம் நிதி ஆண்டில் ரூ.26 ஆயிரம் கோடி வர்த்தகம் செய்துள்ளது. இது 2017-18- நிதி ஆண்டில் ரூ. 23 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது என்கின்றனர்.
காரணம் என்ன?
இது தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் குமார் துரைசாமி கூறியதாவது:
பணமதிப்பு நீக்க நடவடிக்கை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போது 4 மாதங்களுக்கு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை கூட ஏற்பட்டது. ஜி.எஸ்.டி. அறிமுகத்துக்குப் பின், ஏற்றுமதிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் 5-7 சதவீதம் வரை குறைக்கப்பட்டன. வங்கதேசம், இலங்கை, வியட்நாம், கம்போடியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஐரோப்பிய இறக்குமதியாளர்கள் வரி இன்றி, இறக்குமதி செய்ய திறந்தவெளி ஒப்பந்தத்தால் நம்முடைய நாட்டை விட 10 சதவீதம் குறைவாக விற்பனை செய்கிறார்கள்.
அங்கு தொழில்முனைவோர்களுக்கு வழங்கும் சலுகைகள், வசதி வாய்ப்பு, தொழில் கட்டமைப்பு ஆகிய சலுகைகள் உற்பத்தி செலவை பெருமளவு குறைக்க வைத்துள்ளன. இங்கு ஜிஎஸ்டியை ஆறுமாதங்கள் ஆகியும் திரும்பப் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. உற்பத்தி சிக்கலானது. இதனால் 85 சதவீத ஏற்றுமதி நிறுவனங்கள் இறக்குமதியாளர்கள் கேட்கக்கூடிய நேரத்துக்கு, தங்களது ஆடைகளை தர முடியாமல் உற்பத்தி திறனில் பெருமளவு குறைக்க நேரிட்டது. இதனால் அந்நிய நாட்டு வர்த்தகர்கள் அண்டை நாடுகளை நாடியதால் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் சரிந்துள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT