Published : 22 Jul 2024 10:03 PM
Last Updated : 22 Jul 2024 10:03 PM

வேலைவாய்ப்பில் ஏஐ ‘தாக்கம்’ - பொருளாதார ஆய்வறிக்கை 2023-24 சொல்வது என்ன?

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2024-25-ம் ஆண்டில் 6.5 சதவீதத்துக்கும், 7 சதவீதத்துக்கும் இடையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

> நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2023-24-ம் நிதியாண்டில் 8.2% அளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பதுடன், நான்கு காலாண்டுகளில் மூன்றில் 8 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. தொழில்துறை வளர்ச்சி விகிதம் 9.5 சதவீதமாக அதிகரித்ததே இந்த வளர்ச்சிக்குக் காரணமாகும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2024-25-ம் ஆண்டில் 6.5 சதவீதத்துக்கும், 7 சதவீதத்துக்கும் இடையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

> கடன் நிர்வாகம் மற்றும் அரசின் நிதிக் கொள்கைகள் காரணமாக 2024-ம் நிதியாண்டில், சில்லறை பணவீக்கமும், 5.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2024-25-ம் நிதியாண்டில் இது 4.5 சதவீதமாகக் குறையக் கூடும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பணவீக்கம் 6 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது.

> 2024-ம் நிதியாண்டில் விவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறைகளின் பங்குகள் முறையே 17.7 சதவீதம், 27.6 சதவீதம் மற்றும் 54.7 சதவீதமாக இருந்தன. 2024-ம் நிதியாண்டில், உற்பத்தித் துறை 9.9 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. கட்டுமானப் பணிகளும் 9.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

> தனியார் நிதி அல்லாத நிறுவனங்களின் மொத்த நிலையான மூலதன உருவாக்கம் 2023-ல் 19.8 சதவீதம் அதிகரித்து காணப்பட்டது. இது வளர்ச்சியின் முக்கிய உந்துதலாக கருதப்படுகிறது. எட்டு பெரிய நகரங்களில் 4.1 லட்சம் குடியிருப்புகள் விற்கப்பட்டுள்ளதால், 2023-ம் ஆண்டில் ரியல் எஸ்டேட் 33 சதவீத ஆண்டு வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது 2013 க்குப் பிறகு மிக அதிகமான விற்பனையாகும்.

  • மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை 2023-ம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4 சதவீதத்திலிருந்து 2024-ம் நிதியாண்டில் 5.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • 2024-ஆம் நிதியாண்டுக்கான மூலதன செலவு 9.5 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 28.2 சதவீதம் அதிகரிப்பாகும்.
  • மொத்த நிதிப் பற்றாக்குறை பட்ஜெட் இலக்கான ரூ.9.1 லட்சம் கோடியை விட 8.6 சதவீதம் குறைவாக இருந்ததால் மாநில அரசுகளின் செலவினங்களின் தரம் மேம்பட்டது.
  • 2024 மார்ச் மாதத்தில் மொத்த வாராக் கடன் விகிதம் 2.8 சதவீதமாகக் குறைந்தது. 12 ஆண்டுகளில் இது மிகக் குறைந்த அளவாகும்.
  • இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதி 2024-ம் நிதியாண்டில் 341.1 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியது.
  • 2024 மார்ச் மாத நிலவரப்படி அந்நிய செலாவணி கையிருப்பு 11 மாத திட்டமிடப்பட்ட இறக்குமதிகளை ஈடுகட்டப் போதுமானதாக இருந்தது.
  • > 2013-ம் ஆண்டில் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, நேரடி பணப் பரிமாற்றம் மூலம் ரூ.36.9 லட்சம் கோடி வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

> 2017-18-ம் ஆண்டில் 23.3 சதவீதமாக இருந்த பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம், 2022-23 ஆம் ஆண்டில் 37 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு கிராமப்புற பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருவதே முக்கிய காரணமாகும்.

வேலைவாய்ப்பு: இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடைய 2030-ம் ஆண்டு வரை பண்ணை சாரா துறையில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 78.5 லட்சம் வேலைகளை உருவாக்க வேண்டியது அவசியமாகும். 5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான , உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம், மித்ரா ஜவுளித் திட்டம் (20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்), முத்ரா திட்டம் போன்ற தற்போதுள்ள திட்டங்களின் அமலாக்கத்தை அதிகரிக்கும் போது, வேலை வாய்ப்பு உயர வாய்ப்புகள் உள்ளன.

> ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் விரைவான வளர்ச்சியால், அடுத்த 10 ஆண்டுகளில் பிபிஓ துறையில் வேலைவாய்ப்பு கணிசமாகக் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், அடுத்த தசாப்தத்தில், செயற்கை நுண்ணறிவின் படிப்படியான பரவல் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு இயக்கத்துக்காக 2024-ஆம் ஆண்டில் ரூ.10,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவு அமைப்பை வலுப்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்.

> இந்தியாவின் பெரு வணிகத் துறையின் லாபம் 2024 மற்றும் 2023 நிதியாண்டுக்கு இடையில் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. மூலதனத்தைப் பயன்படுத்துவதற்கும் தொழிலாளர்களைப் பயன்படுத்துவதற்கும் இடையில் சரியான சமநிலையை ஏற்படுத்த வணிக நிறுவனங்களுக்கு ஒரு கடமை உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x