Published : 21 Jul 2024 05:01 AM
Last Updated : 21 Jul 2024 05:01 AM

சென்னை ஐ.சி.எஃப் உள்ளிட்ட 2 ஆலைகளில் ‘55 அம்ரித் பாரத்’ ரயில்களை தயாரிக்க திட்டம்

கோப்புப்படம்

சென்னை: சென்னை ஐ.சி.எஃப் உட்பட 2 ஆலைகளில் நடப்பாண்டில் 55 அம்ரித் பாரத் ரயில்களை (சாதாரண வந்தே பாரத் ரயில்களை) தயாரிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் தற்போது வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக, அம்ரித் வந்தே பாரத் ரயில்கள் (சாதாரணவந்தே பாரத் ரயில் ) தயாரிக்கவும் முயற்சி எடுக்கப்படுகிறது. முதல் கட்டமாக, 2 அம்ரித் பாரத் ரயில்கள் தயாரித்து,கடந்த ஆண்டு நவம்பரில் ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

அம்ரித் பாரத் ரயிலில், இரு புறமும் இன்ஜின்கள் பொருத்தப்பட்டு, 8 முன்பதிவில்லாத பெட்டிகள், முன்பதிவு கொண்ட12 பெட்டிகள், மாற்றுத் திறனாளிகள், லக்கேஜ் உட்பட மொத்தம் 22 பெட்டிகள் இடம் பெற்றன. இந்த ரயில்கள் தர்பங்கா - ஆனந்த் விஹார் மற்றும் மால்டா நகரம்- பெங்களூரு இடையே இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கும் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், சென்னை ஐ.சி.எஃப், கபுர்தலா ரயில் பெட்டி தயாரிப்பு ஆலை ஆகியவற்றில் நடப்பு நிதியாண்டில் 55 அம்ரித் பாரத் ரயில்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2024-25-ம் நிதியாண்டுக்காக அம்ரித் பாரத் ரயில் பெட்டிகள் உற்பத்தி தொடர்பாக ஒரு அறிவிப்பு 3 மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

இதை மாற்றி, ரயில் பெட்டி தயாரிப்புதொடர்பாக திருத்தப்பட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, சென்னை ஐ.சி.எஃப் ஆலை, கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி ஆலை ஆகியவற்றில் நடப்பாண்டில் 55 அம்ரித்பாரத் ரயில்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் மட்டும் அம்ரித் பாரத் ரயில்களுக்காக, 220 முன்பதிவு பெட்டிகளும், 303 முன்பதிவில்லாத பெட்டிகளும், 71 எஸ்எல்ஆர் பெட்டிகளும், 27 பேன்ட்ரி கார்களும் தயாரிக்க அறிவிக்கப்பட்டுள்ளன.

கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் 220 முன்பதிவு பெட்டிகளும், 302 முன்பதிவில்லாத பெட்டிகளும், 65 எஸ்எல்ஆர் பெட்டிகளும், 28 பேன்ட்ரி கார்களும் தயாரிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளன.

மொத்தம் 22 பெட்டிகளை கொண்ட ஒரு ரயிலில் 8 முன்பதிவு பெட்டிகளும், 11 முன்பதிவில்லாத பெட்டிகளும், ஒரு பேன்ட்ரி கார் பெட்டியும் இடம்பெற உள்ளன. இதன்மூலமாக, முன்பதிவில்லாத பொது பெட்டிகள் அதிக அளவில் இணைக்கப்பட உள்ளன. இது தொலைதூரரயிலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக அளவில் சாதாரண பெட்டிகள்: இது குறித்து ரயில்வே அதிகாரிகள்கூறும்போது, புதிதாக தயாரிக்கப்படும் அம்ரித் பாரத் ரயிலில் சாதாரண பெட்டிகள் அதிக அளவில் இடம்பெறும்.இதுதவிர, பேன்ட்ரி கார் வசதியும் இடம்பெறுவதால், பயணிகளின் உணவு தேவைகள் பூர்த்தி செய்ய முடியும். முதல் கட்டமாக, 55 அம்ரித் பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு, முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் என்றனர்.

தொழிற்சங்கங்கள் வரவேற்பு: இது குறித்து ஓய்வுபெற்ற ரயில்வே தொழிற்சங்கத்தின் மூத்த நிர்வாகி மனோகரன் கூறும்போது, வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் கட்டணம் காரணமாக, சாமானிய மக்கள் பயணிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இந்நிலையில், அம்ரித் பாரத் ரயில்கள் தயாரிக்க தற்போது முயற்சி எடுக்கப்படுகிறது. இந்த ரயில்களில் சாமானிய மக்கள் பயணிக்கும் விதமாக, கூடுதல் முன்பதிவில்லாத பெட்டிகள், பேன்ட்ரி கார் பெட்டி இணைக்கும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x