Published : 18 Jul 2024 06:36 PM
Last Updated : 18 Jul 2024 06:36 PM
மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் நான்காவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) உச்சத்தில் நிறைவடைந்தன. சென்செக்ஸ் முதல் முறையாக 81,000-ஐ கடந்தது. அதேபோல், நிஃப்டி 24,800-ஐ கடந்தது. தகவல் தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் எரிவாயு, எஃப்எம்சிஜி பங்குகளின் வாங்குதல்கள் இந்த ஏற்றத்துக்கு வழிவகுத்தன.
இன்றைய வர்த்தகத்தின் ஆரம்பக்கட்ட சரிவிலிருந்து மீண்ட சென்செக்ஸ் வர்த்தக நேரத்தின் முடிவில் 626.91 (0.78 சதவீதம்) புள்ளிகள் உயர்ந்து, 81,343.46 ஆக புதிய உச்சத்துடன் நிறைவடைந்தது. இது வர்த்தக நேரத்தின்போது 81,522.55 என்ற உச்சத்தை அடைந்திருந்தது. அதேபோல், நிஃப்டியும் தொடக்கநிலை சரிவிலிருந்து மீண்டு வர்த்தக நேரத்தின் இறுதியில் 187.85 (0.76 சதவீதம்) புள்ளிகள் உயர்ந்து 24,800.85 புதிய உச்சத்துடன் நிறைவடைந்தது. வர்த்தக நேரத்தின் போது, 224.75 புள்ளிகள் உயர்ந்து 24,837.75 ஆக இருந்தது.
வர்த்தகத்தின் பிற்பகுதியில் அதிகரித்த தகவல் தொழில்நுட்ப பங்குகளான டிசிஎஸ், இன்போசிஸ், டெக் மகேந்திரா மற்றும் இன்டெக்ஸ் ஹெவிவெயிட் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகளின் வாங்குதல் பங்குச்சந்தைகளின் ஏற்றத்துக்கு வழிவகுத்தது. பஜாஜ் ஃபின்சர்வ், இன்போசிஸ், மகேந்திரா அண்ட் மகேந்திரா, டெக் மகேந்திரா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் உயர்வடைந்திருந்தன. ஏசியன் பெயின்ட்ஸ், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல்ஸ், என்டிபிசி மற்றும் அதானி போர்ட்ஸ் பங்குகள் சரிவைச் சந்தித்திருந்தன.
ஆசிய சந்தைகளைப் பொறுத்தவரை, ஷங்காய் மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவடந்தன. என்றாலும், சியோல் மற்றும் டோக்கியோ சந்தைகள் சரிவில் நிறைவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகி இருந்தது. அமெரிக்க பங்குச்சந்தைகள் புதன்கிழமை சரிவைச் சந்தித்திருந்தன. இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை முதல் இந்திய பங்குச்சந்தைகள் நான்கு நாட்களாக உச்சத்துடன் நிறைவடைந்து வருகின்றன. பங்குச்சந்தை குறியீடுகள் தொடர்ந்து நான்கு நாட்களாக புதிய உச்சத்தை சந்தித்தன. நிஃப்டி சுமார் 485 புள்ளிகள் அல்லது 1.96 சதவீதம் வரையிலும், சென்செக்ஸ் 1446 புள்ளிகள் அல்லது 1.79 சதவீதம் வரையிலும் உயர்வடைந்திருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT