Published : 18 Jul 2024 04:52 PM
Last Updated : 18 Jul 2024 04:52 PM

சிறுமலை அடிவாரத்தில் விளையும் டிராகன் பழம் - மாற்றி யோசித்து சாதித்த விவசாயி!

டிராகன் பழதோட்டத்தில் விவசாயி சூசை மாணிக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சிறுமலை அடிவாரத்தில் முதன்முறையாக திராட்சைக்கு மாற்றாக சோதனை முறையில் பயிரிடப்பட்ட ‘டிராகன் பழம்’, அமோக விளைச்சல் கண்டதால் தற்போது கூடுதல் பரப்பில் பயிரிட்டு நல்ல லாபம் பார்த்து வருகிறார் விவசாயி ஒருவர்.

திண்டுக்கல் சிறுமலை அடிவாரம் செட்டியபட்டி அருகே வேளாங்கண்ணிபுரத்தைச் சேர்ந்த விவசாயி சூசைமாணிக்கம். சிறுமலை அடிவாரத்தில் திராட்சை விளைச்சல் அதிகபரப்பில் நடக்கிறது. எல்லோரும்போல இவரும் தனது விளைநிலத்தில் திராட்சை பயிரிட்டு வந்தார். திராட்சைக் கொடியைப் பராமரிக்க கவாத்து செய்தல், மருந்தடித்தல், அறுவடை செய்தல் என ஆண்டு முழுவதும் கூலியாட்களைக் கொண்டு பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கூலி ஆட்கள் பற்றாக்குறை, பராமரிப்புச் செலவு அதிகம் காரணமாக திராட்சைக்கு மாற்றாக மாற்று விவசாயம் குறித்து யோசித்தார் விவசாயி சூசைமாணிக்கம். இந்நிலையில் குஜராத், கர்நாடகா மாநிலத்தில் விளைவிக்கப்படும் வெளிநாட்டுப் பழமான ‘டிராகன் பழம்’ குறித்து அறிந்தார். குஜராத்தில் இருந்து டிராகன் பழக் கன்றுகளைத் தருவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக டிராகன் பழ விளைச்சலை தனது நிலத்தில் சோதனை முறையில் 20 சென்ட் நிலத்தில் பயிரிட்டார். ஒன்றரை ஆண்டுகளில் பலன்தரத் தொடங்கியது. இதையடுத்து கூடுதல் பரப்பில் தற்போது டிராகன் பழம் பயிரிட்டுள்ளார். இதுகுறித்து விவசாயி சூசைமாணிக்கம் கூறியதாவது: மார்ச் முதல் செப்டம்பர் வரை சீசன். மழை, பனிக் காலங்களில் பழங்கள் தருவதில்லை. இந்த டிராகன் பழம் கள்ளிச்செடி வகையைச் சேர்ந்தது. 6 அடி கல் ஒன்றை ஊன்றி அதனைச்சுற்றி நான்கு டிராகன் பழ கன்றுகளை நடவு செய்கிறோம். இந்த நான்கு செடிகளும் வளர வளர நடுவில் உள்ள கல்லில் கட்டி வளர்க்கப்படுகிறது.

6 அடி உயரம் வந்தபிறகு கிளைகள் போல் பிரிந்து வளர்கிறது. நடவு செய்த ஒன்றரை ஆண்டுகளில் பலன் தருகிறது. ஒரு ஏக்கரில் பயிரிட சுமார் 6 லட்சம் வரை செலவாகும். ஒரு முறை முதலீடுதான், அதற்குப் பிறகு கூலியாட்களே தேவைப்படாது. இரண்டு ஏக்கரில் பயிரிட்டாலும் பராமரிக்க, அறுவடை செய்ய வீட்டில் உள்ள இருவர் போதும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சுகிறோம். நோய் தாக்குதல் இல்லாததால் மருந்தடிக்கும் செலவு இல்லை, இயற்கை உரங்களை சொட்டுநீர் மூலமே கொடுத்து விடுகிறோம்.

திண்டுக்கல் சிறுமலை அடிவாரத்தில் உள்ள டிராகன் பழத்தோட்டம்.
| படங்கள்: நா.தங்கரத்தினம் |

தொடக்கத்தில் 20 சென்ட் நிலத்தில் சோதனை முறையில் பயிரிட்டுப் பார்த்தோம். நல்ல விளைச்சல் கிடைத்தது. தற்போது கூடுதல் பரப்பில் விளைவிக்கிறோம். டிராகன் பழத்தில் வெள்ளை, மஞ்சள், பிங்க் நிறம் என மூன்று வகை உண்டு. இதில் பிங்க நிறப் பழத்துக்கு அதிக கிராக்கி என்பதால் அந்த வகையைப் பயிரிட்டுள்ளோம். ஒரு முறை பயிரிட்டால் 10 ஆண்டுகளுக்கு மேல் விளைச்சல் கொடுக்கும். அதிக லாபம் கிடைக்கிறது. ஒரு கிலோ ரூ.200 வரை வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.வெளி மார்க்கெட்டில் ரூ.250-க்கு மேல் விற்பனையாகிறது.

சிறந்த மருத்துவ குணம் உள்ளதால் மக்களும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். விவசாயிகள் டிராகன் பழ சாகுபடி செய்ய முன்வரலாம். இதற்கான வழிமுறைகளை நாங்களே சொல்லித் தருகிறோம். எங்கள் மாற்று விவசாயத்துக்குக் கிடைத்த வெற்றி, பிற விவசாயி களுக்கும் கிடைக்க வேண்டும், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x