Published : 15 Jul 2024 05:06 AM
Last Updated : 15 Jul 2024 05:06 AM
சென்னை: தென்னை சாகுபடி பாதியாகக் குறைந்துவிட்டதாலும் வெப்பத் தாக்குதல் காரணமாக தேவை அதிகரித்ததாலும் இளநீர் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
தென்னை சாகுபடி அதிகளவில் நடைபெறும் பொள்ளாச்சியிலேயே ஒரு இளநீர் ரூ.50-க்கு விற்கப்படுகிறது. கோவையில் ரூ.50, தூத்துக்குடியில் ரூ.65, சென்னையில் ரூ.70 முதல் ரூ.75 வரை விற்கப்படுகிறது.
சென்னையில் இந்தாண்டு கோடை காலம் மட்டுமின்றி இப்போதும் வெப்பத் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் உடல் உஷ்ணத்தைக் குறைக்க மக்கள் இளநீரை அதிகளவில் பருகுகின்றனர். பதநீர், பழங்கள், குளிர்பானங்களைவிட இளநீரே உடல் சூட்டைக் குறைப்பதாக மக்கள் கருதுகின்றனர்.அதனால், எப்போதும் இளநீருக்கு கிராக்கி இருக்கிறது. இளநீர் வரத்து குறைவுகாரணமாக அதன் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இதுகுறித்து தென்னிந்திய தென்னை சாகுபடியாளர்கள் சங்கத் தலைவர் டி.ஏ.கிருஷ்ணசாமி கூறியதாவது: தமிழகத்தில் லட்சக்கணக்கான தென்னை விவசாயிகள் உள்ளனர். இவர்கள் கோடிக்கணக்கான தென்னை மரங்களை பராமரிக்கின்றனர். நன்கு பராமரித்தால் குட்டை தென்னை மரத்தில் இருந்து ஆண்டுக்கு 200 காய்களும், நெட்டை மரத்தில் இருந்து 100 காய்களும் கிடைக்கும். இந்தாண்டு மழைப்பொழிவு குறைந்து, கடும்வறட்சி ஏற்பட்டதால் தென்னங்காய்கள் சிறுத்துப் போய்விட்டன.
மேலும், கேரளா வாடல் நோய் புற்றுநோய் போல தென்னை மரங்களைப் பாதிக்கின்றன. இதற்குஇதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் தென்னை சாகுபடி பாதியாகக் குறைந்துவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆனைமலை, சேத்துமடை பகுதிகளில் உள்ள தென்னையில் கிடைக்கும் ஒரு இளநீர் காய் இரண்டேகால் கிலோ வரை எடை இருந்தது. இப்போது ஒரு காய் ஒரு கிலோவாக எடை குறைந்துவிட்டது. முன்பு ஒரு இளநீரில் 1 முதல் ஒன்றேகால் லிட்டர் வரை இளநீர் இருந்தது. இப்போது 600 மில்லி வரைதான் இருக்கிறது.
வியாபாரிகள் தென்னை விவசாயிகளிடம் இருந்து ஒரு இளநீரை ரூ.30-க்கு எடுத்துச் செல்கின்றனர். ஆனால், இரு மடங்கு விலைக்கு விற்கின்றனர். தென்னை அதிகளவில் சாகுபடி செய்யப்படும் பொள்ளாச்சி மற்றும் கோவையில் ஒரு இளநீர் ரூ.50 வரை விற்கப்படுகிறது.
இந்தாண்டு நாடு முழுவதும் வெப்பத் தாக்குதல் அதிகமாக இருந்ததால் டெல்லி, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத் உள்ளிட்ட பல நகரங்களுக்கு பொள்ளாச்சி இளநீர் எடுத்துச் செல்லப்பட்டது. இப்போதும் தாரஸ் லாரி ஒன்றில் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம்காய்கள் வரை ஏற்றிச் செல்கின்றனர். அதனால்தான் சென்னைக்கு எடுத்து வரப்படும் காய்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...