Published : 12 Jul 2024 05:27 AM
Last Updated : 12 Jul 2024 05:27 AM
சென்னை: தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தின் (‘ஐடிஎன்டி ஹப்’) முதலாம் ஆண்டு விழா சென்னையில் நடந்தது. இதில், மைக்ரோசாஃப்ட், அமேசான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், அவர்களே உருவாக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு அரசு உதவி செய்யும் வகையிலும் தமிழக தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் கடந்த ஆண்டு தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (‘ஐடிஎன்டி ஹப்’) தொடங்கப்பட்டது.
இதன் முதலாம் ஆண்டு விழாசென்னையில் நேற்று நடைபெற்றது. மையத்தின் தலைமை நிர்வாகஅதிகாரி வனிதா வேணுகோபால் தலைமை வகித்தார். தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
விழாவில், ‘டீப்டெக்’ தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான அறிவுசார் சொத்துரிமை மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தில் கல்வித் துறை, ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், அரசு மற்றும் தொழில் துறையின் பங்கு குறித்த குழு விவாதம் நடைபெற்றது.
சீமென்ஸ் உடன் இணைந்த தமிழ்நாடு சீர்மிகு மற்றும் மேம்படுத்தப்பட்ட உற்பத்தி நிறுவனம் (TANSAM), டசால்ட் சிஸ்டம்ஸ் உடன் இணைந்த தமிழ்நாடு மேம்படுத்தப்பட்ட உற்பத்திக்கான சிறப்பு மையம் (TANCAM), ஹைதராபாத் இந்திய வணிக பள்ளியின் டி-லேப் இன்குபேட்டர் மையம், ஹைதராபாத் டி-ஹப், டி-ஒர்க்ஸ், தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழகம், இந்திய அமேசான் இணைய சேவைகள் (AWS), மைக்ரோசாஃப்ட் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
50 கல்வி நிறுவனங்களுடன் ஐடிஎன்டி சார்பில் உருவாக்கப்பட்ட ஜிக்சா இணையதளம் தொடர்பான ஒப்பந்தம், சத்யபாமா தொழில்நுட்ப கல்லூரியுடன் தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தாகின.
ஏஐ வேலைவாய்ப்பு: பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது: ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த நிறையடிஜிட்டல் தகவல்கள் தேவை.ஆனால், நம்மிடம் இருக்கும் தகவல்கள் அனைத்தும் டிஜிட்டலாக இல்லை. ஏஐ தொழில்நுட்பத்தை அனைத்து மக்களுக்கும்பயனளிக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும் என்றால் சுமார் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்முதலீடு தேவை. ஏஐ தொழில்நுட்பம் நிச்சயமாக தொழில்நுட்பத்தின் சாராம்சத்தை மாற்றியமைக்கும்.
முதல்வர் ஸ்டாலின் விரைவில் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதன்மூலம் பல்வேறு முன்னேற்றங்கள் வரும்என எதிர்பார்க்கிறோம். தொழில்நுட்ப துறையில் ஹைதராபாத், பெங்களூரு அளவுக்கு தமிழகம் வளர்ச்சி அடையவில்லை. இதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் தமிழக தொழில்நுட்பத் துறை செயலர் தீரஜ்குமார், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் இந்திய - தெற்கு ஆசிய பிரிவு தலைவர் கிஷோர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT