Published : 08 Jul 2024 05:28 AM
Last Updated : 08 Jul 2024 05:28 AM
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் புதிதாக தொழில் தொடங்க 6,909 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2020-ம்ஆண்டில் ஜம்மு காஷ்மீர் நில உரிமையாளர்கள் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்தது. இதன்படி காஷ்மீரில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவரும் நிலம், வீடு வாங்கலாம், தொழில்களில் முதலீடு செய்யலாம். வர்த்தக தேவைக்கு நிலங்களை கையகப்படுத்தலாம் என்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இதன்பிறகு பல்வேறு நிறுவனங்கள் காஷ்மீரில் தொழில்களை தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன. கடந்த ஜூலை 3-ம் தேதி நிலவரப்படி காஷ்மீரில் தொழில் தொடங்க 6,909 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.
இதில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் தொழில் தொடங்க 5,007 விண்ணப்பங்களும், ஜம்மு பகுதியில் தொழில் தொடங்க 1,902 விண்ணப்பங்களும் அளிக்கப்பட்டு உள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் குறு, சிறு நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்துள்ளன. அந்த நிறுவனங்களுக்காக 4,935.61 ஏக்கர் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. ஜம்மு பகுதியில் பெரு நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்துள்ளன. அந்த நிறுவனங்களுக்காக 3,671.98 ஏக்கர் நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் நிறுவனம், வெல்ஸ்பென் குரூப், துபாயின் எனார் குரூப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தேவையான நிலங்கள் ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. புதிய தொழில்கள் மூலம் ஜம்மு காஷ்மீரில் ரூ.1.23 லட்சம் கோடி வரை முதலீடு செய்யப்பட உள்ளது. சுமார் 4.69 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குளிர்பானங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான காந்தாரி, ஜம்மு-காஷ்மீரில் ரூ.1,100 கோடியில் புதிய ஆலையை தொடங்க உள்ளது. அந்த நிறுவனத்துக்காக 36 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நிறுவனத்துக்காக கதுவா பகுதியில் 25.75 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிறுவனம் சார்பில் ரூ.1,600 கோடிமுதலீடு செய்யப்பட உள்ளது.
துபாயின் எனார் குரூப் சார்பில் ஸ்ரீநகரில் பிரம்மாண்ட ஷாப்பிங்மால், தகவல் தொழில்நுட்ப பூங்காஆகியவை அமைக்கப்பட உள்ளன. இதே நிறுவனம் சார்பில் ஜம்மு பகுதியிலும் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ளது. வெல்ஸ்பென் நிறுவனத்துக்காக காஷ்மீரின் கதுவா பகுதியில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்ககாஷ்மீர் யூனியன் பிரதேச அரசுசார்பில் புதிய கொள்கை வெளியிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் வரும் 2027-ம் ஆண்டுக்குள் காஷ்மீரில் 2,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT