Published : 04 May 2018 08:10 AM
Last Updated : 04 May 2018 08:10 AM

வணிக நூலகம்: கூடி செயல்பட்டால் கோடி வெற்றிகள்!

கூ

ட்டுமுயற்சி என்றுமே பெரும் பலன்களைத் தரக்கூடியது. அதிலும் சிறந்த திட்டமிடல் மற்றும் பங்களிப்புடன் செயல்படும்போது அபரிமிதமான வெற்றிகளைப் பெறமுடியும். அப்படிப்பட்ட வெற்றிக்கான விஷயங்களைச் சொல்கிறது "ரோஜர் ஃபிஷ்சர் மற்றும் ஆலன் ஷார்ப்" ஆகியோரால் எழுதப்பட்ட "கெட்டிங் இட் டன்" என்னும் இந்தப் புத்தகம்.

அவசியம் ஆனால் எளிதல்ல!

நிர்வாகி, தொழிற்சங்க உறுப்பினர், உதவியாளர், ஆலோசகர் அல்லது அரசு அதிகாரி என நாம் யாராக இருந்தாலும், நம்முடைய அனைத்து இலக்குகளையும் நம்மால் மட்டுமே நிறைவேற்றிக்கொள்ள முடியாது. கீழ்மட்ட பணியாளர்கள், சக ஊழியர்கள், மேலதிகாரிகள், வாடிக்கையாளர்கள் அல்லது ஒவ்வொரு நாளும் நாம் சார்ந்துள்ள நபர்கள் ஆகியோரின் உதவி நிச்சயம் நமக்குத் தேவை அல்லவா!. யாருடைய உதவியுமே இல்லாமல், ஒரு துறவியைப் போல வாழ்ந்துக்கொண்டு அதிகப்படியான வெற்றிகளைப் பெறுவதற்கான வழிமுறைகள் எதுவுமில்லை. ஆக, மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றவேண்டியது நமக்கு அவசிய மாகிறது.

அதேசமயம் ஒன்றிணைந்து செயலாற்றுதல் என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல, கொஞ்சம் கடினமான விஷயமே என்பதையும் சேர்த்தே நினைவில் வைப்போம். ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டு, அவற்றிற்கான பணியில் மிக துல்லியமாக ஒன்றிணைந்து செயல்படவைக்கப்படுகின்றன. ஆனால், மனிதர்களை அவ்வாறு செயல்பட வைக்கமுடியாது. ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான தனிப்பட்ட மனநிலை என்ற ஒன்று உண்டு. ரோபோக் கள் போல் அல்லாமல் மகிழ்ச்சி அல்லது கோபம், நம்பிக்கை அல்லது பாதுகாப்பின்மை, நட்பு அல்லது பொறாமை ஆகிய உணர்வுகளை நாம் கொண்டுள்ளோம். மேலும், நியாயம் அல்லது அநியாயம், சரி அல்லது தவறு என்பதைக்கொண்டு நாம் முடிவுகளை மேற்கொள்கிறோம். இவற்றையெல்லாம் கவனத் தில் வைத்துப்பார்க்கும்போது கூட்டுச்செயல்பாடு கொஞ்சம் சிரமமானதே.

கண்டறிதலே முக்கியம்!

ஒரு பழங்கால இரயில்வே கதை ஒன்று. புதிய இரயில் இன்ஜின் ஒன்று ஸ்டார்ட் ஆகாமல் பழுதாகியுள்ளது. அதற்கான காரணம் குறித்து அதன் பணியாளர்களால் அறியமுடியவில்லை. அதற்கான தொழில்முறை நிபுணர் ஒருவர் இன்ஜினின் பராமரிப்பிற்காக அழைக்கப்படுகிறார். நிபுணர் வருகிறார், நிலைமையை ஆராய்ந்துப்பார்க்கிறார். இன்ஜினின் ஒரு பகுதியில் சுத்தியலால் மெதுவாகத் தட்டுகிறார். பிறகு மிகச்சரியாக ஸ்டார்ட் ஆகிறது அந்த இன்ஜின். இந்தப் பணிக்கான ஊதியமாக ஆயிரம் டாலர்களுக்கான பில், நிபுணரிடமிருந்து இரயில்வே நிர்வாகத்திடம் கொடுக்கப்படுகிறது. குறைந்த நேரத்திலான சிறிய பணி என்பதால், பில் பற்றிய விபரம் இரயில்வே நிர்வாகத்தினரால் அந்த நிபுணரிடம் கேட்கப்படுகிறது. அதற்கு, சுத்தியலால் தட்டிய வேலைக்கு பத்து டாலர்கள் என்றும் எங்கு தட்ட வேண்டும் என்று கண்டறிந்ததற்கு தொள்ளாயிரத்து தொண்ணூறு டாலர்கள் என்றும் அந்த நிபுணரிடமிருந்து பதில் வந்ததாம்.

ஆக, ஒரு பிரச்சினையின் தீர்விற்கான செயல்பாடு என்பது, அந்தப் பிரச்சினையை மிகத்தெளிவாக கண்டறிவதிலேயே இருக்கின்றது. ஒரு விஷயத்தின் மீதான தெளிவற்ற புரிதல், ஒருபோதும் திடமான தீர்வினைத் தராது. ஆம், துல்லியமாக பிரச்சினையின் மூலத்தை அறிந்துக்கொள்ளுதல், அதன் பாதி தீர்விற்கு சமமானது. சக பணியாளர்களுக்கான தூண்டலை சரியான திசையில் செயல்படுவதற்கான திறன்களை அறிந்துக்கொள்ளுதலும் செயல்படுத்துதலும், ஒருவரின் தெளிவான புரிதலையே அடிப்படையாகக் கொண்டுள்ளது என்கிறார்கள் ஆசிரியர்கள். ஆக, இத்திறனை வளர்த்துக்கொள்வது தனிப்பட்ட முறையில் மட்டுமின்றி, குழு செயற்பாட்டிலும் அதீத நன்மையளிக்கும் விஷயமாகும்.

என்ன செய்யவேண்டும்?

அடிப்படையான சில விஷயங்களைக் கற்றுக்கொள்வது, ஒன்றிணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கும் என்கிறார்கள் ஆசிரியர்கள். எது சிறந்த கூட்டுப்பணி? என்பதில் தெளிவான பார்வை வேண்டும். இதற்கு அனைவரையும் சமமாக எண்ணும் மனோபாவத்தை ஏற்படுத்திக்கொள்வது அவசியம். நமது தனிப்பட்ட திறன்களை மேம்படுத்திக்கொள்வது, இலக்குகளைத் தெளிவுபடுத்திக்கொள்வது, திறந்த மனதுடன் மற்றவர்களுக்கு போதிய வாய்பளித்தல், செயல்பாடுகளில் சமமான பங்களிப்பினை உருவாக்கிக்கொள்வது, மற்றவர்களின் உணர்வுகளின் மீதான சரியான காரணத்தை அங்கீகரித்தல், பணிகளின் செயல்பாட்டில் மேற்கொள்ளும் மாற்றங்களில் மற்றவர்களையும் சேர்த்துக்கொள்ளவது போன்ற ஆக்கபூர்வமான விஷயங்களை தொடர்ந்து ஒவ்வொரு செயல்பாட்டிலும் கடைபிடிக்கவேண்டியது முக்கியம்.

குறிக்கோள் மற்றும் எண்ணம்!

நாம் எதை செயல்படுத்துவதற்கு முயற்சிக்கிறோம் என்பதில் சரியான தெளிவு இல்லாதவரையில், எதையும் சரியாக செய்வது என்பது கடினம். நமது நோக்கங்களை ஊக்கமூட்டுபவையாகவும், உற்சாகப்படுத்துபவையாகவும், முன்னேற்றத்தை மதிப்பீடு செய்பவையாகவும், முடிவுகளை மேற்கொள்வதற்கு உதவுபவையாகவும் இருக்குமாறு அமைத்துக்கொள்ளவேண்டும். அதுபோலவே நமது எண்ணங்கள் புதிய கருத்துக்களை செயல்பாட்டிற்குள் கொண்டுவருபவையாகவும், சுமைகளை சாதனைகளாக மாற்றுபவையாகவும் இருக்க வேண்டும். மேலும், நமது எண்ணங்களை சாத்தியக்கூறுகள், மதிப்பீடுகள் மற்றும் முடிவுகள் என மூன்று தளங்களில் மேற்கொள்ளவேண்டும். பெரும்பாலானோருக்கு தனியாக செயல்படும்போது அவர்களது எண்ணங்கள் ஒரு திட்டத்திலிருந்து மற்றொன்றிற்கு எளிதில் தாவிக்கொண்டே இருக்கும். இதுவே மற்றவர்களுடன் ஒன்றிணைந்து செயல்படும்போது, எண்ணங்களை செயல்பாடுகளை சார்ந்து கட்டுக்குள் வைக்க முடியும்.

கற்றல் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல்!

எவ்வளவுதான் ஆற்றலும் திட்டங்களும் கைவசம் இருந்தாலும்கூட, தொடர்ச்சியான கற்றலே இடையூறின்றி இலக்குகளை அடைவதற்கும், எதிர்வரும் பிரசனைகளை கையாளுவதற்கும் உதவிகரமானதாக இருக்கும். ஒரு திட்டத்திற்கு தேவையான விஷயங்களைக் கற்றுக்கொள்ளும்வரை, அந்த திட்டத்தை ஒத்திவைப்பதும்கூட நல்லதே. இந்த கற்றலானது, கூட்டுச்செயற்பாட்டில் எளிதில் மேற்கொள்ளக்கூடியதாக இருப்பது சிறப்பு. புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் வேளையில், அதனை தவறாமல் தேவையான இடங்களில் சோதனை செய்துபார்ப்பதையும் வாடிக்கையாக்கிகொள்ளவேண்டும். அதுபோலவே, கற்றுக்கொண்ட விஷயங்களை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கினையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். குழு செயல்பாட்டில், அனைவருமே முழுமையான ஈடுபாட்டுடன் பணிகளை ஏற்றுக்கொள்ளும்போது மட்டுமே இலக்கு எளிதில் எட்டப்படும்.

பாராட்டு மற்றும் ஆலோசனை!

நன்றி கூறுதல், பாராட்டு தெரிவித்தல் மற்றும் ஒருவருடைய முயற்சிக்கான அங்கீகாரமளித்தல் ஆகியன குழு செயற்பாட்டுக்கு அவசியமான மற்றும் வலுசேர்க்கும் விஷயங்க ளாக உள்ளன என்கிறார்கள் ஆசிரியர்கள். மேலும், மற்றவர்களை உணர்வுப்பூர்வமாக ஒன்றிணைக்கும் காரணியாகவும் இவை செயல்படுகின்றன.

பாராட்டிற்கான தருணங்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்காமல், மற்றவர்களின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து, பாராட்டு மற்றும் நன்றி தெரிவிப்பதற்கான சூழ்நிலைகளை கண்டறியவேண்டும். அதுபோலவே, ஆலோசனைகளை பெறுவது மற்றும் அளிப்பது ஆகியன கூட்டு செயற்பாட்டில் முக்கியம். பணியில் உயர்ந்தவர், சமமானவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடின்றி ஆலோசனைகளை தேவையான தருணங்களில் பரஸ்பரம் பகிர்ந்துக்கொள்ளுதல் நல்ல பலனளிக்கும் விஷயம். மேலும், ஆலோசனைகள் வழங்குவதற்கு மற்றவர்களை ஊக்கப்படுத்துதலும் சிறப்பானதே.

நல்ல குறிக்கோளை சிறப்பான எண்ணங்களால் மேம்படுத்தி, செயற்பாட்டிற்கான விஷயங்களை கற்று, ஈடுபாட்டுடன் பணிகளை மேற்கொள்ளும்போது பாராட்டுகளுடன் வெற்றியும் வந்துசேரும். மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக எண்ணி பேராவலுடன் பணிபுரியக்கூடிய நபர்களுக்கான மிகச்சிறந்த நண்பன் இந்தப் புத்தகம்.

p.krishnakumar@jsb.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x