Published : 05 May 2018 07:56 AM
Last Updated : 05 May 2018 07:56 AM

தொழில் ரகசியம்: பெட்ரோல் விலை ஏற்றத்தை சமாளிக்க ஒரு ஐடியா!

ஞா

னோதயம் பலருக்கு பல ரூபங்களில், பல வழிகளில் கிடைக்கிறது. புத்தருக்கு போதி மரத்தடியில். எனக்கு பல சமயங்களில் சலூனில்! சலூன் போகிறேனே ஒழிய அப்படியொன்றும் என் கபாலத்தில் கேசம் கரை புரண்டு ஓடவில்லை. ஒரு காலத்தில் இருந்தது. சட்டி சுட்டு, சட்டு புட்டென்று கொட்டி கொஞ்சம் மிச்சமிருக்கிறது. இருப்பதை வைத்து அட்ஜெஸ்ட் செய்கிறேன். சலூன் செல்வதிலும் ஒரு சௌகரியம். அப்படி ஒன்றும் நமக்கு முழு வழுக்கையில்லை என்கிற சீப் த்ரில். அல்ப சந்தோஷம். எங்க வீட்டுக்காரரும் கச்சேரி போறார் என்கிற மாதிரி. அட்லீஸ்ட் என் மனைவி தன்னை தேற்றிக்கொள்ளலாமே ‘எங்க வீட்டுக்காரரும் சலூன் போறார்’!

வழக்கு என் வழுக்கையை பற்றியதல்ல. சலூனில் அன்று நடந்த ஒரு சம்பாஷனையை பற்றியது. பற்றிக்கொண்டு எரியும் ஒரு பிரச்சினையை பற்றியது. எல்லாம் இந்த பாழாய் போன பெட்ரோல், டீசல் விலை ஏற்றம்தான்.

நேற்றுதான் கொஞ்சம் கை ஒழிந்து, பழக்கத்தை விட வேண்டாமே என்று சலூனிற்கு சென்றேன். சலூன் என்பது நம் குலதெய்வ கோயில் போல. எதை மாற்றுகிறோமோ இல்லையோ சலூனை மாற்றுவதே இல்லை. மாற்றவும் முடிவதில்லை. அது என்ன சலூன் லாஜிக்கோ, இல்லை சலூன்காரர் மேஜிக்கோ. குல வழக்கப்படி என் குலோத்துங்கனை கும்பிட சென்றேன். குலோத்துங்கன்தான் எனக்கு சிரச்சேதம் செய்பவன். என் ஆஸ்தான சலூன்காரன். வாழ்ந்து கெட்ட என் கபாலத்தை ஆரம்பம் முதல் ஆய்ந்தவன். அதிகம் பேச மாட்டான். ஆனால் கையில் கத்திரி கவி பாடும். அவன் வெட்டும் அழகே அலாதி. என் தலையில் முடி இருந்த போதும் சரி, இப்போழுதும் சரி.

நேற்று நான் போன நேரம் தாட்டியாய் இரண்டு பேர் ஏற்கனவே சலூனில் அமர்ந்திருந்தனர். ஒருவர் தலையெல்லாம் ரோடு போடும் தாரை கவுத்து கொட்டியது போல் டை அடித்து காய காத்திருந்தார். மனிதர் பக்கத்து சேரில் அமர்ந்திருந்த இன்னொரு தாட்டியுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அவருக்குத் தான் குலோத்துங்கன் முடி வெட்டிக் கொண்டிருந்தான். என் வயதிருக்கும் அவருக்கு. ஆனால் வயிற்றெரிச்சல், அவர் தலை முழுவதும் அநியாயத்திற்கு அத்தனை முடி. படைக்கும் பிரம்மன் கூட ஓரவஞ்சனைக்காரன் போலிருக்கிறது. அவருக்கு மட்டும் அள்ளித் தந்திருந்தான். நம் தலை முடி மேட்டர் கூட பிரம்மன் கைங்கரியம் தானே? இல்லை அது நம் தலையெழுத்து படியா? இல்லை தலைமுடிஎழுத்து படியா?

மீண்டும் முடி மேட்டருக்கே போகிறேன். சம்பாஷனை என்று சொன்னேனே. அதற்கு வருகிறேன். சலூனில் நுழைபவரை குலோத்துங்கன் வரவேற்க மாட்டான். தலையை மேலிருந்து கீழ் ஆட்டி லேசாக சிரிப்பான். ‘வா’ என்று அர்த்தம். அன்றும் செய்தான். பதிலுக்கு சிரித்தேன். தள்ளி சேரில் அமர்ந்தேன்.

சலூனில் தான் சிலருக்கு தமிழ் பேப்பர் படிக்கும் வாய்ப்பு அமைகிறது. எந்த பேப்பர் என்று கூட பார்க்காமல் எடுத்து கொலை கற்பழிப்பு மேட்டர் சூடாய் இருக்காதா என்று தேடிக்கொண்டிருந்த போது முடி வெட்டிக் கொண்டிருந்த தாட்டி சொன்னது கேட்டது.

“தே ஆர் ரேப்பிங் அஸ்”

எனக்கு தூக்கி வாரி போட்டது. நான் பேப்பரில் கற்பழிப்பு மேட்டர் தேடிக் கொண்டிருந்தது இந்த கட்டைல போறவனுக்கு எப்படி தெரிந்தது.

`டேக்ஸ் போட்டு தூக்கிடறாங்க.’ இது `கருப்பு டை’ பார்ட்டியின் பதில்.

எனக்கு சப்த நாடியும் ஒடுங்கியது. கற்பழிப்புக்கு கூட கலால் வரி இருக்கிறதா? ரேப்பிற்கு கூட ஜிஎஸ்டி உண்டா? ஏதோ தூக்கறாங்களாமே. இத்தனை நாள் நாம் தான் பேப்பரை சரியாய் படிக்கவில்லை என்பது புரிந்தது.

முடி வெட்டப்படும் பார்ட்டி தொடர்ந்து, `கார் வச்சிருக்கறவங்கள தேடிப் பிடிச்சு ரேப் பண்றாங்க.’

எனக்கு தலை சுற்றியது. பைக்தான் வைத்திருக்கிறேன். ஆனால் அதுவும் வண்டி தானே. என்னையும் ரேப் செய்வார்களோ. இந்த நிறைஞ்ச முடி கடன்காரன் சொல்றானே. மனதில் பயம் பற்றிக்கொண்டது. எதற்கும் இருக்கட்டும் என்று கால் மேல் கால் போட்டுக்கொண்டு இறுக்கமாய் அமர்ந்தேன். வருமுன் காப்பது விவேகம் தானே!

`இப்படியே போனா பெட்ரோல் விலை தங்கத்தை விட ஜாஸ்தியாயிடும்,’ என்றது `டை’.

“82 ரூபாய் சார் ஒரு லிட்டர். வயத்த எரியுது,” என்றது `முடி’.

எனக்கு பயம் விலகியது. என் கற்புக்கெந்த பங்கமும் இல்லை என்று புரிந்தது. இந்த தரித்திரங்கள் பெட்ரோல் விலை பற்றி பேச நாம்தான் கதற கதறக் கற்பழிக்கப்பட்டு வேஷ்டி சட்டை கிழிய வீடு செல்வோமோ என்று வீணாய் விசாரப்பட்டுவிட்டோம் என்பது புரிந்தது. கொஞ்சம் தைரியம் வர காலை நீட்டி அமர்ந்துகொண்டேன்.

`82 ரூபாய்ல பாதிக்குப் பாதி ஸ்டேட் அண்ட் சென்ட்ரல் டேக்சஸ்,’ என்றது `டை’.

`இவனுங்க சம்பாதிக்க நம்மடேருந்து புடுங்கறாங்க,’ என்றது `முடி’.

`டேக்ஸ குறைச்சாலே பெட்ரோல் விலை குறையுமே. ஏன் செய்ய மாட்டேங்கறாங்க?’

ஏதோ இந்த மட்டும் நம்மிடமிருந்து வெடுக்கென்று அடித்துப் பிடுங்காமல் பெட்ரோல் விலை மூலம் கேட்டுத் தானே வாங்கிக் கொள்கிறார்கள் என்று எனக்கு அரசாங்கத்தின் மேல் அனுதாபமாகத் தான் இருந்தது. `முடி’ சட்டென்று என் சைட் திரும்பி, `நீங்களே சொல்லுங்க சார். இத்தனை எசன்ஷியல் பொருளுக்கு இப்படி அநியாயத்திற்கு வரி போடறது தப்பில்லையா’ என்றார்.

என்னை ஏன் இந்த விளையாட்டில் சேர்க்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று பொதுவாய் சிரித்து ‘வாஸ்தவம்தான்’ என்றேன். `இதில அவனவன் நாலஞ்சு கார் வாங்கித் தொலைக்கிறான். பெட்ரோல் விலை ஏறாம என்ன செய்யும்.’ `டை’ விடுவதாய் இல்லை.

`இத்தனை ஏன், நடிகர் சீயான் விக்ரம் கூட நம்ம ஏரியாலதான் இருக்கார். அவருக்கு அஞ்சு கார் இருக்கு.’ இதை சொன்ன ‘முடி’ சும்மா இல்லாமல் என்னை நோக்கி திரும்பி ‘இது தப்பில்லையா சார்’ என்றார்.

`விக்ரம் பீச்சில வாக்கிங் போறப்ப பார்க்கறேன். ரொம்ப சிம்பிள் மேன். அஞ்சு கார் இருந்தாலும் வாக்கிங் போகும் போது நடந்து தான் போறார்,’ என்றேன்.

நான் சொன்னதன் அனர்த்தம் அந்த ஜென்மங்களுக்கு புரியவில்லை. குலோத்துங்கன் மட்டும் ஓரக் கண்ணால் என்னை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தான்.

`முடி’ கண்ணாடி மூலம் என்னைப் பார்த்து `கார் வச்சிருக்கறவங்க அட்லீஸ்ட் பூலிங் பண்ணலாம் இல்ல. அத பண்ண மாட்டாங்க, இர்ரெஸ்பான்சிபில் பீபில்,’ என்றார்.

`அதுக்கு ஏன் சார் அசிங்கமா திட்றீங்க, ஏதோ தெரியாம கார் வாங்கிட்டாங்க, விடுங்க,’ என்றேன்.

`முடி’ என்னை திரும்பி ஒரு மாதிரியாய் பார்த்தார். `திட்டல சார். கார் பூலிங் என்பது ஒரு அமெரிக்க சமாச்சாரம். ஆளாளுக்கு ஒரு கார்ல ஆபீஸ் போகாம நாலைஞ்சு பேர் ஒரே கார்ல ஆபீஸ் போறதுக்கு பேர் தான் கார் பூலிங்,’ என்று விளக்கினார்.

டை தன் பங்குக்கு ‘அப்படி போறதால ட்ராஃபிக்கும் குறையும்,’ என்றார்.

`சிவிக் சென்ஸ் இருந்தா இப்படி பண்ண மாட்டாங்க சார். அவனவன் ஒவ்வொரு கார்ல போய் பெட்ரோல வேஸ்ட் பண்றதாலயும் பெட்ரோல் விலை ஏகத்துக்கும் ஏறுது.’

இத்தனைக்கும் இடையே கருமமே கண்ணாய் இருந்த குலோத்துங்கன் `முடி பார்ட்டிக்கு’ முழுவதும் வெட்டி டச்சப் செய்து அவர் மேலிருந்த துணியை அலேக்காய் உருவினான். எனக்கு ரேப், கற்பழிப்பு மேட்டர் மீண்டும் நினைவிற்கு வந்தாலும் மனம் ஒரு தெளிவிற்கு வந்திருந்ததால் இம்முறை பயப்படவில்லை!

முடி பார்ட்டி எழுந்து தலையை கோதி விட்டுக்கொண்டார். ம்ஹூம், அவருக்கு இருக்கிறது, முடிகிறது, செய்கிறார். நான் வயிற்றெரிச்சல் பட்டு என்ன ஆகப் போகிறது. இருவரும் பணம் தந்து விட்டு கிளம்பினார்கள்.

`வரேன் சார்’ என்று என்னை பார்த்து சிரித்தார் `முடி’. `அடுத்த தரம் இங்க சந்திப்போம்.’ அவர் குரலில் ‘உன் கபாலம் இருக்கும் லட்சணத்தில் உனக்கு சலூனில் அடுத்த முறை என்பதே கிடையாது’ என்ற கிண்டல் தொனித்தது.

`போடா போக்கத்தவனே’ என்று மனதுக்குள் கருவிக்கொண்டே அவர் எழுந்த சேரில் அமர்ந்தேன். இரண்டு பார்ட்டிகளும் கண்ணாடிக் கதவை தள்ளிக் கொண்டு கிளம்பினர்.

குலோத்துங்கன் சாகாத என் உடம்பின் மீது வெள்ளை துணியை போர்த்தினான். `என்ன குலோத்துங்கா, நீ எதுவுமே பேசலியே’ என்றேன். என் தலை மீது தண்ணீரை பீய்த்து அடிக்கத் துவங்கியவன் சட்டென்று ஜன்னல் சீலையை விலக்கி ‘அங்க பாருங்க’ என்றான்.

ரோடில் ஒரு கருப்பு இன்னோவா. அதில் `முடி’ கிளம்பி செல்வது தெரிந்தது. பின்னாடி வெள்ளை டஸ்டர். அதை `டை’ ஓட்டிக்கொண்டு சென்றது.

`என் கஸ்டமர்ஸ்தான், நானே சொல்லக்கூடாது. இருந்தாலும்…’ என்று குலோத்துங்கன் ஆரம்பித்தான். `இத்தனை நேரம் பெட்ரோல் விலை, கார் பூலிங், அநியாயம் அக்கிரமம்னு பேசினாங்களே. ரெண்டு பேரும் நாலு தெரு தள்ளி தான் இருக்காங்க. பக்கத்து பக்கத்து வீடு. சலூனுக்கு நடந்து வர மாட்டாங்களாமா? அட்லீஸ்ட் அவங்க ரெண்டு பேரும் கார் பூலிங் பண்ணலாமில்ல.’

குலோத்துங்கன் என் கபாலத்தின் மீது தன் காவிய கத்திரியை மேய விட்டான். `இந்த லட்சணத்தில ஊர குத்தம் சொல்லி அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றாங்க. எனக்கு வர்ற கோவத்தில பெட்ரோல் விலை ஏறினாலும் பரவாயில்லைன்னு அம்பது லிட்டர் வாங்கி இவங்கள வண்டியோட….’ என்று குலோத்துங்கன் ஆரம்பித்ததை பத்திரிக்கை தர்மம் கருதி அவன் கத்திரி கொண்டே கட் செய்கிறேன். என்ன சொல்லியிருப்பான் என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.

அவன் சொன்னதில் என்ன சார் தப்பு?

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x