Published : 28 Jun 2024 12:18 PM
Last Updated : 28 Jun 2024 12:18 PM

ஜியோவை தொடர்ந்து கட்டண உயர்வை அறிவித்தது ஏர்டெல்: ஜூலை 3 முதல் அமல்!

கோப்புப்படம்

சென்னை: இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களாக உள்ள ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி உள்ளன. உயர்த்தப்பட்ட இந்த புதிய கட்டண முறை வரும் ஜூலை 3-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மக்களவை தேர்தல் முடிந்த கையோடு இந்திய டெலிகாம் நிறுவனங்கள் அதன் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தும் என்ற செய்தி தேர்தலுக்கு முன்னதாகவே சொல்லப்பட்டு வந்தது. இந்த சூழலில் நேற்று (வியாழக்கிழமை) ஜியோ நிறுவனம் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்தது. இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) ஏர்டெல் நிறுவனமும் கட்டண உயர்வு குறித்து அறிவித்துள்ளது.

ஜியோ ரீசார்ஜ் கட்டணம் 12 முதல் 27 சதவீதம் வரை உயர்வு: சுமார் 47 கோடி மொபைல் சப்ஸ்கிரைபர்களுடன் இந்திய டெலிகாம் துறையில் முதலிடத்தில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதன் ரீசார்ஜ் கட்டணத்தை 12 முதல் 27 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு ரீசார்ஜ் கட்டணத்தை ஜியோ உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்படி குறைந்தபட்சம் தினசரி 1ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் 28 நாட்கள் வேலிடிட்டி பேக் கொண்ட கட்டணம் ரூ.209-லிருந்து ரூ.249 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், தினசரி 2ஜிபி டேட்டா கொண்ட பேக் ரூ.349 (28 நாட்கள்) மற்றும் அதற்கும் மேலான தொகை கொண்ட பேக்குகளை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அன்லிமிடெட் 5ஜி நெட்வொர்க் சேவை வழங்கப்படும் என ஜியோ தற்போது அறிவித்துள்ளது.

ஏர்டெல் ரீசார்ஜ் கட்டணம் 10 முதல் 21 சதவீதம் வரை உயர்வு: பார்தி ஏர்டெல் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அந்நிறுவனத்தின் அடிப்படை ரீசார்ஜ் பேக் ஆன 1ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் 28 நாட்கள் வேலிடிட்டி பேக் கட்டணம் ரூ.179-லிருந்து ரூ.199 என உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் 28 நாட்கள் வேலிடிட்டி பேக்குக்கான கட்டணம் ரூ.265-லிருந்து ரூ.299 என உயர்த்தியுள்ளது. இது ப்ரீபெய்டு பயனர்களுக்கான ரீசார்ஜ் கட்டண உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. போஸ்ட்பெயிட் பிளான் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.

மொபைல் போன் சேவைகளுக்கான 10-வது அலைக்கற்றை ஏலம் அண்மையில் நிறைவடைந்த நிலையில் ரீசார்ஜ் கட்டணத்தை ஜியோ மற்றும் ஏர்டெல் உயர்த்தியுள்ளன. வரும் நாட்களில் வோடபோன் ஐடியா நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x