Published : 27 Jun 2024 05:39 AM
Last Updated : 27 Jun 2024 05:39 AM

வெளிநாடுகளில் வேலை செய்து சம்பாதித்து ரூ.9 லட்சம் கோடியை தாய்நாட்டுக்கு அனுப்பி உலகளவில் இந்தியர்கள் முதலிடம்

புதுடெல்லி: வெளிநாடுகளில் வேலை செய்து தாய்நாட்டுக்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். அவர்கள் 107 பில்லியன் டாலர்களை அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.9 லட்சம்கோடியை தத்தமது குடும்பங்களுக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளனர்.

வெளிநாடுகளில் கடினமாக உழைத்து சேர்த்து வைத்த பணத்தை இந்தியாவில் உள்ளதமது குடும்பங்களுக்கு அனுப்புவதில் இந்தியர்கள் எப்போதுமே முன்னிலையில் உள்ளனர். அந்தவகையில், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக இந்தியர்கள் அனுப்பும் பணம் 100 பில்லியன் டாலரை கடந்து சாதனை படைத்துள்ளது. 2023-24 நிதியாண்டில் 107 பில்லியன் டாலரை அவர்கள் தாய்நாட்டுக்கு அதாவது இந்தியாவுக்கு அனுப்பியுள்ளனர்.

இது, இந்தியா ஈர்த்த அந்நிய நேரடி மற்றும் நிதி நிறுவன முதலீடுகளான 54 பில்லியன் டாலரை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு பணம் அனுப்பும் மிகமுக்கிய ஆதாரமாக அமெரிக்கா உள்ளது.

2-வது இடத்தில் மெக்சிகோ: வெளிநாடு வாழ் பணியாளர்கள் அதிக பணம் அனுப்பும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவைத் தொடர்ந்து மெக்சிகோ (67 பில்லியன் டாலர்), சீனா (50 பில்லியன் டாலர்), பிலிப்பைன்ஸ் (40 பில்லியன் டாலர்), எகிப்து (24 பில்லியன் டாலர்) ஆகியவை உள்ளன.

கரோனாவால் பாதிப்பு: ரிசர்வ் வங்கி ஆய்வுப்படி, கரோனா தொற்றுக்குப் பிறகு வளைகுடா பிராந்தியத்தில் இருந்துவரும் பண வரத்து குறைந்துள்ளது. அதேநேரம், இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட மொத்ததொகையில் 23 சதவீதம் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளது. இந்தப் பணம் பெரும்பாலும் குடும்பத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதாகவும், ஒருபகுதி வைப்பு தொகை போன்றபிற சொத்துகளில் முதலீடு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உயர் வருமான நாடுகளில் காணப்படும் பலவீனமான வேலைவாய்ப்பு சந்தை மற்றும் உலகபொருளாதார சுணக்கம் காரணமாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு அனுப்பப்படும் பண வளர்ச்சி விகிதம் 2024-ல் 3.1 சதவீதமாக குறையும் என உலக வங்கி கணித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x