Published : 22 Jun 2024 11:40 PM
Last Updated : 22 Jun 2024 11:40 PM

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் முக்கிய பரிந்துரைகள் என்னென்ன?

புதுடெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்களுடனான பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் புதுடெல்லியில் சனிக்கிழமை (ஜூன் 22) நடைபெற்றது. இதோடு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமும் நடைபெற்றது. அதில் முக்கிய பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

பட்ஜெட்டுக்கு முந்தைய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கோவா, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் முதலமைச்சர்கள், பிஹார், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் துணை முதலமைச்சர்கள், பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதியமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சேர்க்க வேண்டிய அம்சங்கள் குறித்தும் மாநிலங்களின் அமைச்சர்கள், மத்திய நிதியமைச்சருக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

சரியான நேரத்தில் வரிப் பகிர்வு, மானியங்கள் மற்றும் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதற்காக வழங்கப்படும் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை ஆகியவற்றின் மூலம் மாநிலங்களுக்கு மத்திய அரசு ஆதரவளிப்பதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்ட பரிந்துரைகள்: மத்தியில் புதிய அரசு அமைந்த பிறகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 53-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் வழங்கப்பட்ட முக்கிய பரிந்துரைகள்:

  • 2017-18, 2018-19 மற்றும் 2019-20 நிதியாண்டுகளுக்கான சிஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவு 73-ன் கீழ் வழங்கப்பட்ட டிமாண்ட் நோட்டீஸ்களுக்கான வட்டி மற்றும் அபராதங்களை தள்ளுபடி செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்தது.
  • ஜிஎஸ்டி தொடர்பாக மேல்முறையீடு செய்வதற்கு செலுத்த வேண்டிய முன் வைப்புத் தொகையின் அளவைக் குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது
  • ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்வதற்கான மூன்று மாத காலம் அரசால் அறிவிக்கப்படும் தேதியிலிருந்து தொடங்கும் என்ற சிஜிஎஸ்டி சட்டத்தின் விதிகளை திருத்த ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.
  • வரி செலுத்துவோரின் வட்டிச் சுமையைக் குறைக்க, மின்னணு பணப் பேரேட்டில் (ECL) கிடைக்கும் தொகைக்கு, வருமான வரி தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால், சிஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவு 50-ன் கீழ் வட்டி விதிக்க வேண்டாம் என்று ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.
  • பால் கேன்களுக்கு (எஃகு, இரும்பு, அலுமினியம்) 12% ஜிஎஸ்டி வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.
  • சாமானிய மக்களுக்கு ரயில்வே வழங்கும் சில சேவைகளுக்கு விலக்கு அளிக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.
  • விடுதி சேவைகள், மாணவர்கள் மற்றும் பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கு நிவாரணம் வழங்குதல் தொடர்பான சில விலக்குகளை ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.
  • அனைத்து சூரிய சமையல் குக்கர்களுக்கும் 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • பாதுகாப்புப் படைகளுக்கான குறிப்பிட்ட பொருட்களின் இறக்குமதிக்கான ஐஜிஎஸ்டி வரி விலக்கை 2029 ஜூன் 30 வரை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x